20 August 2022

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ...












ஒரு நாள் நந்தகோபர் யமுனையில் குளிக்க சென்றிருந்தார். அப்பொழுது அதிகாலை நேரம், அதனால் இருட்டாகவே இருந்தது. 

அந்த நேரம் வருணனின் தூதர்களில் ஒருவன் நந்தகோபர் குளிப்பதை பார்த்தான் அவன் நந்தகோபரை இழுத்துக்கொண்டு, வருணனிடம் கொண்டு சென்றுவிட்டான். நதிக்கு சென்ற நந்தகோபர் திரும்பி வராததை கண்டு எல்லோரும் அழ ஆரம்பித்தார்கள். அனைவரும் கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டார்கள்.

 கிருஷ்ணன் கண்களை மூடிக்கொண்டு தன் யோக சக்தியை பயன்படுத்தி இது வருணனின் குறும்புத்தனம் என்று தெரிந்துக்கொண்டார். 

உடனே கிருஷ்ணன் அந்த நதி கரைக்கு சென்று அதில் குதித்து வருணன் இருக்கும் இடம் சென்றடைந்தார் . 

வருணன் கிருஷ்ணனின் காலில் விழுந்து வணங்கி தன் இரண்டு கைகளையும் கூப்பி கிருஷ்ணனை பார்த்து, "பகவானே இன்று நான் ஆசிர்வதிக்க பட்டேன். உங்களுடைய பாதம் எங்கெல்லாம் படுகிறதோ அதை தொடுகிறவர்கள் பிறவிக் கடலிலிருந்து காப்பாற்ற படுகிறார்கள். என்னையும் எனது தூதரையும் மன்னித்து அருளுங்கள். உங்களுடைய தந்தையை நீங்கள் அழைத்து செல்லலாம்" என்றார் .

கிருஷ்ணன் அதை ஏற்றுக்கொண்டு மனதில் சந்தோஷந்துடன் அவன் தந்தையுடன் வீடு திரும்பினார்.

இதை பார்த்த கோபியர்கள் மனதில் அவன் தெய்வமாகவே தோன்றினான். 

பலநாட்களாக அவர்கள் மனதில் கிருஷ்ணனை பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவன் வசிக்கும் வைகுண்டத்தை பார்க்க வேண்டும் என்றும் ஆசை வைத்திருந்தார்கள். 

அவர்கள் மனதில் உள்ள ஆசையை அறிந்து கொண்ட கிருஷ்ணன் அதை பூர்த்தி செய்தான். 

அதன் விளைவாக கோபியர்கள் வைகுண்டத்தை பார்த்தனர், அவர்கள் நாராயணனை கிருஷ்ணனாக பார்த்தார்கள், எல்லா தேவர்களாலும் போற்ற பட்டார். 

இன்னொரு புறம் திரும்பி அவர்கள் பக்கம் பார்த்தால் அங்கும் கிருஷ்ணன் இருந்தான். 

அதன் பிறகு அவர்கள் மறுபடியும் பிருந்தாவனம் வந்தடைந்தனர். 

கோபியர்கள் வைகுண்டத்தை பார்த்ததை அவர்களாலே நம்ப முடியவில்லை.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகளே ஆச்சரியம் தான்...




முதன் முறையாக கிருஷ்ணன், பலராமன், மற்றும் சில கோபியர்கள் மதுரா சென்று அடைந்தார்கள். 

அதனால் அவர்களுக்கு அனைத்தும் புதியதாக தோன்றியது. 

அந்த ஊரினை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தனர், அடுத்த நாள் காலை, நந்தரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, சுற்றி பார்க்க வெளியே சென்றனர்.

 கிருஷ்ணனும் பலராமனும் ஊரை சுற்றி பார்க்க வந்த விஷயம் ஊர் முழுக்க பரவியது, மதுராவின் மக்களுக்கு முன்பே இவர்களை பற்றி தெரியும், அதனால் அவர்களை பார்க்க வேண்டும் என்று அனைவரும் விருப்பப்பட்டனர். 

