21 February 2024

குலசேகராழ்வார்

 இன்று ஸ்ரீ  குலசேகராழ்வார் அவதார திருநட்சத்திரம் ..... மாசி - புனர்பூசம்

'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய் தோன்றிய 'சேரலர் கோன்' குலசேகராழ்வார்' அவதரித்த நந்நாள். குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்களத்தில் - திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார்.






குலசேகராழ்வார்  வாழி திருநாமம்!

அஞ்சனமாமலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அடைந்து உய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரம்   தன்னில் வாழ வந்தோன் வாழியே
மாசிதனில்  புனர்பூசம் வந்து உதித்தான் வாழியே
அஞ்சலெனக்   குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே
அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே







குலசேகராழ்வார்

பிறந்த காலம் - 9ம் நூற்றாண்டு

பிறந்த இடம்   - திருவஞ்சிக்களம்

பிறந்த மாதம்  - மாசி

திருநட்சத்திரம் - புனர்பூசம்

வேறு பெயர்கள் - கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே

சிறப்பு - ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் - பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்

பிரபந்தங்கள்- முகுந்தமாலா, பெருமாள் திருமொழி

பரமபதம் அடைந்த இடம் -  திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்




குலசேகரர் தம் அரசவையில், தினமும் ஶ்ரீராமாயணம் படிக்கவும்/வியாக்யானம் செய்யச் சொல்லியும் கேட்பார். இதிகாசத்தில் ஶ்ரீ ராமரை எதிர்த்துப் போரிட, 14000 கர தூஷணர்கள் வந்த செய்தி கேட்ட ஆழ்வார், நெஞ்சம் பதைத்துவிட்டார்.

ராமருக்கு உதவ தம் படைகளைத் திரட்டி உடனே புறப்பட வேண்டும் என்று தம் படைத்தளபதிக்கு உத்தரவிட்டார். கதைசொன்னவர்/அமைச்சர்கள் எல்லோரும் அவரிடம் 'இது நடந்து முடிந்த கதையே. பல லட்சம் ஆண்டுகளுக்கே முன்னர் நடந்த இந்தப் போரை ராமர் அநாயாசமாக வென்றுவிட்டார். 'அவருக்கு எந்தத் துன்பமும் இல்லை' என்று சமாதானப் படுத்தினார்கள். பக்தி பாவத்தில் தன்னை மறந்து இராமாயண காலத்துக்கே சென்று விட்டார். அரங்கன் பக்தியில் தம்மை ஒரு 'பேயன்' பித்தன்' உன்மத்தன்' என்று பெருமாள் திருமொழி, மூன்றாம் பத்து முழுவதும் சொல்கிறார்.


ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழிக்கு, சுவாமி ராமாநுஜர் இயற்றிய தனியன்.

இன்னமுதும்  ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே !
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்-பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள், சேரலர்கோன் எங்கள்
குலசேகரன், என்றே கூறு


பச்சைக் கிளியே! உனக்கு இனிமையானதோர் அமிர்தம் உண்ணத் தருகிறேன்; அருகில் வா! தென் திருவரங்கத்தின் மீது, இனிமையான பாசுரங்களைப் பாடவல்ல, கல்யாண குணசாலியான பெருமாள் என்று போற்றப்படும், (விரும்புதற்குரிய வில் போன்ற புருவத்தையுடைய மாதர்கள் மனம் விரும்பும்) சேரர்களின் மன்னர், எங்கள் பிரபந்த குலத் திலகமான குலசேகராழ்வார், என்று இதையே நீ சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.






பெருமாள் திருமொழி

6. ஏர் மலர்ப் பூங்குழல் 
ஆய்ச்சியர்  கண்ணனை  எள்குதல் 


ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்* 
 எனைப் பலர் உள்ள இவ் ஊரில்*  உன்தன்
மார்வு தழுவுதற்கு*  ஆசையின்மை
 அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு*

கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக்* 
 கூசி நடுங்கி யமுனை யாற்றில்* 
வார் மணற் குன்றிற் புலர நின்றேன்*  
வாசுதேவா உன் வரவு பார்த்தே (2)

698 

          

