18 August 2022

யசோதையின் கண்ணன் ....

 



யாதவர்களுக்குக் குலகுருவாக கர்க்க மகரிஷி இருந்தார். அதனால் தம் குழந்தைகளுக்கு கர்க்கர்தாம் நாமகரணச் சடங்கு செய்ய வேண்டும் என்று வசுதேவர் விரும்பினார். 

ஆதலால் கோகுலம் வந்து குழந்தைகளுக்கு நாமகரணம் செய்து வைக்க வேண்டும் என்று கர்க்கரை வேண்டிக் கொண்டார். 

கர்க்கர் கோகுலம் வந்து சேர்ந்தார். 

நந்தகோபரும் யசோதையும் அவரை அன்போடும் பக்தியுடனும் வரவேற்றனர். 

கோகுலவாசிகள் எல்லோருமே அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள்.

 அந்த இரு பிள்ளைகளுக்கும் நாமகரணம் செய்து வைக்குபடி நந்தகோபர் கர்க்கரைக் கேட்டுக் கொண்டார். 

கர்க்கரும் அதே காரியமாகத்தான் அங்கே வந்திருந்தார். அதனால் நந்தகோபர் சொன்னதை அவர் உடனே ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த சடங்கை ஆடம்பரமின்றி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். இல்லாவிட்டால் இந்த விஷயம் கம்சனுக்குத் தெரிய வரலாம், தான் நாமகரணம் செய்து வைத்ததனால் இந்தக் குழந்தைகளுக்கு எதோ முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்துத் தங்களுக்கு தீங்கு செய்யலாம்  என்று அவர் சொன்னார்.


கர்க்கர் சொன்னதை நந்தகோபர் ஏற்றுக்கொண்டார். 

எல்லாச் சடங்குகளையும் கர்க்கர் மிகவும் எளிய முறையில் செய்து முடித்தார்.

 பிறகு அவர், " இந்த ரோகிணியின் மகன், தன் அழகினால் எல்லோரையும் தன்னை மோகிக்கச் செய்கிறான். தன்னுடைய நற்பண்புகளால் இவன் தன் நண்பர்களையும், உறவினர்களையும் மகிழ்விப்பான். அதனால் இவனை ராமன் என்று அழைப்போம். ஒரு காலத்தில் இவன் மிகுந்த பலசாலியாக விளங்குவான். அதனால் இவனை 'பலன்' என்றும் அழைக்கலாம். வசுதேவர் குடும்பத்தையும், நந்தகோபர் குடும்பத்தையும் இவன் இணைப்பதால் இவனை 'சங்கர்ஷணன்' என்றும் அழைக்கலாம்" என்று சொன்னார்.


பிறகு குழந்தையைப் பார்த்து, "இந்தக் குழந்தை கடவுளின் அவதாரம். இவன் கறுப்பாக இருப்பதனால் இவனைக் கிருஷ்ணன் என்று அழைக்கலாம். இவனுடைய தகப்பனாரின் பெயர் வசுதேவராதலால் இவன் வாசுதேவன் என்றும் அழைக்கப்படுவான். உனக்கும் கோகுலத்தில் உள்ள மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் இவன் உங்களுக்கு எத்தனையோ நலன்களை அளிக்கப்போகிறான். இவனை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னார்.


சடங்குகள் முடிந்ததும், கர்க்கர் எல்லோரையும் ஆசீர்வதித்துவிட்டு, தம் இருப்பிடம் திரும்பினார். நந்தகோபரும் யசோதையும் தாங்கள் பாக்கியசாலிகள் என்று மகிழ்ச்சியடைந்தார்கள்.










ஒரு நாள் யசோதை தீவிரமாக தயிர் கடைந்துகொண்டிருந்தாள். 

அப்போது கிருஷ்ணனின் குறும்புத்தனங்களை அவளுக்கு ஞாபகம் வந்தன. 

அவற்றை ஒரு பாட்டாக இட்டுக்கட்டி அவள் அதை பாடத் தொடங்கினாள். 

கண்ணன் ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். தூங்கி விழித்ததும் அவனுக்குப் பசியெடுத்தது. உடனே அவன் சென்று தாயார் தயிர் கடையவொட்டாமல் மத்தைப் பிடித்து இழுத்தான். 

அவனது அந்தச் செயல் "அம்மா நீ தயிர் கடைந்தது போதும் என்னைப் பார் எனக்குப் பசிக்கிறது," என்று அவன் சொல்வது போல இருந்தது.

 யசோதை அவனைப் பார்த்து புன்னகை புரிந்து, அவனைத் தன் மடியில் கிடத்தி அவனுக்குப் பால் ஊட்ட ஆரம்பித்தாள். அப்பொழுது அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வழியும் வாசனை வரவே அவள் குழந்தையைத் தரையில் கிடத்திவிட்டுச் சமையலறைக்கு சென்றாள்.


கிருஷ்ணனுக்கு பாதி வயிறுதான் நிரம்பியிருந்தது. அதனால் அவன் எரிச்சல் அடைந்தான். 

பக்கத்தில் இருந்த அம்மிக்குழவியை எடுத்து கோபத்தோடு தயிர்கடையும் பானையின்மீது வீசினான். 

பானை உடையவே, தன் சின்னசிறு கைகளால் நிறைய வெண்ணெயை வாரி எடுத்தான்.

 மாய்மாலக் கண்ணீருடன் ஓர் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த உரலின் மீது உட்கார்ந்து கொண்டு வெண்ணையைத் தின்ன ஆரம்பித்தான். 

