62. "அத்வைதம் வென்றேனோ எம்பெருமானைப் போலே"
வேத வேதாந்தங்களின் பொருள்களை விளக்குவதற்கு மூன்று சம்பிரதாய வாசகங்கள் உருவாகின - அத்வைதம், விசிஷ்டத்வைதம் அதோடு துவைதம்.
இதில் அத்வைதம் பரமாத்மா ஒன்றே சத்தியம் மற்ற அனைத்தும் அசத்தியம் என்கிறது. நமது அனுபவங்களை வைத்து ஜீவாத்மம் வேறொன்றாக தெரிந்தாலும், பரமாத்மாவை விட வேறானது அல்ல. இதுவே பிரபல உபநிஷதத்தில் உள்ள "தத் த்வம் அசி" க்கு ஆதிசங்கரர் தரும் விளக்கம்.
துவைதம், பரமாத்மாவும் ஜீவாத்மாவும் எப்போதுமே வேறு வேறானது தனித்தனியானது என்கிறது.
வேதாந்தத்தில் ஒருவர் அத்வைதத்தை ஆதரிக்கும் வகையில் கூற்றுகளையும் (அபேத ஸ்ருதி) துவைதத்தை ஆதரிக்கும் வகையில் கூறுகளையும் (பேத ஸ்ருதி) காணலாம்.
இராமானுஜர், ஆளவந்தார் மற்றும் பூர்வாச்சாரியர்களின் போதனைகளின்படியும் ஆளாவார்கள் சொற்களின் படியும் பேத அபேத ஸ்ருதிகளைக் கொண்டு விசிஷ்டத்வைதத்தை நிறுவினார்.
இந்த சம்பிரதாயத்தின் அடிப்படையாக பரமாத்மா மற்றும் ஜீவாத்மவுக்கும் இடையே உள்ள 'சரீராத்மா பவ' - அதாவது, ப்ரம்மம் அனைத்து ஜீவன்களுக்கும் அந்தர்யாமியாக செயல்படுகிறது, "யஸ்ய ஆத்மா சரீரம்".
ஆழ்வார்கள் இதனை " உடல் மிசை உயிர் எனக் கறந்து எங்கும் பரந்துளன்" என்று நிறுவுகிறார்கள். வேதங்களும் அதையே பறைசாற்றுகின்றன, "அந்தர்பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்திதே".
ப்ரம்ம சூத்திரத்தின் வர்ணனையான ஸ்ரீ பாஷ்யத்தில், இராமானுஜர் அத்வைதத்தில் உள்ள மாய வாதத்தை கண்டனம் செய்கிறார். இதை ததீ பஞ்சகம், "மயாவாதி புஜங்க பாங்க கருடா" என கொண்டாடுகையில் இராமானுஜ நூற்றந்தாதியில் அமுதனாரும், "உயிர்கள் மேயவிட்டு ஆதிபரணனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வள்ளல் எல்லாம் வாதில் வென்றான்" என்கிறார்.
ராமானுஜருக்கு இன்னொரு பெயர் ‘எம்பெருமானார் ’.
ஒரு நாள் திருவரங்கத்தில் ராமானுஜர் வழக்கம் போலத் திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷை(மாதுகரம்) எடுக்கக் கிளம்பினார்.
அப்போது அவர் எதிரே சில வண்டிகள் மூட்டைகளுடன் வருவதைக் கண்டார். அதில் ஒருவர் அமர்ந்து இருந்தார். அவர் பெயர் யக்ஞ மூர்த்தி. அத்வைதச் சன்னியாசி. மிகப் பெரிய அறிஞர், வேதம், உபநிஷத்தில் பண்டிதர். அத்வைதத் தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவர். காசி போன்ற வட தேசங்களுக்குச் சென்று பலரை வாதப் போரில் வென்றவர். அவருடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது.
ராமானுஜரை பார்த்தவுடன் வண்டியிலிருந்து கீழே இறங்கினார் “நீர் தான் ராமானுஜரா ?” என்றார்.
ராமானுஜர் பணிவுடன் “ஆம் அடியேன் ராமானுஜன்” என்றார்.
