28 August 2023

25.திரிவேணி சங்கமம்

வாழ்க வளமுடன் 




முந்தைய பதிவுகள் ...

 1. வாரணாசி ......




25. திரிவேணி சங்கமம் 


காசியிலிருந்து கார்  வழியாக நேராக அலகாபாத் நாட்டுக்  கோட்டை செட்டியார் மடத்திற்கு சென்று விட்டோம். அங்கு காலை உணவிற்கு வருகிறோம் என்று கூறிவிட்டதால், எங்களுக்கான  உணவு காத்திருந்தது. மடத்தின் வழியாகவே  ஆட்டோ பேசிக் கொண்டு திரிவேணி  சங்கமம் சென்றோம். 




திரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமமாகும் இடம் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம். ப்ரயாக் என்றும் அழைக்கப்படுகிறது .ஶ்ரீமஹாலக்‌ஷ்மியின் மூன்று பின்னல்கள் தான் திரிவேணி சங்கமம். இதில் கங்கை, யமுனை ஆறுகள் கலப்பது நன்கு தெரியும். சரஸ்வதி நதி கலப்பது தெரியாது, அதாவது உள்ளுக்குள் கலப்பாக ஐதீகம்.


கங்கா நதி நீர், வெண்மையாகவும், யமுனை நதி நீர், கருணையாகவும், சரஸ்வதி அந்தர்வாகினியாக கண்ணுக்குத் தெரியாமல் கீழே சென்று கலப்பதாக ஐதீகம்.


இத்தகைய திரிவேணி சங்கமத்தில், ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி நீராடிய புண்ணிய பூமி. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளாகவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்கும்பமேளா திருவிழாவும், சிறப்பாக நடைபெறுகிறது.


லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் இங்கே வந்து முன்னோர்களை வணங்கி நீராடுவர். பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்ற ஒரு வழக்கு உண்டு. இவற்றின் முக்கிய நோக்கம்,பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது, பாவம் நீங்கி இறையோடு ஒன்றாவது ஆகும். முண்டம் என்பது முடி எடுத்தல். உடலில் வளரும் கேசங்கள் தாமாகவே அகலக்கூடியவை. அகற்றினாலும், உபத்திரவம் தாராதவை. அவற்றைப் போல் நம் பாவங்கள் களையப்படவேண்டும் என்பதற்காக பிரயாகை ஷேத்திரத்திலே முடி எடுத்து பாவங்களை களைய வேண்டும் என்கிறார்கள்.


பிரயாகையில் முக்கியமானது அட்சயவடம் என்று அழைக்கப்படும் ஆலமரம். இதன் வேர் பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசியிலும், நுனி கயாவிலும், இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்த மூன்று இடங்களிலும் வரிசையாக, பித்ரு காரியங்களை செய்ய வேண்டியது தமது கடமை என்று  நம்புகிறார்கள்.







கரையிலிருந்து படகில் பக்தர்களை அழைத்துச் செல்கின்றார்கள். கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்க வைத்து, அங்குள்ள கயிற்று தடுப்புகளை பிடித்துக் கொண்டு  நம்மை  இறங்கி புனித நீராடும்படி கூறுகிறார்கள். நின்று நீராடும் அளவு நீர்  உள்ளது, ஆனாலும்   கொஞ்சம்   சேறும்  சகதியுமாக இருப்பதால் சிறிது கவனமாகவே இங்கு நீராட வேண்டும். 


போகின்ற வழியில் படகை இலக்காக கொண்டு பல பறவைகள்  அதிக அளவில் பறந்து சுற்றி சுற்றி வருகின்றன. அவைகளுக்கு நாம்  உணவுகளை  வாங்கி தூவலாம் . அந்த உணவுகளையும்  சில படகுகளில் வைத்து விற்கிறார்கள். அவைகள் பறப்பது பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.








இந்த சங்கமத்தில் நீர் மிகவும் குளிச்சியாக இருக்கிறது. அங்கேயே நதிக்கு பூஜை செய்ய ஏதுவாக  பூஜை பொருட்கள், விளக்குகள் விற்கிறார்கள். நம்மை படம் எடுக்க பலரும் காத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல் நாங்களும் பூஜை செய்து, பின் படங்களும் எடுத்துக் கொண்டோம். 


முதல் திருமுறை
036 திருவையாறு

பாடல் எண் : 7


வரமொன் றியமா மலரோன்றன்

சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்

வரைநின் றிழிவார் தருபொன்னி

அரவங் கொடுசே ருமையாறே.

 


வரங்கள் பல பெற்ற தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனின் தலைகளில் ஒன்றை அறுத்த சிவபிரானது இடம், மலையினின்று இழிந்துபெருகி வரும் காவிரி நதி ஆரவாரித்து வரும் திருவையாறு ஆகும்.


தொடரும் ...


அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼




4 comments:

  1. அனு இது சீகல் இல்லையா? கடற்பறவை கடல்காகம்னு சொல்லலாமா ஆனால் அமைப்பு வேறு. நீர்க்காகம் வேறு இல்லையா ஆங்கிலத்தில் cormorant னு சொல்வாங்க இங்க நிறைய இருக்கு

    சீகல் பார்க்கவே அழகு. நான் வியந்து பார்த்துக் கொண்டே இருப்பேன்

    உங்க படத்துல அது சிறகை விரித்து பறக்கும் அழகு வாவ்!!! ரசித்துப் பார்த்தேன். படங்கள் எல்லாம் அழகு.

    விவரங்களும் நல்லாருக்கு அனு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அக்கா ...

      எனக்கும் இப்போ கொஞ்சம் குழப்பம் ஆகிடுச்சு சோ பொதுவா பறவை ன்னு மாற்றிவிட்டேன் ...

      இந்த படங்கள் போடும் பொழுதே நினைத்தேன் உங்களுக்கு பிடிக்கும் என ...

      Delete
  2. நான் இரண்டு மூன்று தடவைகள் நீராடியிருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் வேறு வேறு அனுபவம்.

    நீங்கள் அக்‌ஷயவடம் பார்த்தீர்களா? நான் அக்பர் கோட்டையில் படங்கள் பலவும் எடுத்திருக்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார் ..

      அக்ஷய வடம் பார்க்கவில்லை சார், அக்பர் கோட்டைக்கே செல்லவில்லை ...என்ன வெங்கட் சார் தளத்தில் கண்டு கொண்டேன்.

      பல நாட்களாக எனக்கு bloggerல் கமெண்ட் பதிவு செய்ய முடியவில்லை . இப்பொழுது தான் அதனை சரி செய்து மறுமொழி இடுகிறேன் . என் தளத்திலும் கமெண்ட் இட இயலவில்லை .

      எங்கள் ப்லோக் ல் இப்பொழுது மேல்கோட்டை பயண குறிப்புகளை வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன் . கமெண்ட் செய்ய இயலாததால் ஒன்றும் கூற முடியவில்லை .

      Delete