(58) நில் என்னப் பெற்றேனோ இடையாற்றூர் நம்பி போலே!
திருவரங்கத்தில் நடக்கும் உற்சவங்களை எண்ண முடியாது அவை வருடம் முழுவதும் உள்ளன.
கோடைத்திருநாள் என்ற பூச்சாற்று உற்சவம், அதற்குப் பிறகு சித்திரா பௌர்ணமி கஜேந்திர மோட்சம்,
விருப்பன் திருநாள் என்ற சித்திரைத் தேர், வசந்த உற்சவம், ராமநவமி,
ஆனி கேட்டையில் வரும் ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவடை,
ஆடி 28ஆம் பெருக்கு, ஸ்ரீஜெயந்தி, உறியடி பவித்தோத்ஸவம் ,
விஜயதசமி, ஊஞ்சல், தீபாவளி,
கைசிக ஏகாதசி, கார்த்திகை, திருநெடுந்தாண்டகம்,
பகல் பத்துத் திருமொழி திருநாள், இராப்பத்து திருவாய்மொழி திருநாள்,
வைகுண்ட ஏகாதசி, கைத்தலச் சேவை, திருமங்கை மன்னன் வேடுபறி,
சங்கராந்தி, கனுபாரிவேட்டை, நம்மாழ்வார் மோட்சம்,
பூபதித் திருநாள் தைத்தேர், தெப்பம்,
தெலுங்கு வருடப் பிறப்பு,
ஆதிபிரம்மோத்ஸவம்,
நாச்சியார் கோடைத் திருநாள், நாச்சியார் வசந்த உற்சவம், நாச்சியார் ஜேஷ்டாபிஷேகம்,
திருப்பாவடை, நவராத்திரி உற்சவம், நாச்சியார் ஊஞ்சல்,
நாச்சியார் திருமொழி, திருவாய்மொழி திருநாள் பிறகு மீண்டும் சித்திரை திருவிழா ஆரம்பம் ஆகும்.....
இந்தத் திருநாளில் ஒவ்வொரு நாளும் பல மண்டபங்களில், விதவித அலங்காரங்களுடன், பல்வேறு வாகனங்களில் புறப்பாடு,
சித்தர வீதி உலா, உத்திர வீதி உலா, கண்ணடி சேவை,
ஆழ்வார் பாசுரங்கள் கோஷ்டியைக் கேட்பது,
அபிஷேகம், பல்வேறு சேர்த்தி சேவை, முத்தங்கி சேவை, மோகினி அலங்காரம் ,
அரையர் சேவை, கொலு அலங்காரம், ஆழ்வார் ஆசாரியர்கள் திருநட்சத்திரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.....
”இவ்வளவு உற்சவங்கள் சேவைக்கும் தவறாமல் செல்வார் இடையாற்றூர் நம்பி!”.
திருவரங்கம் அருகில் இடையாற்றங்குடி என்ற சிறு கிராமத்தில் நம்பி என்பவர் வாழ்ந்து வந்தார்.
திருவரங்க பெருமாள் மீது மிகுந்த காதல் கொண்டவர்.
எல்லாத் திருவிழாவிற்கும் இவர் தவறாமல் செல்வார்.
இவருக்கு உற்சவங்களைச் சேவிப்பது தான் இவருக்கு உணவே.
“நம்பி சாப்பிட வாங்க” என்று யாராவது கூப்பிட்டால் “உற்சவம் ஆரம்பித்துவிட்டதா இதோ வருகிறேன்” என்பார்.
மாடுகள் உணவை உண்ட பிறகு வயிற்றில் இருக்கும் உணவை அசைபோட்டுக் கொண்டிருக்கும். அது போல நம்பி அன்று என்ன உற்சவம் கண்டுகளித்தாரோ அதை இரவு ”இன்று நம்பெருமாள் முத்துமாலை என்ன அழகு, அவர் கையில் சாத்தியிருந்த வளையல், வைர பதக்கம்... வசந்த மண்டபத்துக்கு நடந்து வந்த அழகு ” என்று எல்லாவற்றையும் இன்பமாக அனுபவித்துக்கொண்டு இருப்பார்.
நம்பிக்கு நூறு வயதானது.
அந்த வருடம் பிரம்மோற்சவம் ஆரம்பம் ஆகியது.
நூறாவது வயதில் தள்ளாடிக்கொண்டு இருந்தார் நம்பி. அவரால் எழுந்து கூட நிற்க முடியவில்லை அதனால் உற்சவத்துக்கு அவரால் போகமுடியவில்லை.
நம்பிக்கு உற்சவம் எல்லாம் அத்துப்படி.
