01 August 2022

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்

இன்று  ஆண்டாள் அவதாரம்  திருநட்சத்திரம் .....ஆடிப்பூரம்





ஆண்டாள் வாழித்திருநாமம்

திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப்  பதங்கள் வாழியே!








ஏழாம் நூற்றாண்டு, நள ஆண்டு, ஆடி மாதம்   செவ்வாய்க்கிழமை,பூரம் நட்சத்திரம்,

சுக்லபட்சம் பஞ்சமி திதியில்  தோன்றியவள் ஸ்ரீஆண்டாள்..


ஆண்டாள் வைபவங்கள்  முந்தைய பதிவுகள்  இங்கே ...

ஸ்ரீ ஆண்டாள் வைபவங்கள்   மற்றும்  




ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, பெரியாழ்வார் தாம் அமைத்திருந்த நந்தவனத்திலுள்ள ஒரு துளசிச் செடியின் அடிவாரத்தில், பூமிதேவியின் அம்சமாகத் தோன்றிய ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். 

அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டார். 

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள்.





நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி  : மற்று இருந்தீர்கட்கு

கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்



எம்பெருமானின் எல்லோரையும் ரக்ஷிப்பேன் என்று சொன்ன வாக்கை நம்பினாள். அது பலிக்கவில்லை. பெரியாழ்வார் ஸம்பந்தத்தை நம்பினாள். அதுவும் பலிக்கவில்லை.

இதை எண்ணிப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தாள்.

 எம்பெருமான் ஸ்வதந்த்ரன் ஆகையாலே பெரியாழ்வாராகிய ஆசார்யர் மூலம் எம்பெருமானைப் பெற முயன்றாள். 

அதுவும் கைகூடாததால் “எம்பெருமானோ ஸ்வதந்த்ரன், தன்னுடைய அடியார்களை ரக்ஷிக்காமல் விட்டால் அவனுக்கு அவப்பெயர் ஏற்படும், அவன் நம்மை ரக்ஷிப்பது என்று முடிவெடுத்துவிட்டால் வேறு யாரும் தடுக்க முடியாது, ஆகையால் அவன் ஸ்வாதந்த்ரியமே நமக்குப் பேறு கிடைப்பதற்கு வழியாக இருக்கும்” என்று எண்ணி மீண்டும் அவனிடமே செல்லப்பார்க்கிறாள். 

இப்படி உறுதியுடன் இருந்தும் அவன் வாராததால், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். அளவு கடந்த ப்ரேமத்தாலே அவன் வருமளவுக்கு இவளுக்குப் பொறுமை இல்லை.

 தன் ஸ்வரூபத்துக்கு ஒவ்வாததாக இருந்தாலும் எப்படியாவது எம்பெருமானிடம் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணி, தன்னருகில் இருப்பவர்களைப் பார்த்து “எப்படியாவது என்னை எம்பெருமான் இருக்கும் வடமதுரை, த்வாரகை போன்ற இடங்களில் சேர்த்து விடுங்கோள்” என்று ப்ரார்த்திக்கிறாள்.






முதல் பாசுரம் -  “எம்பெருமான் வந்து கைக்கொள்ளும் வரை நாம் காத்திருக்கவேண்டும். இப்படிப் பதறக்கூடாது” என்று சொல்ல “என் நிலையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் பேச்சுக்கு இடமில்லை. உங்கள் வார்த்தையைக் கேட்பதற்கும் எனக்கு ப்ராப்தியில்லை”.

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா
 மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் 
ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்று இருந்தாளை ஒழியவே போய்ப் 
பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி
மற் பொருந்தாமற் களம் அடைந்த 
மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் 1
617

என்னுடைய நிலைக்கு மாற்பட்டு இருக்கிற உங்களுக்கு அறிய முடியாததாய் மாதவன் விஷயமான அன்பை அடைந்திருக்கிற எனக்கு நீங்கள் கூறுவதெல்லாம் ஊமையும் செவிடனும் பேசிக்கொள்வதுபோல் வீணானது. இப்போது செய்யத்தக்கது, பெற்ற தாயான தேவகிப்பிராட்டியை விட்டு வேறொரு தாயாகிய யசோதையில் வீட்டிலே வளர்ந்தவனும் மல்யுத்தகளத்திலே மல்லர்கள் வருவதற்கு முன்பு தான் அங்கே முன்பே வந்திருப்பவனுமான கண்ணபிரானுடைய மதுராபுரியின் அருகிலே என்னைக் கொண்டுபோய் சேர்த்துவிடுங்கள்.


இரண்டாம் பாசுரம்-  “என்ன இருந்தாலும் இப்படி அவனிடம் தேடிப்போவது அவனுக்குக் கெட்ட பெயரை விளைக்கும்; அதை நீ செய்யலாமா? உன்னுடைய ஸ்த்ரீத்வத்தைப் பாதுகாக்க வேண்டாமா?” என்று கேட்க, அதற்கு பதிலளிக்கிறாள்.

நாணி இனி ஓர் கருமம் இல்லை 
நால் அயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து 
பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்
மாணி உருவாய் உலகு அளந்த
 மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் 
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்  2

618

இனிமேல் வெட்கப்பட்டு ஒரு பயனுமில்லை. ஊரிலுள்ளவர்கள் என் விஷயத்தை அறிந்துகொண்டார்கள். காலம் தாழ்த்தாமல், வேண்டும் பரிஹாரங்களைச் செய்து, இப்போது பிரிந்து துன்புறும் நிலைக்கு முன்பிருந்த எம்பெருமானுடன் கூடியிருந்த நிலைக்கும் முன்பிருந்த அறிவற்ற நிலையில் என்னை ஆக்க நினைத்தீர்கள் என்றால், நீங்கள் என்னை ஸத்யமாகக் காப்பாற்ற விரும்புகிறீர்களாகில் என்னை திருவாய்ப்பாடியிலே கொண்டு சேர்த்து விடுங்கள். அங்கே வாமனரூபியாய்ச் சென்று உலகங்களை எல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால் இந்த நோய் தீரும்.





