10 August 2023

21.காசி நகரமும் கால பைரவர் கோவிலும் ...

காசி நகரமும் கால பைரவர் கோவிலும் 

சிவபெருமானின் திரிசூலத்தால் தாங்கப்படுவதும் எக்காலத்தும் அழியாததுமான நகரம் காசியாகும். காசியில் சிவபெருமான் எப்போதும் நீங்காது வாசம் புரிகிறார். அதனால், இது சிவவாசம் என்றும்  போற்றப்படுகின்றது.

காசியிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானின் தலைமைக் காவலரான பைரவமூர்த்தி அனேக பெயர்களில் எழுந்தருளியுள்ளார். இவற்றின் தலைமையிடம் காலபைரவர்  சந்நதியாகும். இது காசியில் விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.




முந்தைய பதிவுகள் ...

 1. வாரணாசி ......




முந்தைய பதிவில்   படகில் பயணம் செய்து கங்கா படித்துறைகளை கண்டோம். அடுத்து நாங்கள் சென்றது  கால பைரவர்  கோவிலுக்கு ....

21.காசி நகரமும் கால பைரவர் கோவிலும் ...

ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி.  ‘இவருடைய அனுமதியில்லாமல், காசியில் காற்று கூட நுழையாது; காசி மரத்து இலைகள் கூட அசையாது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. 

இவரை வணங்கினால், பஞ்சமா பாதகங்களும் விலகி விடும்; முக்தி கிடைக்கப் பெறலாம். இங்கு இவருக்கு சைவ- அசைவ உணவு ஆகிய இரண்டுமே படைக்கப்படுகின்றன இக்கோயிலானது சிவபெரூமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார்.

 "கால்" (காலம்/காலன்) என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரைக்" கண்டு மரணம் கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது.  அ








இங்குள்ள மூலவர் திருவுருவம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாலின் மிகவும் தேய்ந்து போயுள்ளது. அதன்மீது செந்தூரம் பூசியுள்ளனர். மேலே சரிகைத் துணி போர்த்தப்பட்டு  முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது கறுப்பு, நீல, சிவப்பு மலர்கள் சூட்டப்படுகின்றன. கருவறைக்கு முன்புறம் பெரிய மண்டபம் உள்ளது.

 கருவறையையும் முன் மண்டபத்தையும் சுற்றி மண்டபத்துடன் கூடிய பிரகாரமும், திறந்தவெளிப் பிரகாரமும் உள்ளன. மண்டபத்தில் பலவகையான  ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கோயிலுக்குக் கிழக்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. இந்தப் பைரவருக்கு இனிப்புப் பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

உருண்டையான முகம், பெரிய கண்கள், அடர்ந்த மீசை என கம்பீரமாக இவர் காட்சி தருகிறார்.

அவருக்கு அருகில் அவரது வாகனமான நாய் உள்ளது. கோயிலின் பின் பகுதியில், சேத்ர பால பைரவர் சிலை உள்ளது. கால பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. கோவிலின் உட்புறம் உள்ள சன்னதியில வெள்ளி முகம் கொண்ட இந்த கால பைரவரின் கோயிலைக் கட்டிய காலம் சரியாக தெரியவில்லை ஆனால் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. காலபைரவர் காசியின் காவலராக உள்ளார்.

 உள்ளே நுழைந்து பைரவரை வணங்கியதும் ஆலயத்தில் உள்ள பண்டா மயிற்பீலியால் நம் முதுகில் தட்டுவார். அதனைத் தொடர்ந்து ‘தண்டம்’ வழங்கப்படுகிறது. தண்டம் என்பது ஒரு நீண்ட கோல். அதைப் பக்தர்களின் தலையில் வைத்து ஆசீர்வதிக்கிறார்கள்.

 ஆதிசங்கரர் காசி பைரவர் மீது “கால பைரவாஷ்டகம்.” என்றொரு அற்புதத் துதியை இயற்றியுள்ளார்.





