16 August 2023

22. பிந்து மாதவ பெருமாள் கோவில், வாரணாசி

 பிந்து  மாதவ பெருமாள் கோவில்

பிந்து மாதவ் கோயில், பஞ்சகங்கா காட் என்ற இடத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கோயில். இங்கு உள்ள  நம்பிக்கை என்னவென்றால், விஷ்ணு பகவான் பஞ்சகங்கா காட்டில் நீராடி, இங்கு பிந்து மாதவ் கோயிலை நிறுவினார் என்பது. 


 காசியின் மற்ற புகழ்பெற்ற கோயில்களைப் போலல்லாமல், பிந்து மாதவ் கோயில் எப்போதும் நாராயண பக்தியோடு அமைதியாக  உள்ளது. 


முந்தைய பதிவுகள் ...

 1. வாரணாசி ......




 22.பிந்து  மாதவ பெருமாள் கோவில், வாரணாசி 




‘மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் குறிக்கும். 

இராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் விஷ்ணுபெருமான் , காசியில் பிந்து மாதவராகக் காட்சி தருகிறார். 

இவரது ஆலயம் பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது.  பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர். சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்திக் காட்சி தருகிறார். 

ஆலயத்திற்கு வெளியே விஷ்ணு பாதம் இருக்கின்றது. அதற்கு கங்கை நீரால்   அபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி மக்கள் வழிபடுகின்றனர்.


பஞ்ச கட்டத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து படிகள் மேலே போனால் பிந்து மாதவர் ஆலயத்தை அடையலாம். இங்கே உள்ள மூர்த்தி நாராணயன் சங்கு, சக்கர, கதா பதம சொரூபராகப் பெருமாள் நிற்கிறார்.

மண்டபத்தின் வலது புறம் ஜகஜீவனேசுவர் என்ற சிவலிங்கமும் பூஜைக்கு உரியதாக உள்ளது. 








இந்த கோவில் ஒரு காலத்தில் முக்கிய யாத்திரை மையமாக இருந்தது. 

அசல் கோயில் 1669 ஆம் ஆண்டில் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மற்ற முக்கிய கோயில்களைப் போலவே, மொகுல் மன்னனும் இடிக்கப்பட்ட கோயிலின் தூண்கள் மற்றும் பிற பகுதிகளை  பயன்படுத்தி ஆலம்கிரி மசூதியைக் கட்டினான்.

 பின்னர் 1672 ஆம் ஆண்டில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் இன்றைய கோவிலை புனரமைத்து, கோவிலில் பிந்து மாதவரின் தெய்வத்தை மீண்டும் நிறுவினார். 

1669 ஆம் ஆண்டு முதல் 1672 ஆம் ஆண்டு வரை  கோயில் இடிக்கப்பட்ட பின்னர், இவரை  பாதுகாப்பதற்காக   கங்கை நதியில் நீரில்  மூழ்கடிக்கப்பட்டு இவருக்கு பூஜைகள் செய்யப்பட்டன. 

பின்  19 ஆம் நூற்றாண்டில், மராட்டிய ஆட்சியாளர் பவன் ராவ் கோயிலைப் புதுப்பித்தார்.

இந்த  பிந்து மாதவ் கோவிலை 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நகைகளை வாங்குவதற்காக இந்தியா வந்த ஜீன் பாப்டிஸ் டேவர்னியர் என்பவர் தனது பயண  குறிப்பில் இந்த கோவிலை பற்றி  விவரித்து உள்ளார். அதில்  இங்குள்ள  தெய்வம் 6 அடி உயரம் மற்றும் மாணிக்கங்கள், முத்துக்கள் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது எனவும் கூறி உள்ளார். 






இங்கு பிந்து மாதவ பெருமாள்  கருப்பு பளிங்கு சிலையிலும், விநாயகர்,  சிவபெருமான்  மற்றும் நந்தி உருவங்கள் வெள்ளை பளிங்கு சிலைகளிலும் காட்சி  தருகின்றனர். 

நேபாளத்தில் உள்ள கந்தகி நதியில் இருந்து சாளக்கிராம  கல்லில் செதுக்கப்பட்ட இவர் , உண்மையில் அசல் பிந்து மாதவ் கோவிலில் இருந்து மீட்கப்பட்டது எனவும்.... அசல் கோவில் அழிக்கப்பட்ட உடனேயே, இந்த விஷ்ணு உருவம் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, பல ஆண்டுகளாக கங்கையில் மூழ்கி, கண்ணுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டு , பின் இங்கு நிறுவப்பட்டதாகவும் கூறுகின்றனர்.



கோவிலின் உட்புறம் முழுவதும் மிக பழமையான ஓவியங்களில் அழகு படுத்தப்பட்டுள்ளது. 