 சுதாமா என்ற ஒரு மாலை கட்டுபவர் அங்கு வசித்து வந்தார், அவருக்கும் கிருஷ்ணன் பற்றிய கதைகள் தெரியும், கிருஷ்ணரும் பலராமரும் ஒன்றாக சுதாமா வீட்டுக்கு சென்றனர், இதை கண்ட சுதாமா, பெருமகழ்ச்சியுற்று அவர் இருவரையும் வரவேற்றார். அவர்கள் காலில் சாஷ்டங்கமாக விழுந்து வணங்கினார்.

பீடத்தில் அமர வைத்து அவர்கள் காலினை கழுவி, இருவரின் பாதத்திற்கும் மலர்களால் அலங்கரித்தார் சுதாமா. சுதாமா கண்ணிருடன் "பகவானே, உங்களை நேரில் பார்த்ததனால் நான் தூய்மை அடைந்தேன். உங்களது கட்டளையை கூறுங்கள், என்ன செய்ய வேண்டும்" என்று வினவினார். 

சுதமாவின் அன்பையும் பணிவையும் கிருஷ்ணன் புரிந்துகொண்டார். 

கிருஷ்ணர் சுதாமாவுக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினார், "சுதாமா உனக்கு என்ன வேண்டுமோ கேள், நான் உனக்கு அதை தந்து ஆசிர்வதிக்கிறேன்" என்றார் கிருஷ்ணன்.

ஆனால் சுதாமாவின் மனம் நிறைந்துவிட்டது, கேட்க எதுவும் இல்லாமல், கிருஷ்ணனை வணங்கி, "உங்கள் அழகு முகத்தை பார்த்தால் போதும் கிருஷ்ணா, வேறு என்ன வேண்டும் எனக்கு?, உங்கள் மீது இறுதி வரை நான் பக்தி வைத்து இருக்கவேண்டும். அனைத்து மனிதரிடத்தும் நான் கருணையோடு இருக்க என்னை ஆசிர்வதியுங்கள். இதுவே என்னுடைய ஆசையும்" என்றார். கிருஷ்ணரும் அவரின் ஆசையை ஏற்றுக்கொண்டு அவரை ஆசிர்வதித்தார்.




கிருஷ்ணனும் பலராமனும் நடப்பதை தொடர்ந்தனர், கம்சனின் மாளிகை வழியாக சென்றனர்.

 ஒரு பெண் இவர்கள் எதிரில் ஒரு பாத்திரம் முழுவதும் அறைத்த சந்தனத்தை கொண்டுவந்தாள். அதன் வாசனை அந்த இடம் முழுவதும் பரவியது.

 அந்த பெண் இளமையாகவும் அழகாகவும் இருந்தாள், ஆனால் அவன் முதுகு கூன் விழுந்திருந்தது. கி

ருஷ்ணன் அவளை பார்த்து, "அழகிய பெண்ணே, நீ யார்? இந்த சந்தனத்தை யாருக்கு கொண்டு செல்கிறாய்? கொஞ்சம் எங்களுக்கும் தருவாயா?" என்று கேட்டார்.

அவள் கம்சன் மாளிகையில் வேலை செய்யும் பெண், கிருஷ்ணனின் வார்த்தைகளில் மயங்கினாள். கிருஷ்ணனிடம் "ஐயா, எனது பெயர் த்ரிவக்ரா. நான் வாசனை திரவியம் செய்பவள். எனது இந்த திறமைக்காக கம்சன் என்னை ஆதரித்து உள்ளார், நான் செய்த இந்த வாசனை திரவியம் அரசருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த களிம்பை உங்களுக்கு நான் தருகிறேன், உங்களை தவிர வேறு யாருக்கும் இந்த களிம்பை பெற தகுதி இல்லை." என  சந்தன களிம்பை கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் தந்து மகிழ்ந்தாள்.

அவர்கள் இருவரும் அதை மார்பிலும், கைகளிலும், கழுத்திலும் பூசிக்கொண்டனர். 