திங்கள், வெள்ளிக் கிழமைகளில் நள்ளிரவு வழிபாடு நடைபெறுகின்றது. இந்தச் சந்நதியில் மந்திரிக்கப்பட்ட காப்புக் கயிறு அன்பர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இவை கறுப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களில்  உள்ளன. இவற்றை அன்பர்கள் கழுத்து, வலது தோள், மணிக்கட்டு முதலிய இடங்களில் கட்டிக் கொள்கின்றனர். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில்  பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளதையும் காண்கிறோம்.




காசிநகரில் உத்தரவாகினியாக ஓடும் கங்கையின் கரைகளில் அறுபத்து  நான்கு நீராடு துறைகள் உள்ளன.  இந்த அறுபத்து நான்கிலும்  பஞ்சாயதன வழிபாட்டை உணர்த்தும் வகையில் சூரியன், அம்பிகை, கணபதி, திருமால், சிவலிங்கம் ஆகிய திருவுருவங்கள் அமைத்து வழிபடப்படுகின்றன.

இப்படி அமைந்த ஒவ்வொரு கட்டத்திலும் வீற்றிருக்கும் சிவபெருமானுக்குச் சிறப்புப் பெயர்கள் அமைந்துள்ளன. இப்படி வீற்றிருக்கும் சிவபெருமானுக்குக் காவலாகவும், இந்தத் துறைகளில் நீராடி  மகிழும் அன்பர்களுக்குக் காவலாகவும் பைரவமூர்த்தி அறுபத்து நான்கு திருவுருவம் தாங்கி எழுந்தருளியுள்ளார்.




 இடத்திற்கு ஏற்ப இவர்களுக்குத் தனியான சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. இது தவிர மோகன பைரவர், ஆனந்த பைரவர், துவார பைரவர், ஞான பைரவர்  முதலான அனேக பைரவர்கள் எழுந்தருளியுள்ள பைரவ ஸ்தானங்களும் உள்ளன.

காசியில் மகாசக்தி பீடமாக விளங்கும் அன்னபூரணி பீடத்தில், பராசக்தி, ‘‘மகா மங்களகௌரி’’ என்னும் பெயரில் எழுந்தருளியிருக்கின்றாள். இவளுக்கு அன்னபூரணி என்ற பெயர் வழங்குகின்றனர்.  இங்கு சக்தி கணமான அறுபத்து நான்கு யோகினிகளும் நீங்காதிருந்து பராசக்திக்குச் சேவை புரிகின்றனர். இவர்கள் அறுபத்து நான்கு பேர்களும் அறுபத்தி நான்கு பைரவர்களுக்குத் தேவியராகத்  திகழ்கின்றனர்.


காசிக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக காலபைரவரைத் தரிசனம் செய்வதுடன் அவருடைய பிரசாதமான காப்புக்கயிறையும் அணிந்து கொள்ள வேண்டும் என்னும் வழக்கமும் உள்ளது. இதனால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்குவதுடன் பயம் விலகும். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் ஏற்படும் மரண வேதனைகளும் துன்பமும் யம பயமும் உண்டாகாது. 

 இவர் பேரில் காலபைரவ அஷ்டகம் பாடப்பட்டுள்ளது. இதனை, தினமும், பாராயணம் செய்து வந்தால் பகைவர்கள் தொல்லையும், இயற்கையில் ஏற்படும் துன்பங்களும் விலகும்;  மனநிம்மதி உண்டாகும்.

காசிக் கண்டம் என்னும் நூலில் பைரவரின் சிறப்புக்களும் அறுபத்து நான்கு பைரவர்களின் பெயர்களும், அவருக்குத் தேவியாக விளங்கும் அறுபத்து நான்கு யோகினிகளின் பெயர்களும் பிற செய்திகளும்  சிறப்புடன் இடம் பெற்றுள்ளன.




மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமி நாளில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. காசி நகரில் பல இடங்களில் பைரவர் எழுந்தருளியிருப்பதால் அவர்கள் அனைவரையும் தேடிக்  கண்டுபிடித்து வணங்குதல் சாத்தியமில்லை என்பதால், எட்டு பைரவர்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர். கார்த்திகை, மார்கழி மாத தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி நாட்களில் இவர்களை  வழிபடுகின்றனர். இதற்கு அஷ்ட பைரவ யாத்திரை என்பது பெயராகும்.

