05 August 2022

ஸ்ரீ நல்லாண்டவர் கோயில், மணப்பாறை, திருச்சி

அருள்மிகு ஸ்ரீ  நல்லாண்டவர் கோயில், மணப்பாறை, திருச்சி .

இத்தலம்  மணப்பாறையிலிருந்து  5  கி.மீ  தொலைவிலும், திருச்சியிலிருந்து  40 கி.மீ  தொலைவிலும்  உள்ளது. 


மூலவர்       - ஸ்ரீநல்லாண்டவர் – மாமுண்டி ஆண்டவர்
ஸ்தல விருட்சம் - காட்டு மின்னை
வாகனம்      - யானை
காவல் தெய்வம்  - புலி
கருப்பணசாமி வாகனம்  - குதிரை


துவாபரயுக காலத்திலே ஸ்ரீராமன் மாயமானை வதம் செய்த இடம் மான்பூண்டி ஆறு எனப் பெயர் பெற்று மாமுண்டி என மருவியதாக ஐதீகம்.







சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த நல்லாண்டவர் கோவில்.

 இக்கோயிலின் பிரதான தெய்வமாக நல்லாண்டவர் இருக்கிறார். 

கோயிலின் தல விருட்சமாக காட்டு மின்னை மரம் இருக்கிறது.  மாய மானை ராமர் பூண்டிய தலம் இது. இதனால் தான் இப்பகுதி மான்பூண்டி தலம் எனப்படுகிறது. இப்பெயர் காலப்போக்கில் மருவி மாமுண்டி ஆண்டவர் கோயிலாக விளங்குகிறது என வரலாறு கூறினாலும், இப்பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த மான்பூண்டி வள்ளல் என்கிற ஒருவரின் வரலாற்றோடு இக்கோயிலின் வரலாறும் தொடர்பு கொண்டுள்ளது எனக் கூறுகிறார்கள்.

 வலிமையும், மந்திர ஆற்றல் சித்துக்களும் கொண்ட வீரராக விளங்கியவர் இப்பகுதியை ஆண்ட மான்பூண்டி அரசர்.

 சிறப்பாக ஆட்சி புரிந்த இவர், இப்பகுதி மக்களை கள்வர்களிடமிருந்தும், காட்டு விலங்குகளிடமிருந்தும் காப்பாற்றி வந்தார். 

ஒருமுறை இத்தலத்திற்கு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு சப்த கன்னிமார்கள் நீராட வந்தனர். அப்போது கள்வர்கள் கூட்டம் ஒன்று அந்த சப்தகன்னியர்களுக்கும் தொல்லை கொடுத்தது. இதனால் வேதனை அடைந்த சப்த கன்னியரும் தங்களை யாராவது காக்குமாறு கூக்குரல் இட்டபோது, சத்தத்தை கேட்டு குதிரையில் ஏறி விரைவாக அவ்விடத்திற்கு வந்து, கள்வர்கள் அனைவரையும் விரட்டி அடித்தார் மாமுண்டி அரசர். 

 சரியான நேரத்தில் எங்கள் உடன் பிறந்த அண்ணன் போல் வந்து காப்பாற்றியதால் உங்களை அனைவரும் நல்லண்ணன் என அழைப்பார்கள் என்று கூறி மாமுண்டி அரசருக்கு சப்த கன்னியர்களும் அருள் புரிந்தனர். 

அன்றிலிருந்து இக்கோயிலின் தெய்வம் நல்லண்ணன், நல்லாண்டவர், மாமுண்டி ஆகிய பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.








ராமாயண காலத்தில் மாயமானின் அழகில் மயங்கி அதை பிடிக்குமாறு ராமனிடம் சீதை கூறிய போது, ஸ்ரீராமன் அந்த மானை அம்புவிட்டு சாயத்த இடமே இந்த மான்பூண்டி தலம் என கூறப்படுகிறது. 

பூண்டுதல் என்றால் சாய்த்தல் என்று பொருள். 

மான்பூண்டி சீமை என்று இப்பகுதியை பழங்கால மக்கள் அழைத்துள்ளனர்.

 மாமுண்டி ஆறு ஓடி வரும் இப்பகுதிக்கு இருபுறமும் மணம் மிக்க மலர் சோலைகள் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இவ்வூருக்கு அருகில் உள்ள மணப்பாறை எனும் ஊருக்கு அப்பெயர் உண்டானது என கூறுகிறார்கள். 

இப்பகுதியின் தலைவராக விளங்கிய மாவீரர் மாமுண்டி நீதிநெறியோடு ஆட்சி புரிந்து, ஆன்மீகத்திலும் மிகவும் சிறந்து விளங்கினார். 

பில்லி பிணிகள் அகற்றுவதில் சிறந்த சித்தனாக விளங்கிய மாமுண்டி சித்தர் உறையும் கோயிலாக இது இருக்கிறது. இக்கோயில் கட்டப்படுவதற்கு முன்பாக பொந்துபுளி கருப்பண்ணசுவாமி இங்கே இருந்துள்ளார். இவர் மாமுண்டி சித்தரின் இதயம் நிறைந்த தெய்வம் ஆவார். 

