05 September 2023

2. கண்ணா.... கருமை நிறக் கண்ணா..

ஜெய்  ஸ்ரீ  கிருஷ்ணா...





கோவர்த்தன விழா


வருடந்தோறும் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஆயர்கள் இந்திரனுக்கு விழாக்கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.

 இந்திரன் தேவர்களுக்கு அரசன். ஆகமங்களுக்குத் தலைவன். அதனால் மேகங்கள் நல்ல மழையை பெய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டுவதற்காக அந்த விழா கொண்டாடப்பட்டது.

 அந்த வருடமும் விழா கொண்டாடப்படுவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றன. 

ஆயர்குலத் தலைவர் நந்தகோபர் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். இந்திரன் தானே மூவுலகங்களுக்கும் இறைவன் என்று எண்ணிக் கர்வம் அடைந்தான். 

மும்மூர்த்திகளை வழிபட மறந்தான். அவனது கர்வத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் அவனுக்கு நல்ல அறிவு புகட்ட முனைந்தார்.


விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த தந்தையிடம் சென்றார். “தந்தையே இந்திரனுக்காக இந்த விழாவைக் கொண்டாட வேண்டாம்” என்று கூறினார்.

 நந்தகோபர் வியப்படைந்தார்.

 ஏன் அப்படிச் சொல்கிறாய் கிருஷ்ணா?.. என்று கேட்டார். “தந்தையே இந்திரனுக்கு மேலானவர்களே மும்மூர்த்திகள். அவர்களே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களைச் செய்து உலகங்களையும் உயிர்களையும் வாழ வைக்கிறார்கள். 

அவர்கள் இல்லாத இடமேயில்லை. 

இதோ இந்தக் கோவர்த்தன மலையினுள்ளும் அவர்கள் இருந்து நம்மையெல்லாம் வாழவைக்கிறார்கள். 

மேலும் ஆயர்களான நமது வாழ்க்கையில் கோவர்த்தன மலை முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 

அதுவே நமக்குச் சுத்தமான தண்ணீரைத் தருகின்றது. நமது பசுக்கள் உண்பதற்குப் பசுமையான புல்லைத் தருகின்றது. ஆதலால் நாம் இந்தக் கோவர்த்தன மலைக்கே பூஜை செய்து விழா எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணர் கூறினார். 

கிருஷ்ணர் சொல்லுக்கு மறுப்பு ஏது? நந்தகோபர் சம்மதித்தார்.

 மறுநாள் காலை கோவர்த்தன மலைக்கே பூஜைகள் செய்து விழாக் கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி கட்டளையிட்டார்.







மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்தார்கள். 

கோவர்த்தன மலையைச் சுத்தம் செய்தார்கள். வாழை மரங்களை நட்டார்கள். மாவிலைத் தோரணங்களைக் கட்டினார்கள். பல வண்ணக்கோலங்களை இட்டார்கள். நெய் விளக்குகளை ஏற்றி வைத்தார்கள். 

கோவர்த்தன மலை சொர்க்கலோகம் போல் அழகுடன் விளங்கியது. 

மறுநாட்காலை கோவர்த்தன விழா தொடங்கியது.

பிருந்தாவனத்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் புது ஆடைகள் அணிந்து அந்த மலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.


பெண்கள் புது அரிசி கொண்டு பொங்கல் சமைத்தார்கள். காய் கறிகள் பழங்கள் கொண்டு விருந்து படைத்தார்கள். ஆண்கள் தமது பசுக்களை வரிசையாக நிற்க வைத்துக் குளிப்பாட்டி அலங்கரித்து நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்துப் பூஜை செய்தார்கள்.

 அந்தணர்கள் மலை அடிவாரத்தில் யாகசாலைகளை ஏற்படுத்தி அவற்றிலே நெய் ஊற்றி நெருப்பு வளர்த்து அகில், சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களை அந்த நெருப்பிலே இட்டு மந்திரங்கள் ஓதி யாகம் செய்தார்கள்.