விற்பனைக்கு காத்திருக்கும் லட்டு கண்ணன் ...


இது பெருமாள் கோவிலாக இருந்தாலும் முழுவதுமாக சிவ லிங்கங்களால்  நிரம்பியுள்ளது. ஒரு இடத்தில் இரட்டை சிவலிங்கங்கள் அனைவராலும் பூஜை செய்யப்படுகிறது. எப்படியும் 1000 சிவலிங்கங்கள் இங்கு இருக்கும். மற்றவை அனைத்தும் பாதுகாப்பாக கம்பிகளுக்குள் உள்ளன.

கிருஷ்ணன்  கோஷத்துடன் இந்த கோவில் மிக அழகாக  அமைந்துள்ளது.


 கவிஞர்  துளசிதாசர்  இங்கு  அமர்ந்து இந்த பிந்து மாதவ பெருமாளை  புகழ்ந்து பாடியுள்ளார்.

“ஓ பிந்து மாதவ்! நீங்கள் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் மழையைப் பொழியும் மேகம் போன்றவர்கள். வாரணாசி என்னும் அடையாளக் காட்டை, உமது இருப்பின் சிறப்பால் மிகவும் இனிமையான காடாகத் தூய்மைப்படுத்துபவன் நீயே" என்கிறார் 

கவிஞர்  துளசிதாசர் 1623 இல் வாரணாசியில் உள்ள அசி காட்டில் இறந்தார்.





முந்தைய பதிவில் காலபைரவர் கோவில் கண்டு தரிசனம் செய்த பின் இங்கு வரலாம் என முடிவு செய்து அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம். ஆட்டோ எதுவும் அன்று அங்கு பயன்படுத்த முடியாத அளவு கூட்டம் , அதனால் பொறுமையாக நடக்க  ஆரம்பித்தோம் .

கையில் கூகுள் மேப்பை வைத்துக் கொண்டு சந்து சந்தாக சென்றோம். வழியிலும்  விசாரித்துக் கொண்டே சென்ற பொழுதும், பலரிடம் வழி  கேட்டே சென்றோம் .... எப்படியும் 20 பேரிடமாவது கேட்டு இருப்போம். அனைவரும் வழி கூறினார்கள்.....

 வளைந்து நெளிந்து சென்று  குழந்தைகள் விளையாடும் வழி கண்டுபிடிக்கும் போட்டி போலவே இருந்தது, மிகவும் வித்தியாமான அனுபவம், பல குறுகிய சந்துக்களின் வழியாக சென்று  ஒரு வழியாக பிந்து மாதவப் பெருமாளை  கண்டு கொண்டோம்.

அருமையான கோவில் பெருமாள் கண்ணன் கோலத்தில் அழகு ரத்தின கண்ணனாக காட்சி கொடுக்கின்ற இந்த கோவிலில் சிறிது கூட்டம் இருந்தது. இங்கு படம்  எடுக்கவும் அனுமதித்தார்கள். நல்ல தரிசனம் இங்கு. 










முதல் திருமுறை
036 திருவையாறு

பாடல் எண் :4

சிறைகொண் டபுரம் மவைசிந்தக்

கறைகொண் டவர்கா தல்செய்கோயில்

மறைகொண் டநல்வா னவர்தம்மில்

அறையும் மொலிசே ருமையாறே.

 

சிறகுகளோடு கூடிய முப்புரங்களும் அழியச் சினந்தவராகிய சிவபிரான் விரும்பும் கோயில், மக்கள் கண்களுக்குப் புலனாகாது மறைந்து இயங்கும் நல்ல தேவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒலி நிறைந்துள்ள திருவையாறு ஆகும்.



தொடரும் ...


அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼


2 comments:

  1. பிந்து மாதவ பெருமாள் கோயில் - ஓ இப்பதான் பெயரே கேள்விப்படுகிறேன் இப்படி. தகவல்கள் தெரிந்து கொண்டேன். லிங்கவடிவங்கள்தான் நிறைய போல இல்லையா? ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு கோயில் இருக்கும் போல! காசிநகரமே அப்படித்தானே.

    பஞ்ச்காட் காணொளி செம. கங்கை!! அழகு கடல் போல!

    கீதா

    ReplyDelete
  2. கண்ணாமூச்சி ஏனடா கண்ணா!!! ன்னு ரொம்பத் தேட வைத்துவிட்டாரோ. எங்கே இருக்கேன்னு கண்டுபிடிங்க இந்தக் கூட்டத்துலன்னு!!! ஹாஹாஹா எப்படியோ கண்டுபிடிச்சுப் போய்ட்டீங்களே. கூட்டம் தெரிகிறது. பொறுமையா போயிருக்கீங்க!

    கீதா

    ReplyDelete