முன்னொரு சமயம், கொடியவர்களும், அகந்தை கொண்டவர்களுமான பல அசுர அரசர்களின் பாரம் தாங்க முடியாமல் பூமாதேவி தவித்தாள். உடனே அவள் ஒரு பசுவின் உருவை எடுத்துக் கொண்டு, பிரம்மாவைச் சென்று பார்த்தாள். தன்னுடைய துன்பத்தை அவள் அவரிடம் சொல்லி கதறினாள். பிரம்மா அவள் மீது இரக்கம் கொண்டார்.
பூமாதேவியைப் பார்த்து அவர், "குழந்தாய்! உன்னை ஒரே ஒருவரால்தான் காப்பாற்ற முடியும். அவர்தான் ஸ்ரீமந்நாராயணன். அவரிடம் அடைக்கலம் புகுவோம், வா'' என்றார்.
பரமசிவனையும் இன்னும் மற்ற தேவர்களையும் அழைத்துக் கொண்டு, பிரம்மா, ஸ்ரீ மகாவிஷ்ணு இருக்கும் வைகுண்டத்தை அடைந்தார். அங்குள்ள திருபாற்கடலின் கரையில் நின்று கொண்டு, எல்லோரும் மிக்க பக்தியுடன் ஸ்ரீ மகாவிஷ்ணுவைத் தியானம் செய்தார்கள். ஆழ்ந்த தியானத்தில் இருந்து பிரம்மாவின் காதுகளில் கணீர் என்று ஒரு குரல் ஒலித்தது.
அது மகாவிஷ்ணுவின் குரல்.
பிரம்மா தம் தியானத்திலிருந்து விழித்து எழுந்து, மற்ற தேவர்களைப் பார்த்து, "என் தியானத்தில் நான் நாராயணனின் குரலைக் கேட்டேன்.
அவர் என்ன சொன்னார் என்று உங்கள் எல்லோருக்கும் சொல்லுகிறேன், கேளுங்கள். பூமாதேவியின் கஷ்டத்தை அவர் ஏற்கனவே அறிந்துள்ளார்.
உலகில் தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாகப் பிறக்க, அவர் தீர்மானித்துள்ளார்.
அவருக்கு உதவ நீங்கள் எல்லோரும் யது குலத்தில் பிறக்க வேண்டும். அவர் பூலோகத்தில் உள்ளவரை நீங்களும் அங்கு அவரோடு இருக்க வேண்டும்" என்றார்.
பிரம்மா சொன்னதைக் கேட்டு, பூமாதேவியும் மற்ற தேவர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மகா விஷ்ணுவின் வாக்குறுதி அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது. எல்லோரும் அவரவர் இருப்பிடம் திரும்பினார்கள்...
பகவான் பிறக்கப்போகும் இடமும் சூழ்நிலையும் மிகவும் எழிலாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டும்! நள்ளிரவு.
எங்கும் அமைதி நிலவியது.
வானம் துல்லியமாக இருக்க, நட்சத்திரங்கள் பளிச்சென்று பிரகாசித்தன.
ரோகிணி நட்சத்திரம் உச்சத்தில் இருந்தது.
உலகத்திற்கு மங்கலம் ஏற்படப் போகிறது என்பதை அது காட்டியது. கிருஷ்ணன் உலகத்திற்கு வருவதைக் கண்டு ஆனந்திருப்பது போல் ஏரிகளில் உள்ள தாமரைப் பூக்கள் மலர்ந்து காணப்பட்டன.
உலக நாயகனைத் தன் கருவில் தாங்கிக் கொண்டிருக்கும் தேவகிக்கு நோகக் கூடாது என்பது போல மந்தமாருதம் மெல்லென வீசியது.
காடுகளில் அழகிய பறவைகள் புதிய குரலெடுத்துப் பாடின. மயில்கள் நடமாடின.
எல்லோர் மனத்திலும் அமைதி நிலவியது. தேவர்கள் பேரிசைகளை முழங்கினர்.
இறைவன் உலகில் அவதரிக்கப் போவதைக் குறித்து அவர்களுக்கு ஏற்பட்ட இன்பத்தில் பூமியின் மீது பூமாரி பொழிந்தனர்.
அந்நேரத்தில் மகாவிஷ்ணு தேவகிக்குக் கிருஷ்ணன் என்ற குழந்தையாகப் பிறந்தார்.
வசுதேவர் அந்த அழகிய குழந்தையை உற்று நோக்கினார்.
திடீரென்று ஓர் அதிசயம் நடந்தது. அதைக் கண்டு வசுதேவர் ஆச்சரியப்பட்டார்.
பிறந்த குழந்தை சாதாரணக் குழந்தையாகத் தோன்றவில்லை. மகாவிஷ்ணுவாகவே அது காட்சியளித்தது.
