10 September 2020

கோபாலா ...கோவிந்தா ....

 

கோபாலா ...கோவிந்தா ....




கிருஷ்ணர் தலையில் மயில் இறகு கிரீடம் எப்படி வந்தது.....

சின்னக் கண்ணனின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவன் தலையில் சூடியிருக்கும் மயில் இறகு. பட்டு பீதாம்பரங்களாலும், எண்ணற்ற ஆபரணங்களாலும் கிருஷ்ண பகவான் அலங்கரிக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் மணிமகுடமாக விளங்குவது, இந்த மயிலிறகு தான். 


பட்டு பீதாம்பரம் தரித்து ஏகபோக செல்வாக்குடன் தரணியை ஆள வேண்டிய கிருஷ்ணன், ஆயர்பாடி சிறுவர்களுடன் மண்ணில் புரண்டு விளையாடுவான். பூவின் வாசத்தை மறைக்க முடியாதது போல, குட்டிக் கிருஷ்ணன் முகத்தில் ஒளி வீசிய தெய்வீக அழகு, அனைவரையும் கொள்ளைக் கொண்டது.


கோகுலவாசிகளின் செல்லப் பிள்ளையான அவன், அம்மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரு மதியுக மன்னனாகவே விளங்கினான். 

கண்ணனின் மேல் காதலும் பற்றும் கொண்ட ஆயர்பாடி சிறுவர்கள், தங்கள் மனதுக்கு நெருக்கமான கண்ணனை கௌரவிக்க விரும்பி, அங்கே சுற்றித்திரிந்த மயிலை பிடித்து, அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். 

அன்று முதல் கிருஷ்ணனின் தலைமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது.

இன்னும் சொல்லப் போனால், மயிலிறகு கிருஷ்ணனின் அடையாளமாகவே மாறிவிட்டது.






இன்று கண்ணன் வந்தால், எப்படியும் பிடித்துவிட வேண்டும்!’ என்று எண்ணினாள் கோபிகை ஒருத்தி.பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை வைத்திருக்கும் உறியில் ஒரு மணியைக் கட்டினாள். 

‘யாராவது வந்து கை வைத்தால், இந்த மணி ஒலிக்கும். இதிலிருந்து அவன் தப்ப முடியாது!’ என்று தனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். 

பொறி, புலன்களை வென்றவர்க்கே சுலபத்தில் அகப்படாத ஸ்வாமி, இந்தப் பொறியிலா அகப்படுவார்!

கண்ணன், கோஷ்டியுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தான். 

உறியைப் பார்த்தான். 

கை எட்டாத உயரத்தில் உறி! 

அங்கிருந்த பலகைகளை எடுத்து அடுக்கினர். 

அந்தப் பலகைகளின் மேல் ஒருவன் ஏறி நிற்க, அவன் தோள் மேல் அடுத்தவன் ஏற, ஏணி ஒன்று உருவானது. உறியை நெருங்கிய கண்ணனின் கண்களில், மணி தென்பட்டது.

விஷயம் புரிந்தது. 

கண்ணன், ‘பளிச்’சென்று மணியின் நாக்கை ஒரு கையால் பிடித்தான். 

மணி மௌனமானது. 

மறு கையால் பானையின் கீழ்ப்பகுதியை உடைத்தான். 

அருவி போல் பாலும் தயிரும் கொட்டின. அள்ளி அள்ளி அனைவரும் குடித்தனர். உறிஞ்சிக் குடிக்கும் அந்த ஓசை கூட வெளியில் கேட்கவில்லை.

வெளியே தன் வேலையை முடித்து விட்டு, ‘யப்பாடா... மணி சத்தம் கேட்கவில்லை!’ என்ற எண்ணத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தாள் கோபிகை. 

அங்கு ஒரு கும்பல் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைக் காலி செய்து கொண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தாள். மணி அடிக்காதது எதனால் என்று புரிந்தது.