”திருவரங்கத்தில் உமக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இங்கே வந்தேன். உம்மை வாதத்தில் வென்று அத்வைதமே சிறந்த தத்துவம் என்று நிலை நாட்டப் பல வண்டிகளில் நான் எழுதிய நூல்களுடன் வந்திருக்கிறேன். இந்த மூட்டைகளில் எல்லாம் நான் எழுதிய ஓலைச்சுவடிகள். எப்போது வாதத்தை வைத்துக்கொள்ளலாம்? ” என்றார். பல வண்டிகளில் கட்டுக் கட்டாக ஓலைச்சுவடி மூட்டைகளும், யக்ஞ மூர்த்தியின் சீடர் கோஷ்டியும் திருவரங்க தெருவை அடைத்துக்கொண்டு இருந்தது.
ராமானுஜர் “அரங்கன் விருப்பம் அப்படி என்றால் சரி” என்றார்.
யக்ஞ மூர்த்தி ராமானுஜரை விடவில்லை “நான் வாதத்தில் தோல்வியடைந்தால் உமது பாதுகைகளை என் தலை மீது சுமக்கிறேன். என் பெயருடன் உமது பெயரைச் சேர்த்துக்கொள்கிறேன். இவை மட்டும் இல்லை நீர் போதிக்கின்ற வைணவத்தை ஏற்கிறேன்!. நான் ஜெயித்துவிட்டால் ? நீர் என்ன செய்யப் போகிறீர்?” என்றார்
ராமானுஜர் “ ஆழ்வார்கள் தொடங்கி, நாதமுனிகள், ஆளவந்தார் போதித்த வைணவம் என்றும் தப்பாகாது! திருகச்சிநம்பிகள் மூலம் அருளிய ஆறு வார்த்தைகளில் ஒன்று ’வேறுபாடே உண்மை’ என்பதாகும். அப்படி இருக்க நான் தோற்றால் அது எனது பலவீனத்தையே குறிக்கும்! தோல்வியை ஒப்புக்கொண்டு இனி வைணவத்தை யாருக்கும் போதிக்க மாட்டேன். வைணவம் சம்பந்தமாக எதையும் எழுதவும் மாட்டேன்!” என்றார்.
யக்ஞ மூர்த்தி “சரி! வாதத்துக்குத் தயாராக வாரும்!” என்று சிரித்துக்கொண்டு வண்டியில் ஏறிப் புறப்பட்டார்.
வண்டிகளும், சீடர்களும் சென்ற திருவரங்கம் வீதி முழுவதும் புழுதியில் நிரம்பியது.
ராமானுஜர் “ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து...” என்ற திருப்பாவையைப் பாடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
திருவரங்கம் தாயார் சந்நிதியின் எதிரில் கருத்துரை மண்டபத்தில் ராமானுஜர், யக்ஞ மூர்த்தி கோஷ்டிகள் எதிர் எதிரே அமர்ந்தார்கள்.
வாதம் தொடங்கியது.
யக்ஞ மூர்த்தி வேதம், உபநிஷதம் எல்லாம் நன்கு கற்றவர் அதனால் வாதம் போர் போன்று காட்சி அளித்தது. வெற்றி தோல்வி இல்லாமல் பதினாறு நாட்கள் நடந்தது.
நாட்கள் போகப் போக யக்ஞ மூர்த்தியின் வாதம் வலுப்பெற்றது.
பதினேழாவது நாள் யக்ஞ மூர்த்தியின் வாதம் வலுப்பெற்று ராமானுஜர் பதில் கூற முடியாமல் இருந்தார்.
யஞ்ன மூர்த்தி வெற்றி பெற்றதாகவே எண்ணி “என்ன ராமானுஜரே! நாளைக்குச் சந்திக்கலாம்! வெற்றி விழாவை ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
ராமானுஜர் வாடிய முகத்துடன் மடத்துக்கு வந்தார்.
ஆழ்வார் காலம் தொடங்கி ஆளவந்தார் காலம் வரை இணையற்று விளங்கிய வைணவத்துக்கு தன்னால் இழுக்கு நேர்ந்தது விடுமோ என்று கலங்கினார்.