 சமைக்கப்பட்ட பொங்கல் மற்றும் சுவையான உணவுப் பொருட்களை மக்கள் அந்த மலையின் அடிவாரத்திலே குவித்தார்கள். அந்த உணவுக்குவியல் மற்றொரு சிறிய மலை போன்று தோற்றமளித்தது.


நந்தகோபர் கிருஷ்ணரை அழைத்தார். 

மகனே கிருஷ்ணா... நீ சொன்னபடியே உணவுப்பொருட்களை மலையாகக் குவித்துவிட்டோம். இப்போது நமது கோவர்த்தன மலையில் வாழும் தெய்வம் நாம் படைத்த உணவுப் பொருட்களை ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டார். 

கிருஷ்ணர் புன்னகைத்தார்.

 நிச்சயமாக ஏற்றுக் கொள்ளும் என்று பதில் கூறினார்.

 இவ்வாறு கூறிய பின்னர் கிருஷ்ணர் தாமே அந்த மலையின் தெய்வமாக உருவெடுத்தார். 

மலையின் உச்சியிலே அழகிய பிரமாண்டமான உருவத்துடன் தோன்றினார். அந்த உணவு மலை முழுவதையும் ஒரு நொடிப்பொழுதில் உண்டு முடித்தார். 

அங்கு சூழ்ந்து நின்று வணங்கிய ஆயர்குல மக்கள் அனைவருக்கும் அருள் வழங்கி மறைந்தார்.

 தங்கள் காணிக்கையைக் கோவர்த்தன மலைத் தெய்வமே நேரில் வந்து ஏற்றுக் கொண்டதைக்கண்டு மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து ஆடிப்பாடினார்கள். 

அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக உணவருந்திய பின்னர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள். 


பிருந்தாவன மக்கள் இவ்வாறு மகிழ்ச்சியில் திளைத்திருக்க இந்திரலோகத்தில் இந்திரன் கடும் கோபத்துடன் இருந்தான்.

 தன்னை அலட்சியம் செய்து ஆயர்குல மக்கள் ஒரு மலைக்குப் பூஜை செய்ததைக்கண்ட அவனது மனம் ஆத்திரத்தில் துடித்தது. ஆயர்குலத்து மக்களையும் அவர்களுக்கு ஆலோசனை கூறிய கிருஷ்ணரையும் பழிவாங்க நினைத்தான். 

கடும் கோபம் அவனது புத்தியை மறைத்து விட்டது. பகவான் கிருஷ்ணர், மகாவிஸ்ணுவின் அவதாரமே என்பதையும் மறந்தான்.


தேவர்களின் அரசனான இந்திரன், நீருக்கு தேவனான வர்ணதேவனை அழைத்து தனது மேகங்களை திரட்டி கடும் மழையைப் பொழிந்து பிருந்தாவனத்தை அழித்து விடும்படி கட்டளையிட்டான். 

இந்திரன் மேலும் வாயுதேவனை அழைத்தான். கடும் சூறாவளிக்காற்றாக வீசி பிருந்தாவனத்து மக்களின் வீடுவாசல்களையும் மரங்களையும் அழிக்கும்படி கட்டளையிட்டான். 

பிருந்தாவனத்தில் பெரும்புயல் உண்டாகியது. 

கடும்மழை பெய்தது. 

சூறாவளிக்காற்று சுழன்று அடித்தது. 

வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 

மரங்களும் குடிசைகளும் கடும் காற்றில் சரிந்து வீழ்ந்தன. 

ஆயர்குலத்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒதுங்குவதற்கு இடமின்றி அங்குமிங்கும் ஓடினார்கள். பசுக்களும் வளர்ப்புப்பிராணிகளும் பரிதாபமாக அலறின. எங்களைக் காப்பதற்கு யாரும் இல்லையா என்ற மக்கள் ஓலமிட்டு அழுதார்கள்.


அனைவரும் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தார்கள்.

 கிருஷ்ணர் புன்னகையுடன் அவர்களைத் தேற்றினார்.