மூன்றாம் பாசுரம்  கண்ணனை ஒழுங்காக வளர்க்காததற்கு யசோதைப் பிராட்டியைச் சொல்லிக் குற்றமில்லை. தகப்பனாய் கண்ணனை அடக்கிவைத்திருக்கவேண்டிய ஸ்ரீநந்தகோபன் திருமாளிகை வாசலிலே என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள் என்கிறாள்.

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் 
தனிவழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பு அரிது 
மாயவன் வந்து உருக் காட்டுகின்றான்
கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக் 
குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபாலன் கடைத்தலைக்கே 
நள் இருட்கண் என்னை உய்த்திடுமின்  3

619

“தகப்பனும் தாயும் உறவினர்களும் இருக்கும்போது தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள்” என்கிற வார்த்தையானது உலகில் பரவின பிறகு அப்பழியைத் தடுக்கமுடியாது. நான் அப்படித் தனியாகப் போகாமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில், ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய கண்ணன் எதிரே வந்து தன் வடிவைக்காட்டி என்னை இழுக்கின்றான். பெண்களிடம் சண்டைசெய்து பழி விளைத்து, குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான ஸ்ரீநந்தகோபருடைய திருமாளிகை வாசலிலே நடுநிசியிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.





நான்காம் பாசுரம்  எம்பெருமானுக்கே முழுவதுமாக அடிமைப்பட்டவளான என்னை யமுனை நதிக்கரையில் கொண்டுவிடுங்கள் என்கிறாள்.

அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் 
அவன் முகத்து அன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச் 
சிறு மானிடவரைக் காணில் நாணும்
 கொங்கைத் தலம் இவை நோக்கிக் காணீர்,
 கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்
 யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்  4

620

தாய்மார்களே! அழகிய கைத்தலத்திலே திருவாழியை ஏந்தியிருப்பவனான கண்ணனுடைய முகத்தில் தவிர வேறொருவருடைய முகத்தில் விழிக்கமாட்டேனென்று நல்ல சிவந்த வஸ்த்ரத்தாலே முலைக்கண்களை மூடிக்கொண்டு தாழ்ந்தவர்களைக் கண்டால் வெட்கப்படும் இம்முலைகளை நீங்கள் உற்றுப்பாருங்கள். இவை கோவிந்தனைத் தவிர மற்றொருவர் வீட்டு வாசலைப் பார்க்காது. ஆகையால், நான் இவ்விடத்தில் வாழ்வதைவிட்டு, என்னை யமுனை நதிக்கரையிலே சென்று சேர்த்துவிடுங்கள்.

ஐந்தாம் பாசுரம். அங்கிருந்தவர்கள் இவளுக்கு உள்ள நோயை அறிந்து சரியான பரிஹாரம் செய்ய வேண்டும் என்று துக்கப்படத் தொடங்கினார்கள். இவள், நீங்கள் உறவினார்களாக இருக்கும் காரணத்தினால் மட்டும் என் நோயை அறிய முடியாது என்கிறாள்.

ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது
 அம்மனைமீர்! துழதிப் படாதே
கார்க் கடல் வண்ணன் என்பான் ஒருவன்
 கை கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக் 
காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க் களமாக நிருத்தம் செய்த 
பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்  5

621

தாய்மார்களே! என்னுடைய இந்த நோய் எப்படிப்பட்டவர்களுக்கும் அறிய முடியாதது. நீங்களும் துக்கப்படாமல் காளிங்கன் வசித்த மடுவின் கரையில் இருந்த கடம்ப மரத்தின் மேலேறி காளிங்கனின் தலையின் மேல் ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து அந்தப் பொய்கைக்கரையே ஒரு போர்க்களம் ஆகும்படியாக நர்த்தனம் செய்யப்பெற்ற பொய்கையின் கரையிலே என்னைக் கொண்டுபோய்ப் போடுங்கள். கறுத்த கடல் போன்ற நிறத்தை உடையவனான கண்ணன் தனது திருக்கைகளால் என்னைத் தடவினால் இந்த நோய் தீர்ந்துவிடும். இது கைமேல் பலிக்கக்கூடிய வழி.








ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை

இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக வன்றோ
 இங்காண்டாள் அவதரித்தாள்* குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னையிகழ்ந்து*
ஆழ்வார் திருமகளாராய். 
22



பெரியாழ்வார் பெண்பிள்ளையாய்* ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை* ஒருநாளைக்கு
உண்டோ மனமே! உணர்ந்துபார்* ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பிதற்கும் உண்டு.
23



அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்* ஆழ்வார்கள்
 தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய்* பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்*
வழுத்தாய் மனமே! மகிழ்ந்து 
24















ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


அன்புடன்
அனுபிரேம்


1 comment:

  1. மிக அருமையாக எழுதியிருக்கீங்க. படங்களும் மிக அருமை. கூடவே உபதேச ரத்நமாலையில் இருக்கும் நாள்பாடல்களும் அழகு சேர்க்கின்றன

    ReplyDelete