அவர் நித்தியம் பூஜிக்கும் பேரருளாளன் விக்ரகத்தை சேவித்துவிட்டு “பல சோதனைகளிலிருந்து என்னை விடுவித்தாய். ஆனால் இன்றோ பெரிய சோதனை ஒன்றைக் கொடுத்துவிட்டாய்!” என்று வெறுத்த மனத்துடன் பெருமாளுக்கு அமுது படைத்துவிட்டு, தான் எதுவும் உண்ணாமல் உறங்க சென்றார்.
இரவு கனவில் காஞ்சி வரதராஜ பெருமாள் “இந்த தர்க்கத்தால் உமக்கு ஒரு நல்ல சிஷ்யனைத் தந்தோம். ஆளவந்தார் செய்த கிரந்தங்களை மறந்தீரோ ?” என்று கூறினார்.
ராமானுஜர் சட்டென்று எழுந்தார்.
அவர் மனதில் தெளிவு பிறந்தது. எப்போது பொழுது விடியும் என்று காத்துக்கொண்டு இருந்தார்.
காலை நீராடிவிட்டு பேரருளாளனைச் சேவித்துவிட்டு ஆளவந்தாரையும் அவருடைய ஸ்லோகங்களையும் மனதில் தியானித்துக்கொண்டு சிங்கம் போல நடந்து சென்றார்.
யக்ஞ மூர்த்தி ராமானுஜரைப் பார்த்தார்.
அவர் முகத்தில் கம்பீரம் தெரிந்தது.
அந்தக் கம்பீரத்தில் ஆணவம் தெரியாமல், ஞானம் ஒளிர்ந்தது.
ராமானுஜருடன் பெருமாளும் எதிரே இருக்கும் திருவரங்க தாயாரும் துணை இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார்.
உடனே ”நான் தோற்றேன்!” என்று ராமானுஜர் கால்களில் விழுந்தார் யக்ஞ மூர்த்தி.
இந்த திடீர் திருப்பத்தைக் கண்ட ராமானுஜரும் கூடியிருந்த சீடர்களும் வியந்தார்கள்.
ராமானுஜர் “தர்க்கம் வேண்டாமா ?” என்றார்.
யக்ஞ மூர்த்தி “எம்மை மன்னிக்க வேண்டும். பெருமாளும், திருவரங்க ரங்க நாச்சியாரும் உம்ம பக்கம் இருக்கும் போது உங்களிடம் பேசக் கூட எனக்கு அருகதை இல்லை!” என்றார்
யக்ஞ மூர்த்தியைத் தழுவிக்கொண்டு அவரை தாயார் சந்நிதி, பெருமாள் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார்.
பெருமாளைச் சேவித்துவிட்டு அவரை தன் மடத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே ராமானுஜர் தினமும் பூஜிக்கும் பேரருளாளனைக் காண்பித்து “இந்தப் பேரருளாளன் அருள் தான் உம்மை என் பக்கம் சேர்த்தார்!” என்று கூறி யக்ஞ மூர்த்திக்கு “அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்ற பெயரைச் சூட்டிய போது ஆவர் பேரருளாளன் முன் விழுந்து சேவித்தார். ( பேரருளாளன் - அருளாளப் பெருமாள் அதையும் ராமானுஜரின் பெயரான எம்பெருமானார் இரண்டையும் சேர்த்து வைத்தார்)
ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களான அனந்தாழ்வான் எச்சான் போன்றவர்களை அவருக்குச் சிஷ்யராக்கினார். பிறகு ”வாரீர் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரே ! என்று அழைத்து இனி நான் தினமும் திருவாராதனம்(பூஜை) செய்யும் பேரருளாளப் பெருமானுக்கு நீரே திருவாராதனம் செய்ய வேண்டும்!” என்றார்.
“சாமி! இப்படி அத்வைத வாதத்தை முறியடிக்கும் அளவிற்கு எனக்கு பெருமாள் அருளும், அறிவு இல்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
63. திருக்கடல்மல்லை
ஸ்ரீ நிலமங்கைநாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸ்தல சயனத்துறைவான் ஸ்வாமிநே நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
No comments:
Post a Comment