மாதவபட்டியில் இருந்த ஒரு புளிய மரத்தில் இருந்த அதிக பொந்துகள் அங்கிருந்த மக்களை அச்சத்தில் ஆழ்த்தின. 

இதனால் அப்புளியமரத்தை அவ்வூர் மக்கள் வெட்ட முயன்றபோது, இங்கே எனக்கு ஒரு கோவில் கட்டினால் மக்களின் அச்சத்தை நான் போக்குகிறேன் என அசரீரி ஒலித்தது. 

அதன் படியே மக்களும் சேர்ந்து இங்கே இருக்கும் இக்கோவிலை கட்டி முடித்தனர். 

சைவ – வைணவ கோவில் சிறப்புக்களை தாங்கிய தலமாக இக்கோவில் இருக்கிறது.












அருள்மிகு நல்லாண்டவர் கோயில் சிறப்புக்கள் -

மிகப்பெரிய பிரகாரத்துடன் அமைக்கப்பட்ட கோவிலில் விநாயகர், பரிக்காரர், மதுரைவீரன், ஏழு கருப்பண்ண சுவாமி, ஓங்கார விநாயகர், பட்டத்து யானை, பேச்சியம்மன், நல்லாண்டவர் யானை தெப்பக்குளம் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் இருக்கின்றன. 

நல்லாண்டவருக்கு நல்லையா, ராஜகோபாலன், இலக்கையன், நல்லேந்திரன் ஆகிய திருநாமங்கள் இருக்கின்றன.

 இக்கோயிலில் காலில் விலங்கு பூட்டப்பட்டு, கையில் கமண்டலத்துடன், ஆணி தைத்த செருப்பை அணிந்து கொண்டு இருக்கும் பிரம்மச்சரிய தெய்வமான லாட சன்யாசி பக்தர்களின் சகல நோய்களையும் தீர்க்கும் வைத்தியராக இருக்கிறார்.

 சிறந்த சித்தரான இவர். யானைகள் மலைக்குச் செல்லும் பாதையில் இருக்கும் இக்கோயிலில் ஏழு கருப்பு பேச்சியாத்தாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களின் ஆற்றலை கண்டு வியந்து, அந்த தெய்வங்களின் சக்திகளை ஒரு கலயத்திற்குள் திரட்டி எடுத்துச் செல்ல முயன்ற போது, முத்துக்கருப்பன் சாமி லாட சாமியின் முயற்சியை முறியடித்தார். இதன் பின்னர் தனது தவறை உணர்ந்த லாடசாமி இத்தலத்திலேயே முத்துக்கருப்பனின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் அருகில் அமர்ந்து விடுகிறார்.






இங்கே ஒரே கல்லில் ஏழு தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஏழு கருப்பர்களின் ஏவலர்களான கம்பீர தோற்றத்தோடு மகா முனீஸ்வரரின் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. 

இக்கோயிலில் சப்த கன்னிமார்களும் நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள்.

 இக்கோயிலில் இந்த சப்த கன்னியருக்கு தான் முதல் பூஜை. 

லாட சன்யாசி  சித்தருக்கு இரண்டாவது பூஜை செய்யப்படுகிறது.

 மூன்றாவது பூஜையையே இக்கோயிலின் பிரதான தெய்வமான நல்லாண்டவர் ஏற்கிறார். 

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், உடன்பிறந்தவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், கணவன்-மனைவிக்குள்ளாக எழும் பிரச்சனைகள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தொந்தரவுகள், பெண்களுக்கு மனம் சம்பந்தமாக ஏற்படும் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் தீர இங்கு வந்து நல்லாண்டவரை வழிபட்டால் நமக்கு அண்ணனாக இருந்து நமது அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.

நல்லாண்டவருக்கு அனைத்து நாளும் திருநாளே ... தமிழ் புத்தாண்டு, ஆடி வெள்ளி, ஆடி 18, ஆவணி உறியடி, புரட்டாசி சனி, அம்புவிடு திருவிழா, கார்த்திகை தீபம், தைப்பொங்கல், மகாசிவராத்ரி, பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.








அமைதியான திருமுகம், பெரிய மீசை, காந்த சக்தி கொண்ட கண்கள் ஆகியவற்றுடன் கூடிய அழகிய சுதை  சிற்பமாக அருள் புரிகிறார் நல்லாண்டவர். நாமம் அணிந்தும், பிரசாதமாக திருநீறு வழங்கப்படுவதும் இவ்ஆண்டவரின் சிறப்பு. 





எட்டாம் திருமுறை


மாணிக்கவாசக சுவாமிகள்  அருளிய  திருவாசகம்

1. சிவபுராணம்

(சிவனது அநாதி முறைமையான பழமை)

திருப்பெருந்துறையில் அருளியது

(கலிவெண்பா)


திருச்சிற்றம்பலம்


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி

விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்  25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் 30



திருச்சிற்றம்பலம்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!


அன்புடன்,
அனுபிரேம் 💜💜💜

No comments:

Post a Comment