அதற்குள் நண்பர்களின் தோளில் இருந்த கண்ணன் ‘தொப்’பென்று கீழே குதித்தான். 

தன் வாயிலிருந்த பாலை, அப்படியே கோபிகையின் முகத்தில் உமிழ்ந்தான். 

முகத்தைத் துடைத்துவிட்டுப் பார்த்தபோது கண்ணனும் அவன் நண்பர்களும் அங்கு இல்லை. தான் கட்டிய மணியைப் பரிதாபமாகப் பார்த்தாள் கோபி.

இங்கு சாமர்த்தியமாகத் தப்பிய கண்ணன் அடுத்த இடத்தில் அகப்படப் போகிறான். என்ன சொல்லி அங்கே சமாளிக்கிறான் என்று பார்ப்போம்!

கண்ணன் அந்த வீட்டில் வெகு ஜாக்கிரதையாக நுழைந்தான். உடன் வந்தவர்களும் ஓசை எழுப்பாமல் அவனைப் பின்தொடர்ந்தனர். கதவு முழுவதுமாகத் திறந்து இருந்ததால், எல்லோரும் ஒன்றாகப் போய் வழக்கப்படி உறியை நெருங்கினர்.

‘வீட்டில் யாரும் இல்லை’ என்பது அவர்களது எண்ணம். 

ஆனால், இவர்களது வருகையை எதிர்பார்த்து, கதவைத் திறந்து வைத்துவிட்டு அதன் பின்னால் ஒளிந்திருந்து இவர்களது செயல்களைக் கவனித்தாள் அந்த வீட்டு கோபிகை. 

‘உறியில் கை வைக் கட்டும். தப்ப முடியாதபடி பிடித்து விடுவது!’ என்று அவள் தீர்மானித்தாள்.

இங்கும் உறி, உயரத்திலேயே இருந்தது. முன்பு போலவே, பலகைகளை அடுக்கி அதன் மேல் ஏறிய கோபாலச் சிறுவர்கள் ஒருவர் தோளில் மற்றொருவர் ஏறி நிற்க... வழக்கம்போல் ஏறி உறியைப் பிடித்தான் கண்ணன்.

‘இதுதான் நல்ல சந்தர்ப்பம். இல்லாவிட்டால், தப்பித்து விடுவார்கள்’- என்றெண்ணிய கோபிகை, கண்ணனையும் அவன் குழுவினரையும் நெருங்கினாள்.

‘‘கண்ணா! வந்து விட்டாள்!’’ எனக் கூச்சலிட்ட கோபாலச் சிறுவர்கள் அப்படியே வெளியேறி ஓடிவிட்டனர். அவர்கள் தோள் மீது ஏறி, உறியைப் பிடித்த கண்ணன், அப்படியே தொங்கினான்.

‘வசமாக அகப்பட்டு விட்டான். இவன் கீழே இறங்க முடியாது!’ என்று சந்தோஷத்துடன் கண்ணனை நெருங்கி, தன் இடுப்பில் கை வைத்தபடி நிமிர்ந்து பார்த்து, ‘‘யாரடா நீ?’’ என்று மிரட்டல் குரலில் கேட்டாள்.

‘இதைத் தெரிந்து கொள்ளத்தான் வேதங்களும் உபநிடதங்களும் சாஸ்திரங்களும் என்னை ஆராய்கின்றன. இதை இவ்வளவு சுலபமாகக் கேட்கிறாளே இவள்!’ என்று நினைத்த கண்ணன் சொன்னான்: ‘‘பலராமன் தம்பி!’’

‘‘எனது வீட்டுக்குள் ஏன் வந்தாய்?’’

‘‘எங்கள் வீடு என்று நினைத்து விட்டேன்!’’

‘‘நல்ல பதில்தான். சரி, உறியில் உள்ள வெண்ணெய்ப் பாத்திரத்தில் உனக்கு என்ன வேலை?’’

