29 August 2022

விநாயகர் அகவல் ...

 விநாயகர் அகவல் பிறந்த வரலாறு....




திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் என்ற மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார். 

ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வை முடித்து சிவனைத் தரிசிக்க கைலாயம் செல்ல எண்ணிச் சிவபெருமானைப் புகழ்ந்து பாடி வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். 

சுந்தரரும் யானைமீது ஏறி ஆகாய மார்க்கமாக கயிலாயம் புறப்பட்டார்.

 இதனை அறிந்த மன்னன் சேரமான் பெருமாள் வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். 

அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லாமல் அவருடன் தானும் கைலாயம் செல்லும் நோக்கில் தன் குதிரையில் ஏறி அதன் காதில் “சிவயநம” என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். 

உடனே குதிரையும் சுந்தரரைத் தொடர்ந்து கைலாயத்தை நோக்கிப் புறப்பட்டது.

இவ்வாறு ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும், ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு “நீயும் வாயேன் பாட்டி” என்று அழைத்தனர்.

 பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப் பிராட்டி பதில் அளித்தாள். 

ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார். 

அதனால் பூஜையில் வேகத்தைக் கூட்டினார். 

விநாயகப் பெருமான் ‘ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?’ என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.

 ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை புரிவாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்’ என திருவாய் மலர்ந்து அருளினார்.

அவ்வையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூசையை வழமை போல சிறப்பாகச் செய்து முடித்தார். 

பூசையினால் அகமகிழ்ந்த விநாயகர் யோகத்தை (யோக மார்க்கம் மூலமாக முத்தியடையும் வித்தை) அவ்வையாருக்கு எடுத்துக் கூற, அவ்வையார் அதனை “விநாயகர் அகவல்” என்ற நூலாக இவ்வுலகுக்கு அருளினார். 

இறுதியில் விநாயகர் தன் துதிக் கையினால் அவ்வையாரைத் தூக்கி கைலையில்ச் சேர்த்தார். அவ்வையாரும் கயிலைக் காட்சி கண்டு சிவனுடன் இணைந்தார் எனக் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.

விநாயகர் அகவல் ஒரு தோத்திர நூலாகவும், சாத்திர நூலாகவும், யோக சூத்திர நூலாகவும் அமைந்துள்ளது. நக்கீரனார் எழுதிய இனொரு விநாயகர் அகவலும் உண்டு. ஆனால் அந்நூல் பிரசித்தி பெறவில்லை. அவ்வையார் எழுதிய விநாயகர் அகவலே எல்லோராலும் போற்றப்படுகிறது.

மயில் கத்துவதை அகவுதல் என அழைப்பர். 

அதாவது மயில் அகவும்.

 மயிலின் அகவல் குயிலின் கூவல் போல இனிமையாக அதாவது ஒரு குறிப்பிட்ட இசை போல தொடர்பாக இருக்காது. மயிலின் அகவல் ஒரு தொடர்ச்சி இல்லாது வேறு, வேறு தொனியில் இருக்கும். அதுபோல விநாயகர் அகவலில் கூறப்பட்ட வரிகளும் அவ்வப்போது வேறு வேறு தொனியில் ஏற்ற இறக்கமாக இருப்பதனால் (விளக்கங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் முன்பின்னாக அமைந்துள்ளதனால்) “அகவல்” என அழைக்கப்படுகிறது.


விநாயகர் அகவல் 72 சிறு அடிகளைக் (வரிகளைக்) கொண்டது. வெளிப்படையாகப் பார்த்தால் விநாயகர் பெருமையை எடுத்துரைப்பது போல விளங்கிக் கொண்டாலும், விநாயகரது அங்கங்களை வர்ணிப்பது போல வெளிப்படையாகத் தோன்றினாலும் முழுக்க முழுக்க விநாயகரின் ஒவ்வொரு அங்கத்தையும், அவரது பெருமையையும் யோக தத்துவத்துக்கு உவமையாக ஒப்பிட்டு யோகப் பயிற்சி முறையை விளங்குகிறது இந்த நூல்.

அதனாலேயே அதாவது ஞானம் (முக்தி) அடையும் தத்துவத்தை விளக்குவதால் “ஞான நூல்” என அழைக்கப் படுகிறது.

விநாயகர் என்பது ஆன்மாவை அதாவது குண்டலினி சக்தியை குறிப்பிடுவதாகவும், அந்த குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியாக மேலெழும்பும் தத்துவத்தை விநாயகம் எனவும் சில சித்தர்கள் விளக்குகிறார்கள்.

விநாயகர் அகவலில் முதல் 15 வரிகள் ஓரளவு விநாயகர் பெருமையை விளக்குவது போலத் தோன்றினாலும், மிகுதி வரிகள் முற்றாக யோக முறையினையே விளக்குகிறது.


ஔவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்


சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)


வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)


இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)


இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)


குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)


தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)


தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)


பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)


குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)


குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)


முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)


எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)


தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)


பிள்ளையார்பட்டி, கற்பகவிநாயகர் தரிசனம் 















விநாயகர் திருவடிகளே சரணம் ...



அன்புடன்,
அனுபிரேம் 💛💛💛


1 comment:

  1. கதை நிழலாக நினைவிருந்தது. இப்ப மீண்டும் நினைவுக்கு வந்துவிட்டது. உங்க பதிவு வாசித்ததும். சூப்பர், அனு

    கீதா

    ReplyDelete