  6. 2

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி*  
கீழை அகத்துத் தயிர் கடையக்
கண்டு*  ஒல்லை நானும் கடைவன் என்று*
  கள்ள-விழியை விழித்துப் புக்கு*

வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ*
  வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப*
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்* 
 தாமோதரா மெய் அறிவன் நானே   

699

          

  6 .3

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் 
கடைக்கணித்து*  ஆங்கே ஒருத்திதன்பால்
மருவி மனம் வைத்து*  மற்றொருத்திக்கு 
உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து*

புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப் 
புணர்தி*  அவளுக்கும் மெய்யன் அல்லை*
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே* 
 வளர்கின்றதால் உன்தன் மாயை தானே.

700

          

  6. 4

தாய்-முலைப் பாலில் அமுதிருக்கத்*  
தவழ்ந்து தளர் நடையிட்டுச் சென்று*
பேய்-முலை வாய்வைத்து நஞ்சை உண்டு*  
பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்*

ஆய்மிகு காதலோடு யான் இருப்ப*  
யான் விட வந்த என் தூதியோடே* 
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்* 
 அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே.

701

          

  6.5

மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு*  
வீங்கு இருள் வாய் என்தன் வீதியூடே* 
பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப்* 
 போகின்ற போது நான் கண்டு நின்றேன்*

கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்* 
 கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்*
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்?*  
இன்னம் அங்கே நட நம்பி நீயே.  

702

          

  6.6

மற் பொரு தோள் உடை வாசுதேவா*  
வல்வினையேன் துயில் கொண்டவாறே*
இற்றை இரவிடை ஏமத்து என்னை* 
 இன்னணை மேல் இட்டு அகன்று நீ போய்*

அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்*  
அரிவையரோடும் அணைந்து வந்தாய்* 
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?* 
 எம்பெருமான் நீ எழுந்தருளே

703

          

  6.7

பையரவின் அணைப் பள்ளியினாய்* 
 பண்டையோம் அல்லோம் நாம்*  நீ உகக்கும் 
மையரி ஒண் கண்ணினாரும் அல்லோம்*  
வைகி எம் சேரி வரவு ஒழி நீ*

செய்ய உடையும் திருமுகமும்*  
செங்கனிவாயும் குழலும் கண்டு* 
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்*  
புள்ளுவம் பேசாதே போகு நம்பீ

704 

          

  6.8

என்னை வருக எனக் குறித்திட்டு*  
இனமலர் முல்லையின் பந்தர்-நீழல்* 
மன்னி அவளைப் புணரப் புக்கு*  
மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்* 

பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப்*  
பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும்*
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள்*  
வருதியேல் என் சினம் தீர்வன் நானே    

705  

          

  6.9

மங்கல நல் வனமாலை மார்வில் 
இலங்க*  மயில்-தழைப் பீலி சூடி*
பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி*  
பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து*

கொங்கு நறுங் குழலார்களோடு*
  குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்*
எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத*  
உன் குழலின் இசை போதராதே?

706

          

  6.10

அல்லி மலர்த் திருமங்கை கேள்வன் 
தன்னை நயந்து*  இள ஆய்ச்சிமார்கள்* 
எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி* 
 எள்கி உரைத்த உரையதனைக்*

கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்* 
 குலசேகரன் இன்னிசையில் மேவிச்* 
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்*  
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. (2)



 


ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச்செய்த நாள் பாசுரம்
(உபதேசரத்தினமாலை)


மாசிப் புனர்பூசங் காண்மினின்று மன்னுலகீர்
தேசித் திவசத்துக் கேதென்னில் - பேசுகின்றேன்
கொல்லி நகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள்












முந்தைய பதிவுகள்...
 


ஸ்ரீ குலசேகராழ்வார்  திருவடிகளே சரணம்....




அன்புடன்
அனுபிரேம் 💖💖💖



1 comment:

  1. மன்னார்கோவில் போய் சேவித்திருக்கிறீர்களா? நான் சில பல முறை சென்றுள்ளேன். அங்கு குலசேகராழ்வார் ஆராதித்த ராமர் சிலை உள்ளது. அது பற்றி முடிந்தபோது படங்களுடன் எழுதுகிறேன்.

    ReplyDelete