29 July 2023

56. இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுக நம்பியைப் போலே!

(56) இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுக நம்பியைப் போலே!





வடுக நம்பி (ஆந்திர பூர்ணா), உடையவர் இராமானுஜரின் மிக நெருங்கிய சீடர்களில் ஒருவர்.

 இவர் சித்திரைத் திங்கள் அஸ்வினி நட்சத்திரத்தன்று மைசூருக்கு அருகில் உள்ள சாலிகிராமம் என்ற சிற்றூரில் பிறந்தவர். 

அபரிமிதமாக நெல் விளையும் பூமி என்பதால், சாலிகிராமம் என்று பெயர்.

 திருவரங்கத்தில் இராமானுஜரின் அபிமான சிஷ்யனான பிறகு குருவுக்கு தொண்டு செய்வதையே தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டவர் அவர். இராமானுஜர் இவரது பாதங்களில் தனது கால்களை நீட்டியபடி தனது இறுதி மூச்சினை விட்ட பெருமை வடுக நம்பிக்கு உண்டு.


பகவத் பக்தியையும் மிஞ்சிய அசைக்க முடியாத பக்தி இவருக்கு தன் ஆச்சாரியரிடம் இருந்தது. இந்த பக்தியை மதுரகவி நிஷ்டை (சரமோபய நிஷ்டை) எனலாம்; அதாவது மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடம் கொண்ட ஆச்சார்ய பக்தி. இவர் முதலியாண்டாரையும் கூரத்தாழ்வாரையும் "இரு கரையர்" - அவர்கள் ஆச்சாரியர் மீதும் இறைவன் மீதும் சமமான நம்பிக்கை வைத்தவர்கள் - என குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது. ஆதியும் அந்தமுமாக ஒருவர் ஒரு ஆச்சாரியர் மீதே பக்தி செலுத்த வேண்டுமே தவிர வேறு யார் மீதும் பக்தி வைத்தல் கூடாது என்பதே இவருடைய கருத்து.


குருவின் மீது பக்தி என்பதைவிட பிரேமை என்றே சொல்லலாம் வடுகநம்பிக்கு. 

திருவரங்கப் பெருமாளுக்கு ரங்கநாதன் என்று பெயர். உற்ஸவருக்கு நம்பெருமாள் என்று பெயர். நம்பெருமாள் நடையழகு என்பது எங்கும் காணக் கிடைக்காத தனியழகு. 

ஒருமுறை இராமானுஜர் அவருடைய கண்ணழகில் மயங்கி “வடுகா! நம்பெருமாளின் கண்களைப் பார். நீண்ட அப்பெரிய கண்கள் உம்மைப் பேதைமை செய்யவில்லையா?'' என்று கேட்டாராம். 

இராமானுஜரைத் தவிர வேறு ஒருவரையும் பார்த்து ரசித்தறியாதவர் வடுக நம்பி. 

''என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே'' என்று பதில் சொல்லி அவரையே பார்த்தபடி வடுகநம்பி நின்றாராம்.


ஒரு முறை திருவெள்ளறைக்கு ராமானுஜரும் அவருடைய சீடர்களும் புறப்பட்டார்கள்.

 ராமானுஜர் தன் தினமும் பூஜை செய்யும் வரதராஜ பெருமாளை வடுக நம்பியிடம் கொடுத்துக் கூடையில் வைக்கச் சொன்னார். 

ஒரு கூடையில் வடுக நம்பி பெருமாளுடன், உடையவர் திருவடிநிலைகளையும் ( பாதுகைகள் ) ஒன்றாகச் சேர்த்து வைத்தார். 

திருவெள்ளறையை அடைந்து ராமானுஜர் “வடுகா! பெருமாளைக் கொண்டு வா!” என்று கூற வடுக நம்பி கூடையைத் திறந்தார். 

முதலில் ராமானுஜருடைய திருவடிநிலைகளை வெளியே எடுத்தார்.

 பிறகு பெருமாளை வெளியே எடுத்தார். 

இதைப் பார்த்த ராமானுஜர் திடுக்கிட்டு “வடுகா! என்னுடைய நிலைகளையும் பெருமாளையும் இப்படி ஒன்றாக வைப்பது தகுமோ?” என்று வருத்தப்பட்டார். 

இதற்கு வடுக நம்பி “அது உங்களுடைய பெருமாள், உங்கள் திருவடிநிலைகள் என்னுடைய பெருமாள்!” என்றார்.

 ஒருமுறை ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அனந்த பத்மநாபனைச் சேவித்தார்.

அங்கே சில காலம் தங்கினார். கோயிலில் சில மாற்றங்களைச் செய்ய முற்பட்டபோது அங்கே இருந்த நம்பூதிரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமாளிடம் முறையிட்டனர். 

பெருமாளும் நம்பூதிரிகள் நமக்குப் பல காலமாகத் தொண்டு புரிகிறார்கள் என்று அவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டார்.

ராமானுஜர் இரவு படுத்துறங்கும்போது இரவோடு இரவாக அவரைக் கருடாழ்வார் திருவனந்தபுரத்திலிருந்து திருக்குறுங்குடியில் ஒரு சிறு கற்பாறையின் மீது கிடத்திவிட, காலை விழித்தெழுந்த ராமானுஜர் இடம் மாறியதைக் கண்டு “வடுகா! வடுகா!” என்று அழைத்தார். 

