26 September 2020

ஸ்ரீ ஆதி வராகப்பெருமாள் திருக்கோவில் , புத்தூர் - திருச்சி

 திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ளது இந்த திருக்கோவில்.















சாலையை விட்டு உள்ளடங்கி ஊரின் நடுநாயகமாக விளங்குகிறது இந்த அழகிய ஆலயம். சுற்றிலும் திருமதிற் சுவர்கள். 

முகப்பில் ராஜகோபுரம். 

உள்ளே நுழைந்ததும் விசாலமான அழகிய சிறப்பு மண்டபம்.

கருடகம்பம் என அழைக்கப்படும் நெடி துயர்ந்த ஸ்தூபி, பலி பீடம், கொடிமரம், இவற்றைக் கடந்ததும், கருடாழ்வார் சன்னிதி உள்ளது.


கருவறையில் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். கருவறை வாசலில் ஜெயன், விஜயன் என துவாரபாலகர்களின் சுதை வடிவங்கள் உள்ளன.















கருடாழ்வார் இறைவனின் கருவறையை நோக்கி பார்த்துக் கொண்டிருக்க, ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

அடுத்தது மகாமண்டபம். 

இந்த மண்டபத்தின் மேல்புறம் ஸ்ரீ  ஆண்டாள்  நின்ற நிலையில் சேவை சாதிக்கிறார்.

 வடக்கு புறம் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனி ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.

அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் வடதிசையில் காலிங்கநர்த்தன கண்ணனின் திருமேனி இருக்கிறது. 




கருடாழ்வார் 
ஸ்ரீ ஆண்டாள் 



பெருமாளுக்கு நான்கு கரங்கள். 

வலது மேல் கரத்தில் சக்கரத்தையும், இடது மேல் கரத்தில் சங்கையும் தாங்கியிருக்கிறது. 

வலது கீழ் கரம் இறைவி பூமா தேவியின் பாதத்தை பிடித்துக் கொண்டிருக்க, இடது கீழ் கரம் மடியில் அமர்ந்திருக்கும் பூதேவியை அணைத்துக் கொண்டிருக்கிறது.


பெருமாளின் திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம். இவர் கிழக்கு திசை நோக்கி சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாளுக்கு உற்சவ மூர்த்தி கிடையாது.

 கருவறை ஆராதனை மட்டுமே மூலவருக்கு நடைபெறுகிறது. மற்றைய அனைத்தும் உற்சவ மூர்த்தியான ராமபிரானுக்கே நடைபெறுகிறது.


ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணன், அனுமன் ஆகியோர், பெருமாள் இருக்கும் கருவறையில் இருந்தபடியே பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.


சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. 


ஆதியில் புற்று வடிவில் எழுந்தருளிய பெருமாளுக்கு, அதன் பிறகே வடிவம் கொடுத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். தினசரி காலை, உச்சி, சாயரட்சை என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.




ராமபிரான் :


சித்திரை மாதம் உத்திராட்டதி நட்சத்திரத்தன்று காவேரி நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். அன்று இரவு ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் வீதி உலா வருவார்கள்.




சித்திரை மாதம் ராம நவமி அன்று ராமபிரான்  வீதி உலா வருவதுண்டு. அதே மாதம் பவுர்ணமி அன்று கஜேந்திர மோட்ச விழாவும், அன்று காலை 6 மணிக்கு ராமபிரான் சீதையுடன் பவனி வரும் நிகழ்வும் நடைபெறும்.

சித்திரை மாதப்பிறப்பன்று மூலவருக்கும், உற்சவமூர்த்தியான ராமபிரானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. அனைத்து உற்சவங்களும் இங்கு ராமபிரானுக்கே நடைபெறுவதால், ராமபிரானுக்கு மாதந்தோறும் திருவிழா நடைபெற்றபடியே இருக்கிறது.

நவராத்திரி 10 நாட்களும் ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட சேவை நடைபெறுவதுடன், ராமர் வீதியுலா வருவார்.

கார்த்திகை மாதம் ஊஞ்சல் சேவையுடன் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை மாத கைசிக துவாதசி அன்று கருடகம்பத்திற்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறும்.

ஆலயப் பிரகாரத்தின் தென்புறம் சக்கரத்தாழ்வார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். 

ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி உள்ளது. 

ஆஞ்சநேயர் 


இந்த வருட உற்சவ காட்சிகள் ...




















கண்ணன் வெண்ணை பானை  உடன் ..கிருஷ்ண ஜெயந்தி அன்று 



உறியடி உற்சவ சேவை ..









அம்மா  வீட்டின்  அருகில் உள்ள ஆலயம் , சிறுவயதிலிருந்து அடிக்கடி செல்லும் திருக்கோவில், மனதிற்கு அமைதியும் நிறைவும் தரும் அற்புத ஆலயம் . இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி உற்சவமும் நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது .

திருக்கோவில் படங்களும், உற்சவ படங்களும் முக நூல் மற்றும் whatsup  வழி  கிடைத்தவை ...பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் .







பெரிய திருமொழி
பத்தாம் பத்து
ஐந்தாம் திருமொழி - பூங்கோதை
கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு – 2

கண்ணனை கைகொட்டிவிளையாடும்படி கூறுதல்


பூங்கோதையாய்ச்சி கடைவெண்ணெய்புக்குண்ண *
ஆங்கவள் ஆர்த்துப்புடைக்கப் புடையுண்டு *
ஏங்கியிருந்து சிணுங்கிவிளையாடும் *
ஓங்கோதவண்ணனே! சப்பாணி ஒளிமணிவண்ணனே! சப்பாணி. (2)

1 1888



தாயர்மனங்கள்தடிப்பத் தயிர்நெய்யுண் 
டேஎம்பிராக்கள் * இருநிலத்துஎங்கள்தம் *
ஆயரழக அடிகள் * அரவிந்த 
வாயவனே! கொட்டாய்சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய்சப்பாணி.

2 1889



தாம்மோருருட்டித் தயிர்நெய்விழுங்கிட்டு *
தாமோதவழ்வரென்று ஆய்ச்சியர்தாம்பினால் *
தாமோதரக்கையால் ஆர்க்கத்தழும்பிருந்த *
தாமோதரா! கொட்டாய்சப்பாணி தமரைக்கண்ணனே! சப்பாணி. 

3 1890


ஓம் நமோ நாராயணாய நம

அன்புடன் 
அனுபிரேம் 

1 comment:

  1. புரட்டாசி சனிக்கிழமை வீட்டிலிருந்தே அருமையான தரிசனம் செய்து விட்டேன்.
    படங்கள், கோவில் விவரங்கள், பாடல் என்று சிறப்பான பதிவு அனு.

    ReplyDelete