காசி நகரில் இறப்பவரின் கணக்கைச் சித்திர குப்தர் எழுதுவதில்லை. காலபைரவரே எழுதி பலன்களையும் அளிக்கின்றார். இவருடைய சந்நதியில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுபவரையும், கேட்பவரையும் கண்டு யமன் அஞ்சி நிற்கின்றான். காசியே பைரவரின் பிரதானமான க்ஷேத்திரமாகும். இங்கு செய்த வேள்வியில் தோன்றியவரே திருப்பத்தூர் யோக பைரவர் ஆவார். இங்கு கங்கை ஆற்றிலிருந்து  வெளிப்பட்டு ராமதேவ சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதே நாகப்பட்டினம் சட்டநாதர் திருவுருவமாகும். இப்படி எல்லா பைரவர்களும் காசியிலிருந்து வெளிப்பட்டு பல தலங்களில் நிலைபெற்றுள்ளனர்.




கால பைரவர் கோவில் சிறிது கூட்டமாக இருந்தாலும், நல்ல தரிசனம் கிடைத்தது. அங்கும் படம் எடுக்க அனுமதி இல்லை. வெளி பகுதியிலும் கூட்டமாக இருந்ததால் அங்கும் நாங்கள் படம் ஏதும் எடுக்கவில்லை. இங்கிருந்து அடுத்து  எங்கு சென்றோம் அடுத்த பதிவில் ...




முதல் திருமுறை
036 திருவையாறு

பாடல் எண் : 3

கொக்கின் னிறகின் னொடுவன்னி

புக்க சடையார்க் கிடமாகும்

திக்கின் னிசைதே வர்வணங்கும்

அக்கின் னரையா ரதையாறே.

 

கொக்கிறகு என்னும் மலரோடு வன்னிப் பச்சிலைகளும் பொருந்திய சடைமுடியை உடையவர்க்கு உரிய இடம், எண் திசைகளிலும் வாழும் தேவர்களால் வணங்கப் பெறுபவரும், சங்கு மணிகள் கட்டிய இடையினை உடையவருமான அப்பெருமானின் திருவையாறாகும்.




தொடரும் ...


அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼


1 comment:

  1. காசி காலபைரவர் பற்றிய விவரங்கள் நல்லாருக்கு, அனு. எத்தனை பெயர்கள் அவருக்கு! துவார பைரவர், ஆனந்த பைரவர் என்று நம்மூர் பக்கங்களிலும் யோக பைரவர் இரட்டை பைரவர் என்றெல்லாம் இருக்காரே. ஆமாம் தேய்பிறை அஷ்டமிலதான் பைரவ அஷ்டமி. அட! கீதாக்கு கூட இதெல்லாம் தெரியுதேன்னு ஹாஹாஹாஹா அதெல்லாம் என் தங்கை இந்த பைரவர் வேண்டுதலுக்கு திருப்பத்தூர் போனப்ப அவ கூட சுத்தினேனே அதனால. இல்லைனா சுத்தாம் தெரிஞ்சுருக்காது.

    அங்க திருப்பத்தூர் பைரவர் கோயில்ல உள்ள யோகபைரவருக்கும் இந்தக் காசி பைரவருக்கும் கூடப் பொருத்தி சொன்னதை நீங்களும் இங்க சொல்லிருக்கீங்க. திருப்பத்தூர் ஆதிகால பைரவரையும் காசி பைரவரையும் பொருத்தி சொன்னாங்க.

    படங்கள் எல்லாம் அருமை, அனு

    கீதா

    அப்பதான் இந்த அஷ்ட பைரவ வழிபாடு பத்தியும் தெரிஞ்சுகிட்டேன் இப்படி இங்கு தெற்கிலும் அஷ்டபைரவ வழிபாடு சில ஊர்களில் இருக்கு.

    ReplyDelete