 என் அருமைத் தந்தையே! தாயே! ஆயர்குலத்து மக்களே! நீங்கள் யாரும் கலங்க வேண்டாம். இது இந்திரன் நடத்தும் விபரீத விளையாட்டு. ஆனால் நமது பூஜையை ஏற்றுக்கொண்ட கோவர்த்தன மலை இப்போதும் நம்மைக் காக்கும். 

வாருங்கள்..... 

உங்கள் பசுக்களையும் மற்றும் வளர்ப்புப் பிராணிகளையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். எல்லோரும் கோவர்த்தன மலைக்கே போவோம் என்று கூறினார். 

கிருஷ்ணர் முன்னே நடக்க நந்தகோபர் யசோதை மற்றும் ஆயர்குலத்து மக்கள் அனைவரும் அவரைப்பின் தொடர்ந்து நடந்தார்கள்.

 பசுக்களும் ஆடுகள் கோழிகள் நாய்கள் பூனைகள் முதலிய வளர்ப்புப்பிராணிகளும் அவர்களுடன் நடந்து சென்றன.

 அந்தக்கூட்டத்தின் முன்னே நடந்து கோவர்த்தன மலையை அடைந்த கிருஷ்ணர் ஒரு கணங்கூடத் தாமதிக்காமல் அந்த மலையைத் தம் இரு கைகளாலும் தூக்கினார்.


ஒரு குழந்தை தனது பொம்மையைத் தூக்குவது போல் அவ்வளவு எளிதாக கிருஷ்ணர் அந்தப் பெரிய மலையைத் தூக்கினார்.

 தலைக்கு மேலே அதை உயர்த்திய கிருஷ்ணர் தமது இடது கரத்தின் சிறுவிரல் நுனியில் அந்தப் பெரிய மலையை நிலையாக நிறுத்திக் கொண்டார். 

பின்னர் தம் மக்களை அன்புடன் அழைத்தார். 

பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் தமது வளர்ப்புப் பிராணிகளுடன் அந்த மலையின் கீழே அமர்ந்தார்கள்.

 ஆயிரக்கணக்கான அந்த மக்கள் கூட்டத்திற்கு கோவர்த்தன மலை ஒரு குடை போன்று விளங்கியது. 

வெளியே கடும் மழை பெய்தது. காற்று ஓ என்று வீசியது. ஆனால் பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் எவ்வித கஷ்டமும் இன்றி பகவான் கிருஷ்ணரின் பாதுகாப்பில் மலைக்குடையின் நிழலில் ஆனந்தமாக இருந்தார்கள்.

 இவ்வாறு ஏழுநாட்கள் மழை தொடர்ந்து பெய்தது. ..........











கோவர்த்தனச்  சோற்றையுண்டது  பற்றிய பாசுரங்கள் 


கேட்டு அறியாதன கேட்கின்றேன்*  கேசவா! 
கோவலர் இந்திரற்குக்* 
காட்டிய சோறும் கறியும் தயிரும்* 
 கலந்து உடன் உண்டாய் போலும்*

ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு*
  ஒருபோதும் எனக்கு அரிது* 
வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா!*  உன்னை 
அஞ்சுவன் இன்று தொட்டும்* 8

251



அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்*
  தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்- 
பொட்டத் துற்றி*  மாரிப் பகை புணர்த்த*  
பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை* 

வட்டத் தடங்கண் மட மான் கன்றினை* 
 வலைவாய்ப் பற்றிக் கொண்டு*  குறமகளிர்- 
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்* 
 கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)

264





அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று* 
 அமைத்த சோறு அது எல்லாம்
 உண்டு* கோநிரை மேய்த்து அவை காத்தவன்* 
 உகந்து இனிது உறை கோயில்*

கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்* 
 குல மயில் நடம் ஆட* 
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்* 
 வண்புருடோத்தமமே.     3

1260







ஸ்ரீ குருவாயூரப்பன்






தொடரும் ....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖


2 comments:

  1. கண்ணன் கதைகள் அருமை. குன்றம் ஏந்தி குளிமழை காத்தவன் புகழ் பாடுவோம்.

    ReplyDelete
  2. கதைகள் சிறப்பு, அனு.

    கீதா

    ReplyDelete