சமையலறை சென்ற யசோதை திரும்பி வந்து பார்த்தால், தயிர்பானை உடைந்து கிடந்தது; தயிர் எங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

 கிருஷ்ணனோ அங்கு எங்கும் காணோம்! கிருஷ்ணன் தான் பானையை உடைத்திருப்பான் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. வெண்ணெய் பட்ட அவனுடைய பாதசுவடுகளை அவள் பின்தொடர்ந்தாள். 

உருட்டிவிடப்பட்ட ஒரு மர உரலின்மீது உட்கார்ந்துகொண்டு, மரங்களிலிருந்து கீழே இறங்கி வந்திருந்த குரங்குகளுக்கு அவன் வெண்ணெய் கொடுத்துக் கொண்டிருந்தான்! 

அம்மா கோபித்துக் கொள்ளுவாள் என்று அவனுக்கு தெரியுமாதலால், அவள் எப்போது வருவாளோ என்று நாலாபக்கங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.





கையில் ஒரு கழியுடன் யசோதை மெல்ல அவன் பின்பக்கமாக வந்தாள். 

அவளைக் கண்டதும் ஏதோ பயந்தவனைப் போலக் கிருஷ்ணன் உரலை விட்டுக் கீழே இறங்கி ஓட ஆரம்பித்தான். 

யசோதையும் கையில் கழியுடன் அவனை பின் தொடர்ந்தாள். சிறிது நேரம் ஓடியபிறகு கிருஷ்ணன் வேண்டுமென்றே அன்னையிடம் அகப்பட்டுக் கொண்டான். 

"உன்னுடைய குறும்புகள் அளவுகடந்து போய்விட்டன. நான் உனக்கு அதிக இடம் கொடுத்துவிட்டேன். நீ இனிக் குறும்பு செய்யாதபடி உன்னைக் கட்டிவைக்கப் போகிறேன். நீ உன் நண்பர்களோடு இனி விளையாட முடியாது" என்று சொல்லி ஒரு கயிறுகொண்டு கிருஷ்ணனை உரலோடு கட்டப் போனாள். 

ஆனால் கயிறு சற்று நீளம் குறைவாக இருந்தது. 

அதனால் இன்னொரு கயிறு கொண்டு முதல் கயிற்ரோடு முடித்தாள். 

என்ன ஆச்சரியம்! அப்போதும் கயிறு போதிய நீளமில்லை. 

அதோடு இன்னொரு கயிறு கட்டினாள். 

அப்போதும் கயிறு இரண்டு விரற்கடை குறைவாக இருந்தது. ஏமாற்றமடைந்து அவள் ஒவ்வொரு கயிறாகச் சேர்த்துக் கட்டினாள். 

ஆனால் நீளம் இரண்டு விரற்கடை குறைவாகவே இருந்தது. வீட்டில் உள்ள எல்லாக் கயிறுகளையும் சேர்த்துக் கட்டியாகிவிட்டது; ஆனால் கிருஷ்ணனை கட்ட முடியவில்லை. 

சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கோபிகள் யசோதையின் திண்டாட்டத்தைக் கண்டு சிரித்தார்கள்.









பாவம் யசோதையும் என்ன செய்ய முடியும்? அவளும் அவர்களோடு சேர்ந்து சிரித்தாள். தன் தாயார் களைத்துப்போய் வேர்க்க விறுவிறுக்க இருப்பதைக் கண்டு கிருஷ்ணன் அவள் மீது இறக்கம் கொண்டு, கடைசியில் தாம் கட்டுப்படச் சம்மதித்தான். 










பெரியாழ்வார் திருமொழி

முதற் பத்து

முதல் திருமொழி - வண்ண மாடங்கள்

கண்ணன் திருவவதாரச் சிறப்பு


(4)

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்

நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்

செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே.

16


வெண்ணை, பால் தயிர் வைத்திருந்த மண் பானை

குடங்களை உருட்டி விடுவார்கள். மணம் கொண்ட

நெய், பால், தயிர் இவைகளை நிறைய தானமாக

எல்லோருக்கும் கொடுத்துவிடுவார்கள். அடர்த்தியாகவும்

மென்மையாகவும் உள்ள கூந்தலை அவிழ்த்துவிட்டபடியே

தன்னுடைய அறிவையும் சுயநினைவையும்

இழந்ததுபோல் திரிந்தார்கள் ஆயர்பாடியர்கள்.


(5)

கொண்ட தாள் உறி கோலக் கொடுமழு

தண்டினர் பறியோலைச் சயனத்தர்

விண்ட முல்லை அரும்பு அன்ன பல்லினர்

அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்.

17


இடையர்கள் அவர்களுடைய உடமைகளான உறி, மழு

என்ற ஆயுதம், மாடு மேய்க்கிற கோல் ஆகியவைகளுடன்,

வெண்மை நிற பற்கள் தெரியும்படி சிரித்தவாறே

ஒருவருக்கொருவர் எண்ணை தேய்த்த உடம்புடன்

ஆலிங்கனம் செய்தும், ஆனந்தமாக ஆடியும்

பாடியும், ஸ்நானம் செய்தும் மகிழ்ந்தனர்.

(6)

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்

பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்

ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட

வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே.

18



ஒரு சமயம் யசோதை கண்ணனை குளிப்பாட்டும் போது,

அச்சிசுவின் பிஞ்சு கைகளையும் கால்களையும் நீட்டி

மடக்கி காய்ச்சின மஞ்சள் தீர்த்தத்தால் ஸ்நானம்

செய்து கொண்டிருக்கையில், மெல்லிய நாக்கை

வழிக்கும் சமயம், அவன் திருவாயினுள் ஏழு

உலகங்களையும் காண்கிறாள்.



தொடரும் ....

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 

No comments:

Post a Comment