55) இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே!
இந்திரபிரஸ்தம் உருவாக்கப்பட்டு, யுதிஷ்டிரன் மன்னனாக முடிசூட்டப்பட்டான்.
விழாவில் கலந்துகொண்ட துரியோதனன், அரண்மனையை சுற்றிப் பார்க்கும் போது நீரில் விழுந்து விட, அதைக் கண்ட திரௌபதி சிரித்து விட்டாள். அச்செயல், ஏற்கனவே பொறாமையில் எரிந்து கொண்டிருந்த துரியோதனனின் கோபத்திற்கு வழி வகுத்தது.
சகுனியின் துணை கொண்டு, திட்டம் தீட்டி, பாண்டவர்களையும் திரௌபதியையும் அஸ்தினாபுரம் வரவழைத்தான் துரியோதனன்.
சகுனியுடன் யுதிஷ்டிரன் சூதாடினான்.
நாட்டை இழந்தான்.
அரண்மனையை இழந்தான்.
செல்வங்களை இழந்தான்.
தன் தம்பிகளை இழந்தான்.
தன்னை இழந்தான்.
இறுதியில், “திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து விளையாடு யுதிஷ்டிரா! இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்” என்று சவால் விட்டான் துரியோதனன்.
சகுனியின் சூழ்ச்சியின் தொடர் வெற்றிகளின் விளைவாக திரௌபதியையும் இழந்தான்.
பாஞ்சால கன்னிகை, இந்திரப்ரஸ்தத்தின் மகாராணி... நொடியில் பணிப்பெண் ஆனாள். மாதவிலக்கு காலத்தில் இருந்த அவள், துரியோதனன் ஆணையை ஏற்று வந்த துச்சாதனனை தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினாள், கோபித்தாள், மிரட்டினாள்.
எதுவும் எடுபடவில்லை. துச்சாதனன் திரௌபதியின் கூந்தலை பிடித்திழுத்து சபைக்கு வந்தான்.
சான்றோர்கள் நிறைந்த சபையில் தர்மம் தலைகுனிந்து நிற்க, அனைவரின் முன்னிலையிலும் துச்சாதனன் துகிலுரிக்க முன் வந்தான்.
தந்தைக்கு நிகரான தந்தையின் நண்பன் துரோணர் உதவிக்கு வரவில்லை.
தர்மத்தின் திருஉருவம் பீஷ்மர் உதவிக்கு வரவில்லை.
மன்னன் என மகுடம் சூடி அமர்ந்திருக்கும் மன்னனும் வரவில்லை.
பாரதவர்ஷத்தின் மாவீரர்களான பாண்டவர்கள் கூட உதவவில்லை.
வாதங்கள் வீணாய்ப்போக, உறவையும், மனிதனையும் நம்பி நின்றால் தான் காப்பாற்றப்பட போவதில்லை என்பதை உணர்ந்தபோது வசிஷ்ட முனிவரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
'ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே அனைவருக்கும் அடைக்கலம் தருபவன். அவனை சரணடைவோர் கைவிடப்படார்' என்பதை நினைவில் நிறுத்தி, தன் பயத்தையும் கர்வத்தையும் விடுத்து, தலை மீது இருகரம் கூப்பி “கோவிந்தா!” என்று வேண்டினாள்.
சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –
ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43 –
அதாவது, "கைகளில் சங்குசக்ர கதையை ஏந்தி கமலக்கண்களை கொண்டு துவாரகையில் நிலைத்திருக்கும் அச்சுதா, உன்னிடம் சரணடைகிறேன் எனை காப்பாயாக!" என்கிறாள் திரௌபதி.
பொது இடத்தில் தன்மானத்தின் இயல்புக்கு மாறாக தன் வஸ்திரத்தை விடுவது ஒரு பெண்ணுக்கு அசாத்தியமான காரியம். அந்த அளவில் திரௌபதி கிருஷ்ணன் மீது நம்பிக்கை வைத்திருந்தாள்.
துவாரகையில் இருந்தாலும் அழைத்ததும் வந்தான் கோவிந்தன்.
நுனிப்புல் அளவு கூட அவநம்பிக்கையோ ஐய்யமோ இல்லாது வேண்டி நின்றாளே! அவளுக்கு வஸ்திரம் அளித்து துச்சாதனனை களைப்படைய செய்து மானம் காத்தான் கிருஷ்ணன்.
"அப்பேற்பட்ட திரௌபதி போல முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தேனா? இல்லையே. நான் கிளம்புகிறேன்" என்கிறாள் அப்பெண்மணி.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
1- 10 பொருமா நீள் படை
ஈஸ்வரன் செய்யும் உபகாரம்
செம்பொனே திகழும்* திரு மூர்த்தியை,*
உம்பர் வானவர்* ஆதி அம் சோதியை,*
எம் பிரானை* என் சொல்லி மறப்பனோ? 10.9
மறப்பும் ஞானமும்* நான் ஒன்று உணர்ந்திலன்,*
மறக்கும் என்று* செந்தாமரைக் கண்ணொடு,*
மறப்பு அற என் உள்ளே* மன்னினான் தன்னை,*
மறப்பனோ? இனி* யான் என் மணியையே. 10.10
மணியை வானவர் கண்ணனை* தன்னது ஓர்-
அணியை,* தென் குருகூர்ச் சடகோபன்,* சொல்
பணி செய் ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
தணிவிலர் கற்பரேல்,* கல்வி வாயுமே. 10.11
56 .திருப்பரமேஸ்வரவிண்ணகரம்
ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ பரமபதநாதாய நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
No comments:
Post a Comment