அந்தக் குழந்தைக்குத் தாமரைக் கண்கள், நான்கு கைகள். ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் சக்கரம், ஒரு கையில் கதை, இன்னொரு கையில் தாமரைமலர் இருந்தன.
மார்பில் ஸ்ரீவத்ச அடையாளம்.
கழுத்தில் துளசிமாலை, இடுப்பில் பட்டாடை, காதுகளில் வைடூரிய மணிகள் இழைத்த குண்டலங்கள்.
இடுப்பை மனிச்சரங்கள் தொங்கும் அழகிய ஒட்டியாணம் அலங்கரித்தது. கங்கணங்கள், கடகங்கள், இன்னும் பல ஆபரணங்கள் உடலை அலங்கரித்தன.
இந்த அழகிய உருவைக் கண்டதும் வசுதேவரின் கண்கள் ஆச்சரியத்தில் பிரகாசித்தன.
பிறந்திருக்கும் குழந்தை நாராயணன்தான் என்று அவர் தெரிந்து கொண்டார். 'இத்தனை அழகான குழந்தை பிறந்திருக்கிறது! ஆனால் என்ன பரிதாபம்! கம்சன் சீக்கிரமே இதைக் கொன்றுவிடுவானே! என்று அவர் கவலைப்பட்டார். ஆனால் அடுத்த கணமே 'இது சாதாரண குழந்தையல்ல, இறைவன் மனித உருவில் வந்துள்ளார்' என்று அவர் உணர்ந்ததும் கம்சனைப் பற்றி அவருக்கு இருந்த பயம் விலகியது. கைகூப்பிச் சிரம் தாழ்த்தி அவர் அந்தக் குழந்தையைத் துதிக்கத் தொடங்கினார்....
தங்களுடைய எல்லையற்ற கருணை காரணமாக உலகைக் காப்பாற்ற, என் குலத்தில் தாங்கள் அவதரித்துள்ளீர்கள். என்னுடைய உள்ளக் கிளர்ச்சியை நான் எப்படி விவரிப்பேன்!
மனிதர்களுக்குள்ளே நான் மிகவும் பாக்கியசாலி.
என் மனைவியோ இறைவனுக்குத் தாய் என்ற அரிய பேற்றைப் பெற்றவள்.
எங்கள் மீது தங்களுக்கு ஏற்பட்ட கருணைதான் என்னே! இறைவனே! கொடியவனான கம்சன் தாங்கள் எங்கள் குடும்பத்தில் பிறப்பதால் தனக்கு வரப்போகும் அழிவை நினைத்துப் பயந்து எங்களுக்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் கொன்றுவிட்டான்.
இப்பொழுது தாங்கள் பிறந்ததைக் கேள்விபட்டதும் அவன் ஆயுதத்துடன் தங்களைக் கொல்ல வருவானே! என்று கவலைப்பட்டார்.
ஒருபுறம் வசுதேவர் மகாவிஷ்ணு பிறந்ததைக் கேள்விபட்டதும் கம்சன் ஆயுதத்துடன் தங்களைக் கொல்ல வருவானே! என்று கவலைப்பட்டார்.
மறுபுறம் தேவகியும் கம்சனை எண்ணி பயந்து கொண்டுதான் இருந்தாள்.
ஆனால் இப்பொழுது தன் குழந்தை உருவில் இருப்பதை கண்டதும் இறைவனை துதிக்க ஆரம்பித்தாள்.
"இறைவனே! தாங்கள் மகாவிஷ்ணுவேதான் என்று எனக்கு விளங்கிவிட்டது. நல்லவர்களை வதைக்கும் கம்சனைத் தயவுசெய்து கொல்லுங்கள். மற்றத் தாய்மார்களைப் போல் நான் தங்களை என்னோடு வைத்துக்கொள்ள முடியாது. தங்களை நான் கம்சனிடம் ஒப்படைக்க வேண்டும். தங்கள் கடவுளாதலால் என் குழந்தைகள் எல்லாவற்றையும் அவன் எப்படிக் கொன்றான் என்பது தங்களுக்குத் தெரியும் . இப்போது எனக்கு இன்னொரு குழந்தை பிறந்துள்ளது என்பதைக் கேட்டவுடன் உடனே இங்கு ஓடிவந்து தங்களைப் இரக்கமின்றி கொன்றுவிடுவான். தாங்கள் தெய்விக உருவில் அவனுக்குக் காட்சியளிக்காதீர்கள். தங்களை பக்தியுடன் பூசிக்க அடியார்கள் காண வேண்டிய திருவுருவம் இது" என்று சொன்னாள்.
கம்சனை பற்றித் தேவகிக்கு இருந்த பயத்தில் அவனால் மகாவிஷ்ணுவைக் கொல்ல முடியாது என்பதை அவளால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. தாயன்பு காரணமாக சாதாரணக் குழந்தையாக மாறும்படி இறைவனை வேண்டிக் கொண்டாள்.
தேவகியின் நல்ல உள்ளதைக் கண்டு மகாவிஷ்ணு மகிழ்ச்சியடைந்தார்.
அவர் அவளைப் பார்த்து அன்புடன் சொன்னார், "தேவகி! நீ பெண்களுள் பரிசுத்தமானவள். நீ முன்னொரு பிறவியில் என்னை குறித்துத் தவம் செய்தாய். உன் பக்தியில் மகிழ்ந்து, நான் உன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன்.
நான் உன் மகனாக பிறக்க வேண்டும் என்று நீ கேட்டாய்.
என்னுடைய பூர்வ அவதாரங்களிலும் நான் உன்னை என் அன்னையாக ஏற்றுக் கொண்டுள்ளேன். அதனால்தான் இப்பொழுதும் நான் உன் மகனாக பிறந்துள்ளேன்.
நான் உனக்கு முன்னாலும் மகனாகப் பிறந்துள்ளேன் என்று ஞாபகப்படுத்துவதர்காகத்தான் இந்த விஷ்ணு உருவை உனக்குக் காட்டினேன்.
நான் சாதாரணக் குழந்தையாகப் பிறந்திருந்தால் இறைவன்தான் உனக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நீ நம்பமாட்டாய்" என்று சொல்லிக் கொண்டே அவர் சாதாரணக் குழந்தையாக மாறினார்..
பெரியாழ்வார் திருமொழி
முதற் பத்து
முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
கண்ணன் திருவவதாரச் சிறப்பு
சாராம்சம்
திருவாய்பாடியில் நந்தகோபருடைய அழகிய
திருமாளிகையில் கேசவன் என்ற திருநாமத்துடன்
கண்ணனாக திருவவதரித்தபோது கோகுலவாசிகள்
அளவில்லா உத்ஸாகத்தை அடைந்தார்கள். இந்த
பாசுரம் முதலாக, கண்ணன் பிறந்த
சந்தோஷத்தை எப்படியெல்லாம் ஆயர்பாடியர்கள்
கொண்டாடினார்கள் என்பதை மிக
ஆச்சர்யமாக சித்தரிக்கிறார் ஆழ்வார்.
(1)
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்து அளறு ஆயிற்றே.
13
திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும்
எம்பெருமான் கண்ணன் திருவவதரித்தபோது
கோகுலவாசிகள் எண்ணையையும், மஞ்சள்
பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவி
சந்தோஷப்பட்டார்கள். இதனால் ஸ்ரீ நந்தகோபருடைய
திருமாளிகையின் முற்றமே சேறாகி காட்சியளித்தது.
(குறிப்பு: கண்ணபிரான் வடமதுரையில் கம்ஸனுடைய
சிறைக்கூடத்திலே பிறந்திருக்க, நந்தகோபருடைய
திருமாளிகையில் பிறந்ததாகச் சொன்னது -
கம்ஸனிடமிருந்து தப்பி கோகுலத்தில் பிரவேசித்த
பின்னர்தான் இவன் பிறந்ததாக ஆழ்வார்
நினைத்திருக்கிறார் என்று பெரியோர்கள் வ்யாக்யானம்)
(2)
ஓடுவார், விழுவார், உகந்து, ஆலிப்பார்
நாடுவார், நம்பிரான், எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே.
14
கண்ணன் பிறந்த செய்தியைக் கேட்டவுடன் திருவாய்பாடியில்
உள்ளவர்கள் பலர் தலை கால் புரியாமல் அங்குமிங்குமாக
ஓடினார்கள், ஓடும்போது சிலர் கீழே விழுந்தெழுந்தார்கள்.
"எங்கே எங்கள் கண்ணன்" என்று ஆரவாரம் செய்தார்கள்,
சிலர் ஆனந்தத்துடன் பாடினார்கள், சிலரோ வாத்தியங்கள்
முழங்க மேளம் கொட்ட அதற்கு ஏற்றாற்போல் கூத்தாடினார்கள்.
(3)
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆணொப்பார் இவன் நேர் இல்லை காண் திரு
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே.
15
கம்சனை போன்ற துஷ்டர்களிடமிருந்து காத்துவந்த
கண்ணனை அவ்வூர் ஆயர் குலத்து பெருமக்கள்
அவ்வப்போது அன்போடு பார்ப்பதும் வருவதுமாக
இருந்தார்கள். அவர்களில் சிலர் இவனுக்கு நிகர் வேறு
ஒருவன் இல்லை என்பார்கள். இவன் திருவோண
திருநக்ஷத்திரத்தில் பிறந்திருப்பதால் எல்லா
உலகங்களையும் ஆளக்கூடிய திறன் படைத்தவன் என்பார் சிலர்.
தொடரும் ....
No comments:
Post a Comment