‘‘அம்மா... சொன்னால் நம்பமாட்டீர்கள். எங்களது கன்றுக்குட்டியைக் காணோம். தேடிக் கண்டுபிடிக்கச் சொன்னாள் என் தாயார். எல்லா இடங்களிலும் தேடி விட்டேன். காணோம். ஒருவேளை இந்த உறியில் இருக்குமோ என்னவோ? இங்கும் தேடிப் பார்க்கலாம் என்று ஏறினேன்!’’

‘‘இறங்கு!’’ என்றாள் கோபிகை.

‘‘இறக்கி விடேன்!’’ - கண்ணன்.

‘‘இதற்கு மட்டும் என் உதவி வேண்டுமா?’’

‘‘ஆமாம்!’’

‘எல்லோரையும் உயர்ந்த நிலைக்கு ஏற்றி விடுவது எனது வேலை. உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்த நிலைக்கு இறக்கி விடுவது மனிதர்களது வேலை’ என்று நினைத்தானோ கண்ணன்?

எது எப்படியோ, நாம் பள்ளத்தில் விழுந்து விடாமல், நம்மைக் கைதூக்கி உயர்த்த வேண்டும் என்று மாயக்கண்ணனிடமே வேண்டுவோம்.

(படித்ததில் பிடித்தது  )





பெரியாழ்வார் திருமொழி

இரண்டாம்பத்து

ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி

வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்




வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை 

வெற்பிடையிட்டு அதனோசை கேட்கும் *

கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக் 

காக்ககில்லோம் உன் மகனைக் காவாய் *

புண்ணில் புளிப்பெய்தாலொக்கும் தீமை 

புரை புரையால் இவை செய்யவல்ல *

அண்ணற் கண்ணானோர் மகனைப்பெற்ற 

அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய். (2)

1 202




வருக வருக வருக இங்கே 

வாமன நம்பீ! வருக இங்கே *

கரியகுழல் செய்யவாய் முகத்துக் 

காகுத்த நம்பீ! வருக இங்கே * 

அரியனிவன் எனக்கு இன்றுநங்காய்! 

அஞ்சனவண்ணா! அசலகத்தார் *

பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் 

பாவியேனுக்கு இங்கே போதராயே. 

2 203



திருவுடைப் பிள்ளைதான் தீயவாறு 

தேக்கமொன்றுமிலன் தேசுடையன் *

உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் 

உறிஞ்சியுடைத்திட்டுப் போந்து நின்றான் *

அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது 

தான் வழக்கோ? அசோதாய்! * 

வருகவென்று உன்மகன் தன்னைக்கூவாய் 

வாழவொட்டான் மதுசூதனனே. 

3 204








கொண்டல்வண்ணா! இங்கே போதராயே 

கோயிற்பிள்ளாய்! இங்கே போதராயே *

தெண்திரை சூழ்திருப்பேர்க் கிடந்த 

திருநாரணா! இங்கே போதராயே *

உண்டு வந்தேன் அம்மமென்றுசொல்லி 

ஓடிஅகம்புக ஆய்ச்சி தானும் *

கண்டெதிரே சென்றெடுத்துக் கொள்ளக் 

கண்ணபிரான் கற்றகல்வி தானே. 

4 205


பாலைக்கறந்து அடுப்பேற வைத்துப் 

பல்வளையாள் என்மகளிருப்ப *

மேலையகத்தே நெருப்பு வேண்டிச்சென்று 

இறைப்பொழுது அங்கேபேசி நின்றேன் *

சாளக்கிராமமுடைய நம்பி 

சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் *

ஆலைக் கரும்பின் மொழியனைய 

அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய். 

5 206


போதர் கண்டாய் இங்கேபோதர் கண்டாய் 

போதரேனென்னாதே போதர்கண்டாய் *

ஏதேனும் சொல்லி அசலகத்தார் 

ஏதேனும் பேசநான் கேட்கமட்டேன் *

கோது கலமுடைக் குட்டனேயோ! 