உடனே திருக்குறுங்குடி பெருமாள் திருக்குறுங்குடி நம்பி, வடுக நம்பியாய் உருவெடுத்துக் கைக்கட்டி வாய் பொதித்து, குனிந்து ”அடியேன்! தாசன்” என்று வடுக நம்பி போலப் பணிவன்புடன் வந்து நின்றார்.

“திருவனந்தபுரம் பெருமாளுக்கு நாம் செய்யும் மாற்றங்கள் பிடிக்கவில்லை போலும்! பெருமாளின் ஆசை அப்படி என்றால் நாம் என்ன செய்ய முடியும்” என்று அங்கே இருக்கும் ஆற்றில் குளித்து முடித்துவிட்டு திருமண்காப்பு தரித்துக்கொண்டார்.

 ”வடுகா ! இங்கே வா!” என்று வடுக நம்பிக்கும் தன் கையால் திருமண்காப்பு சாத்தினார். ( ராமானுஜர் தினமும் தரித்துக்கொண்ட பின் தினமும் அவர் கையால் வடுக நம்பிக்கும் இட்டுவிடுவார்) . ஆனால் வடுக நம்பிபோல வந்திருப்பவர் திருக்குறுங்குடி நம்பி ஆயிற்றே.

ராமானுஜர் குளித்து முடித்தபின் ராமானுஜரின் காவி வஸ்திரங்களை வடுக நம்பி தான் தினமும் துவைத்து ஆறப்போடுவார். வடுக நம்பிபோல வந்த திருக்குறுங்குடி நம்பி அன்று அந்த வேலைகளையும் செய்தார்.

ராமானுஜரும் வடுக நம்பிபோல வந்திருக்கும் திருக்குறுங்குடி நம்பியுடன் கோயிலுக்குப் பெருமாள் சேவிக்கச் சென்றபோது பக்கத்தில் இருந்த வடுக நம்பியைக் காணாமல் இங்கும் அங்கும் தேடியபோது பெருமாள் நெற்றியில் ராமானுஜர் சாத்திய திருமண் காப்பு ஈரமாக இருக்க ராமானுஜர் புரிந்துகொண்டார். அன்று திருக்குறுங்குடி நம்பி ராமானுஜர் சாத்திய திருமண்காப்பினால் ‘அழகிய நம்பி’யாகக் காட்சி அளித்தார்.

அதே சமயம் திருவனந்தபுரத்தில் தன் குருவான ராமானுஜரைக் காணாமல் வடுக நம்பியும் மற்ற சிஷ்யர்களும் பதட்டமாக இருக்க, திருக்குறுங்குடியில் உடையவர் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே நடையாய் நடந்து, நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தார்கள். ராமானுஜர் தான் திருக்குறுங்குடி பெருமாளுக்கே ஆசாரியன் அதனால் திருக்குறுங்குடி நம்பிக்கு ’ஸ்ரீ வைஷ்ணவ நம்பி’ என்ற பெயரும் வந்தது.

இவ்வளவு பெருமை வாய்ந்த வடுக நம்பி ஒருமுறை இராமானுஜர் திருமாளிகையில் அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். 

அப்போது நம்பெருமாளின் திருவீதி புறப்பாடு சென்று கொண்டிருந்தது. 

ராமானுஜர் “வடுகா விரைந்து வாரும். நம்பெருமாள் புறப்பாடு போய்க் கொண்டிருக்கிறது. நம்பெருமாளை காணக் கண்கோடி வேண்டும். விரைந்து வாரும்!” என்றார். 

குருவிற்கு சிச்ருக்ஷை செய்வதில் முனைப்புடன் இருந்த வடுக நம்பி, "அங்கு வந்து உம்பெருமாளை பார்த்துக் கொண்டிருந்தால், இங்கு நம்பெருமாளுக்கு யார் பால் காய்ச்சுவார்களாம்?" என்று கேட்டாராம். 

வடுக நம்பியை பொறுத்தவரையில் ஆச்சாரியன்தான் அவருக்கு நம்பெருமாள். இதைவிட ஆச்சார்ய பக்திக்கு உதாரணம் சொல்ல முடியுமா?

"அந்த வடுகநம்பியைப் போல ஆச்சார்ய பக்தி மேலிட பெருமாளையே துறந்தேனா? இல்லையே. பின் எனக்கு இந்தத் திருக்கோளூரில் இருக்க என்ன தகுதி உள்ளது?" என்று கூறி அந்தப்பெண் கிளம்பினாள்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே





திருவாய்மொழி -இரண்டாம் பத்து

 2- 1 வாயும் திரை - பிரிவாற்றாமைக்கு வருந்துதல்


வாயும் திரை உகளும்* கானல் மட நாராய்,* ஆயும், அமர் உலகும்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,* நோயும் பயலைமையும்* மீது ஊர எம்மேபோல்,* நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?. 1 3009 கோள் பட்ட சிந்தையையாய்க்* கூர்வாய அன்றிலே,* சேண் பட்ட யாமங்கள்* சேராது இரங்குதியால்,* ஆள் பட்ட எம்மேபோல்,* நீயும் அரவு அணையான்,* தாள் பட்ட தண் துழாய்த்* தாமம் காமுற்றாயே. 2

3010













57 திருப்புட்குழி

ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ விஜயராகவாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment