(66) அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
காஞ்சீபுரத்திலிருந்து திருவரங்கம் வந்த ராமானுஜரை நம்பெருமாளே ‘உடையவரே!’ என்று பெயர் சூட்டி வரவேற்றார். திருவரங்கத்தில் சுவாமி ராமானுஜர் வைணவத்தை எல்லோருக்கும் உபதேசித்துக்கொண்டு இருந்தார். திருவரங்கம் கோயில் நிர்வாகத்தைச் சீர் செய்ய வேண்டும் என்று விரும்பினார் ராமானுஜர்.
திருவரங்கத்தில் ‘பெரிய கோயில் நம்பி’ என்ற பெரியவர் இருந்தார். சாஸ்திரப் புலமை மிக்கவர். இவர் கோயில் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டு இருந்தார். ராமானுஜர் கோயில் நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வந்தபோது அதற்குப் பெரிய கோயில் நம்பி தன் நிர்வாகத்தில் ராமானுஜர் குறுக்கிடுகிறார் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ராமானுஜருக்குப் பெரிய கோயில் நம்பியைத் திருவரங்கத்திலிருந்து வெளியேற்றாவிட்டால் தான் நினைத்தபடி கோயில் நிர்வாகத்தை மாற்ற முடியாது என்று எண்ணினார். ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காகக் காத்திருக்கும்போது, சற்றே கண்ணயர்ந்து விட்டார்.
அப்போது, பெருமாள் ஸ்ரீராமானுஜர் கனவில் வயதான ஸ்ரீ வைஷ்ணவராய் தோன்றி “கோயில் நம்பி நீண்ட காலமாக என்னையே நம்பி இருக்கிறார். அதனால் அவரை நீக்க வேண்டாம்” என்று சொல்ல,
ராமானுஜர் கண் விழித்துக் கூரத்தாழ்வானிடம் “நமக்குப் பல இடையூறுகளைத் தரும் கோயில் நம்பியை வெளியேற்றுவது பெருமாளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது, அதனால் திரும்பவும் காஞ்சிபுரத்துக்கே சென்றுவிடலாம் என்று இருக்கிறேன்” என்றார்.
“பெருமாள் இப்படிச் சொல்லுகிறார் என்றால் நிச்சயம் பெரிய கோயில் நம்பியை மனம் மாறச் செய்துவிடுவார்” என்று கூரத்தாழ்வான் ராமானுஜரைச் சமாதானப்படுத்தினார்.
“அப்படியானால் நம்பியைத் திருத்தும் பணியை நீங்களே மேற்கொள்ளும்” என்று உடையவர் கூரத்தாழ்வானைப் பணித்தார்.
அதற்குப் பின் கூரத்தாழ்வான், பெரிய கோயில் நம்பியிடம் நட்புக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக உடையவரின் அருமை பெருமைகளைச் சொல்லி அவர் மனத்தை மாற்றினார். அதன் பிறகு பெரிய கோயில் நம்பி உடையவர்மீது மிகுந்த பக்தி கொண்டவராக மாறினார்.
ராமானுஜரின் பெருமைகளை அறிந்துகொண்ட நம்பி தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி ராமானுஜரை வேண்டினார்.
“உங்கள் மனம் மாறச் செய்த கூரத்தாழ்வானே உங்களுக்கு உகந்த குரு” என்றார் ராமானுஜர். கூரத்தாழ்வானை தன் குருவாக ஏற்று ராமானுஜருடன் நட்பு பாராட்டினாலும் கோயில் நிர்வாகத்தை நம்பி விட்டுக்கொடுக்கவில்லை.
கோயிலின் சாவிக் கொத்து அவர் கைவசமே இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் ஒரு நாள் நம்பியின் தாயார் பரமபதம் அடைந்தாள்.
வைணவ முறைப்படி ஈமச் சடங்குகளில் பதினொன்றாம் நாள் ஒற்றை பிராமணர் ஒருவர் அமுது உண்ண ஏற்பாடு செய்ய வேண்டும்.
அன்று சாப்பிடுபவருக்கு இடப்படும் உணவு இறந்தவருக்குப் படைக்கும் உணவாகக் கொள்ளப்படுகிறது. அந்தப் பிராமணர் சிறந்து விளங்க வேண்டும். உணவு சாப்பிட்ட பின் அவர் “திருப்தியாக உண்டேன்” என்று சொல்ல வேண்டும். இறந்து போனவருடைய ஆத்மா திருப்தி அடைந்து மோட்சம் போகும் என்பது நம்பிக்கை.
இந்தச் சடங்கில் கலந்துகொள்ளும் பிராமணர் ஊரைவிட்டு சில காலம் தள்ளி இருக்க வேண்டும். தினமும் பல ஆயிரம் காயத்திரி மந்திரங்கள் கூடுதலாகச் சொல்ல வேண்டும். என்று பல கட்டுப்பாடுகள் இருந்ததால், உணவு உண்ண யாரும் எளிதில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
நம்பி அந்தச் சடங்கிற்கு ஒரு பிராமணனைத் தேடினார் ஆனால் எங்குத் தேடியும் அவருக்குக் கிடைக்கவில்லை.
பல கட்டுப்பாடுகளுக்குப் பயந்து யாரும் இந்தப் பணியை ஏற்க முன்வரவில்லை.
நம்பி ராமானுஜரின் மடத்துக்கு வந்து “உங்களிடம் நிறைய வைணவர்கள் இருக்கிறார்களே! ஒரு நல்ல வைணவரை இந்தச் சடங்கிற்கு நியமிக்க வேண்டும்!” என்றார்.
ராமானுஜர் “அதற்கு என்ன செய்கிறேன்” என்று கூரத்தாழ்வானைப் பார்த்தார்.
ஆழ்வான் ராமானுஜர் அருகில் வந்தார்.
“ஆழ்வானே நீர் நம்பி இல்லத்துக்குப் போக வேண்டும்” என்று நியமித்தார்.
ஆழ்வான் உடனே சரி என்றார்.
தன் குருவான ஆழ்வானைக் காட்டிலும் ஒரு நல்ல வைணவன் திருவரங்கத்தில் இல்லை என்பதால் நம்பிக்கு மிகுந்த சந்தோஷம்.
ஆழ்வான் கிளம்பும் முன் ராமானுஜர் ஆழ்வானின் காதுகளில் ஏதோ சொன்னார்.
ஆழ்வானும் “அப்படியே செய்கிறேன்” என்று புறப்பட்டார்.
பதினொன்றாம் நாள் கூரத்தாழ்வான் நம்பியின் இல்லத்தில் உணவு உட்கொண்ட பின் அமுதனார் “திருப்தியாக இருந்ததா ?” என்று கேட்டார்.
ஆழ்வான் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தார்.
அமுதனாருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தார்.
ஏதாவது குறை நேர்ந்ததோ என்று பயந்துகொண்டு “வேறு என்ன வேண்டும் ? அதை உடனே நான் நிறைவேற்றுகிறேன்” என்றார்.
ஆழ்வான் “எனக்குக் கோயில் நிர்வாகமும், அதனுடைய சாவிக்கொத்தும் வேண்டும்!” என்றார்.
அமுதனார் வேறு வழி இல்லாமல் அவற்றை ஆழ்வானுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்.
ராமானுஜர் ஆழ்வான் காதில் இதைத் தான் சொல்லியிருக்க வேண்டும் என்றும் நம்பிக்குத் தெரிந்தது.
ஆழ்வான் காணிக்கையாகக் கேட்டுப் பெற்றதை உடைவாரிடம் சமர்ப்பித்தார். ராமானுஜரும் மிக்க மகிழ்ச்சி அடைந்து கோயில் நடைமுறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
அமுதனாருக்கும் சில பொறுப்புகளைக் கொடுத்தார்.
நாளடைவில் நம்பி ராமானுஜரின் பெருமைகளை முழுவதும் அறிந்து அவர்மீது மிகுந்த பற்று ஏற்பட்டது.
ராமானுஜரின் மேன்மைகளைப் புகழ்ந்து ஆயிரம் பாடல்களை இயற்றினார். இந்த விஷயம் ராமானுஜருக்குத் தெரிந்தது.
“நீர் நம்மைப் புகழ்ந்து பாடியதை எடுத்து வாருங்கள்!” என்றார்.
நம்பி அதை ராமானுஜர் திருவடிகளில் வைத்தார். அவற்றைப் படித்துப் பார்த்த ராமானுஜர் “பெருமாள், ஆழ்வார், ஆசாரியர்களைத் தவிர வேறு யாரையும் புகழக் கூடாது! என்னை அதிகமாகப் புகழ்ந்து இருப்பது தனக்கு உவப்பானதாக இல்லை” என்று அந்த ஓலைகளைக் கிழித்துப் போட்டார்.
நம்பி வருத்தமாக என்ன செய்வது என்று தெரியாமல் தன் குருவான ஆழ்வானிடம் எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார்.
ஆழ்வான் ராமானுஜருக்கு பெருமாள், ஆழ்வார்களிடம், ஆசாரியனிடம் கொண்ட பிரேமைகளை எடுத்துக் கூறினார். ”ராமானுஜரை இவர்களுடன் சம்பந்தப்படுத்தி எழுதினால் அவற்றை ராமானுஜர் நிராகரிக்க முடியாது அல்லவா ?” என்றார்.
நம்பி ஒரு சோலையில் அமர்ந்து எழுத ஆரம்பித்தார்.
அந்தாதி வடிவில் இராமானுசன் என்ற வார்த்தை எல்லாப் பாசுரங்களிலும் வருவது போல அமைத்தார். நம்பி 105 பாசுரங்களை எழுதி முடித்திருந்தார்.
106 பாசுரத்தை எழுதத் தொடங்கிய சமயத்தில் ராமானுஜர் அவர் சீடர்களுடன் அந்தப்பக்கம் வந்தார்.
நம்பி எழுந்து நின்றுகொண்டு மூன்று பாசுரங்களையும் ராமானுஜர் முன் பாடினார். ( அதனால் இன்றும் அந்த மூன்று பாசுரங்களையும் கோயில்களில் இருமுறை பாடுவார்கள்).
நம்பி எழுதிய பாடல்களைப் பாடியத்துப் பார்த்த ராமானுஜர் அவற்றை ஏற்றுக்கொண்டார். நம்பியின் இலக்கிய அறிவையும், வாக்கு வன்மையையும் போற்றி, அவருக்கு ‘அமுதன்’ என்ற பெயரைச் சூட்டினார் ராமானுஜர். அன்று முதல் இவரை “திருவரங்கத்தமுதனார்” என்று எல்லோரும் அழைத்தார்கள்.
சித்திரை மாதம் உற்சவத்தின் பதினோராம் திருநாள் அன்று நம்பெருமாள் “இன்று ராமானுஜர் என்னுடன் வர வேண்டாம்!” என்று அர்ச்சகர் மூலமாகச் சொல்லி அனுப்பினார்.
வீதி புறப்பாட்டின்போது வாத்தியங்களை நிறுத்தச் சொன்னார்.
ராமானுஜ நூற்றந்தாதியைப் பாடுங்கள் என்று அதை நிம்மதியாகக் கேட்டுக்கொண்டு வந்தார்.
“சாமி! நான் அமுதனாரைப் போல ராமானுஜரை அந்தாதியில் புகழ்ந்தேனா ? இல்லையே அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்!” என்றாள்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
67. திருக்காட்கரை
ஸ்ரீ பெருஞ்செல்வநாயகி (வாத்சல்யவல்லி) ஸமேத ஸ்ரீ காட்கரையப்பன் ஸ்வாமிநே நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அன்புடன்
தகவல்கள் அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் அமுதம்.
ReplyDelete