இன்று முதல் நாள் உற்சவம் அன்று நம்பெருமாள் அலங்காரம், நடை எல்லாம் அவர் மனதில் ஓடியது. ஆராத அருளமுதம் பொதிந்த கோவில் போக முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.
நம்பெருமாள் உற்சவத்தில் சுற்று முற்றும் பார்த்தார்.
நம்பியைக் காணவில்லை.
எல்லாத் தூண் இடுக்கிலும் நோட்டம் விட்டார் ஆனால் நம்பி இல்லை. நம்பெருமாள் தவித்தான் “நம் நம்பியைக் காணவில்லையே ? ஏன் வரவில்லை” என்றார் வருத்தத்துடன்.
நம்பியைத் தேடினார் நம்பெருமாள் என்ற தகவல் நம்பி காதுக்கு எட்டியது.
இரண்டாம் திருநாள் உற்சவம். அன்றும் நம்பியால் எழுந்துகொள்ள முடியவில்லை. ’அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில்! போக முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். நம்பெருமாள் அன்றும் நம்பியைத் தேடினார்.
மூன்றாம் நாள் ’தோலாத தனிவீரன் தொழுத கோவில்!’ போக முடியவில்லையே என்று வருந்தினார். வழக்கம்போல் நம்பெருமாள் இன்றாவது நம்பி இருக்கிறாரா என்று தேடினார்.
நான்காம் நாள் ‘துணையான வீடணற்குத் துணையாம் கோவில்!’ போக முடியவில்லையே என்று துயரத்தில் ஆழ்ந்தார். இன்றும் நம்பெருமாள் நம்பி வருகிறாரா என்று பார்த்துக்கொண்டு இருந்தார்.
ஐந்தாம் திருநாள் 'சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில்!’ ஆனால் நம்பெருமாளுடன் சேர முடியவில்லையே என்று நம்பியின் மனம் சஞ்சலம் அடைந்தது.
ஆறாம் திருநாள் நம்பெருமாளைப் பார்க்காமல் நம்பியால் இருக்க முடியவில்லை.
திருவரங்கம் 'செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில்!' என்று மெதுவாக எழுந்தார்.
சிரமத்துடன் கையில் ஒரு கோலுடன் தள்ளாடிக்கொண்டு தன் கிராமத்திலிருந்து திருவரங்கம் புறப்பட்டார்.
கோயிலுக்குள் வந்து ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு நின்றார். நம்பெருமாள் அன்றும் நம்பியைத் தேடினார் தூணைப் பிடித்துக்கொண்டு இருந்த நம்பியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
“என்ன நம்பி நலமா ஏன் வரவில்லை தினமும் உன்னைத் தேடினேன்” என்றார்.
பதிலாக, "நீ கொடுத்த இந்த சரீரத்துடன் இத்தனை ஆண்டுகளாக உன்னை தொழுது வந்தேன். இப்போது முதுமை எய்தியதில், இவ்வுடலால் பிரயாணம் மேற்கொள்ள முடியவில்லை பெருமானே!" என்றார்.
இதைக் கேட்ட நம்பெருமாள், இராமானுஜரிடம் "அற்றைவ ஸ்ரீரங்கே சுகமாஸ்வா" - ஸ்ரீரங்கத்திலேயே இரு! - என்று சொல்லியது போல,
"இனிமேல் நீ இங்கேயே நில்!" என்றார்.
பின் நம்பெருமானும் அடுத்த தெருவிற்கு பவனி செல்ல இடையாற்றூர் நம்பிகள் நின்ற இடத்திலேயே இவ்வுலகை துறந்து பரமபதம் அடைந்தார்.
பூலோக வைகுண்டத்தில் பார்த்த இன்புற்ற உற்சவங்களை வைகுண்டத்தில் தொடர்ந்து சேவிக்க ஆரம்பித்தார்.
"அப்படி இடையற்றூர் நம்பிகளைப் போலே நம்பெருமானைத் தொழுது, வேறு எதைப்பற்றியும் சிந்தியாமல், நம்பெருமானே தன்னிடத்தில் நிற்கச் சொல்லி பெற்றேனா? இல்லையே. பிறகு ஏன் நான் இருக்க வேணும்?" என்கிறாள் திருக்கோளூர் பெண்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
2- 1 வாயும் திரை - பிரிவாற்றாமைக்கு வருந்துதல்
ஸ்ரீ கனகவல்லீ ஸமேத ஸ்ரீ வீரராகவாய நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
திருக்கோளூர் பெண் பிள்ளாய் ரகசியம் இடையிடையே வாசிக்கிறேன் அனு.
ReplyDeleteகீதா