குன்றெடுத்தாய் குடமாடுகூத்தா! *

வேதப்பொருளே! என்வேங்கடவா! 

வித்தகனே! இங்கேபோதராயே. 

6 207










செந்நெலரிசி சிறுபருப்புச் 

செய்த அக்காரம் நறுநெய் பாலால் *

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் 

பண்டும் இப்பிள்ளை பரிசறிவன் *

இன்னமுகப்பன் நானென்று சொல்லி 

எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான் *

உன்மகன் தன்னை யசோதை நங்காய் 

கூவிக்கொள்ளாய் இவையும் சிலவே. 

7 208



கேசவனே! இங்கே போதராயே 

கில்லேனென்னாது இங்கே போதராயே *

நேசமிலாதாரகத்திருந்து 

நீ விளையாடாதே போதராயே *

தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் 

தொண்டரும் நின்றவிடத்தில் நின்று *

தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் 

தாமோதரா! இங்கே போதராயே. 

8 209



கன்னலில் அட்டுவத்தோடு சீடை 

காரெள்ளின்  உண்டை கலத்திலிட்டு *

என்னகமென்று நான் வைத்துப் போந்தேன் 

இவன்புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் *

பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப் 

பிறங்கொளி வெண்ணெயும்  சோதிக்கின்றான் *

உன்மகன் தன்னை யசோதைநங்காய்! 

கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே. 

9 210


சொல்லிலரசிப்படுதி நங்காய். 

சூழலுடையன் உன்பிள்ளை தானே *

இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக் 

கையில் வளையைக்  கழற்றிக் கொண்டு *

கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற 

அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து *

நல்லன நாவற் பழங்கள் கொண்டு 

நானல்லேனென்று சிரிக்கின்றானே. 

10 211



வண்டு களித்திரைக்கும் பொழில்சூழ் 

வருபுனல் காவிரித் தென்னரங்கன் *

பண்டவன் செய்த கிரீடையெல்லாம் 

பட்டர் பிரான் விட்டுசித்தன் பாடல் *

கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் 

கோவிந்தன்தன் அடியார்களாகி *

எண்திசைக்கும் விளக்காகி நிற்பார் 

இணையடி என்தலை மேலனவே. (2) 

11 212







ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்....

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 

4 comments:

  1. இன்றைய கிருஷ்ணர் படங்கள் மிக மிக அழகு (கிருஷ்ணனை வயதானவராக திருமணமானவராகக் காட்டும் அந்த ஒற்றை தஞ்சாவூர் பாணி ஓவியத்தைத் தவிர). அப்புறம் நான் நினைத்துக்கொண்டேன், உண்மையாகவே கண்ணன் இப்படி இருந்திருந்து இப்போ நம் எதிரே வந்தால் நாம் அவரை recognize பண்ணிப் பணிந்தெழுவோமா என்று...

    பெரியாழ்வார் திருமொழி மிகப் பொருத்தம். எங்களுக்கு நேற்று இரவு ஸ்ரீஜெயந்தி.

    ReplyDelete
  2. அத்தனை படங்களும் அழகு.

    தகவல்களும் நன்று.

    ஸ்ரீஜெயந்தி கொண்டாடுபவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    கிருஷ்ணர் படங்கள் அத்தனையும் அழகு. ஒவ்வொன்றும் அபரிமிதமான அழகில் ஜொலிக்கிறது. படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது. கண்ணனின் குறும்புகள் எத்தனை தடவை ரசித்தாலும் அலுக்காதது. பதிவை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. பதிவும் படங்களும் மிக அருமை.
    படித்ததில் பிடித்தது அருமை.
    பெரியாழ்வாரின் திருமொழி பகிர்வு நல்ல தேர்வு.

    ReplyDelete