கிருஷ்ணன் அவரது கருணையை அவரை போற்றுபவர்களுக்கு வாரி வழங்குவார். 

அவளது கூன் விழுந்த முதுகை மூன்று இடத்தில் வளைத்து சரிசெய்தார். 

அவளின் கால்கள் மீது இவர் கால் வைத்து, அவள் கன்னத்தை இரண்டு விரல்களால் பிடித்து கொண்டு, அவள் முகத்தை விரல்களால் இழுத்தார். அவள் உடல் தேறியது. 

அவள் கூன் சரி ஆகி அழகான பெண்ணாக மாறினாள். கிருஷ்ணருக்கு நன்றிகளை கூறி அவர்களிடமிருந்து விடைப்பெற்றாள்.




பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து

இரண்டாம் திருமொழி - சீதக்கடல்

கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்


குழந்தை கண்ணனின் அழகை யசோதையும்

அனுபவித்து, அங்கிருந்த அவளுடைய

தோழிகளையும் வந்து காணுமாறு

அழைக்கும் அழகான பாசுரங்கள் தான் இவை.


(1)

சீதக்கடல் உள் அமுத அன்ன தேவகி

கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த

பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்

பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர் ! வந்து காணீரே !

23


குளிர்ந்த திருபாற்கடலில் உள்ளமுதாகப்

பிறந்த பிராட்டிக்கு ஒப்பானவளான தேவகி,

ஒன்றுமறியா சிசுவை பூமாலைகளால்

அலங்கரிக்கப்பட்ட அழகிய கேசத்தை உடைய

யசோதை பிராட்டியிடம் அனுப்பிவைக்கிறாள்.

கண்ணனோ தன் திருப்பாத கமலங்களை தன்

திருவாயில் வைத்து சுவைத்துக்கொண்டிருக்கிறான்!

பவழத்தை ஒத்த உதடுகளை உடைய பெண்களே!

இந்த திவ்ய காட்சியை காண வாருங்கள்.

(குறிப்பு: எம்பெருமானுடைய திருவடியில் தேன்,

வெள்ளம்போல் இருக்கிறதாக வேதங்கள் கூறுகிறது

என்றும் அவனுடைய திருவயிற்றில் கிடக்கும்

உலககங்களெயெல்லாம் உஜ்ஜீவநமாக்கவே

இவ்வாறு செய்கிறான் எனபதும்

பெரியவர்களின் கருத்து).


(2)

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டு இருந்தவா காணீரே ஒண்ணுதலீர் ! வந்து காணீரே!

24


கண்ணனுடைய திருப்பாதங்களின் பத்து

விரல்களுக்கும் நவரத்தினங்கள் (முத்து,

மரகதம், வைரம், வைடூர்யம், கோமேதகம்,

நீலம், பவழம், புஷ்பராகம், மாணிக்கம்)

மற்றும் தங்க நிற வர்ணம் பூசி, ஜ்வலிக்கும்

இந்த வர்ணங்களோடு கூட அவனுடைய

திருமேனியின் மணிவர்ணமும் சேர்ந்து

மிகவும் ஒத்து இருக்கும் இக்காட்சியைக்

காண, ஆபரணங்களால் பிரகாசிக்கும்

நெற்றியை உடைய பெண்களே! வாருங்கள்!


(3)

பணைத் தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை

அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை

இணைக்காலில் வெள்ளித் தளை நின்று  இலங்கும்

கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர்! வந்து காணீரே!

25


மூங்கில் போன்ற தோளுடைய யசோதையின்

பால் நிரம்பிய முலையை தன் திருகரத்தினால்

நன்கு அணைத்தவாறே கண்ணன் பாலை வயிறார

பருகி விட்டுத் தூங்குகிறான். அழகிய பெண்களே!

கண்ணன் திருக்கால்களில் அணிந்திருக்கும்

வெள்ளித்தண்டுகளின் அழகை வந்து பாருங்கள்!





ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 💖💖

1 comment:

  1. படங்களும் கதைகளும் நல்லாருக்கு அனு.

    கீதா

    ReplyDelete