காட்டுக்குள் சென்று தன் நண்பர்களுடன் வனபோஜனம் செய்ய வேண்டுமென்று ஒரு நாள் கிருஷ்ணன் ஆசைப்பட்டான். அதனால் அவன் காலையில் சீக்கிரமே எழுந்து கொம்பை பலமாக ஊதி, தன் நண்பர்களை எழுப்பினான்.
அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தும், வனபோஜனத்தைப் பற்றிய தன் யோசனையைச் சொன்னான். இதைக்கேட்டுச் சிறுவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
கன்றுகள் முன்னே செல்ல, அவர்கள் எல்லாரும் மிக்க குதாகலத்துடன் பின்னால் சென்றார்கள். அவர்கள் தங்களுடன் சித்திரான்னம், தயிர்கூடங்கள், கவண்கள், பிரம்புகள், கொம்பு வாத்தியங்கள், புல்லாங்குழல் முதலியவற்றை எடுத்துக்கொண்டு சென்றார்கள்.
கிருஷ்ணனைத் தங்கள் தலைவனாகக் கொண்டு அவர்கள் பல விளையாட்டுகளை விளையாடினார்கள்.
அப்போது பூதனைக்கும் பகசுரனுக்கும் தம்பியான அகாசுரன் என்பவன் அங்கே வந்து சேர்ந்தான்.
சிறுவர்கள் உற்சாகமாக விளையாடுவதைப் பார்க்க அவனுக்கு பொறுக்கவில்லை.
"அதோ சிறுவர்களுக்கு நடுவில் புல்லாங்குழலுடன் காணப்படுகிறானே அவன்தான் என் தமக்கையும் என் தமையனையும் கொன்றவன். அவனைக் கொன்று என் பழியைத் தீர்ந்துக் கொள்கிறேன்" என்று தனக்குள் நினைத்துக்கொண்டான்.
இப்படி நினைத்துக்கொண்டே அந்தக் கொடிய அசுரன் ஒரு பெரிய மலைப்பாம்பு போல் உருவம் எடுத்தான்.
அது எட்டு மைல் நீளம் இருந்ததோடு குறுக்கில் ஒரு பெரிய மலையைப் போல இருந்தது.
இந்தப் பூதகரமான வடிவத்தை எடுத்துக் கொண்டு வாயைத் திறந்துகொண்டு வழியில் படுத்துவிட்டான். அதன் வாய் ஒரு பெரிய குகையைப் போல இருந்தது.
கிருஷ்ணனும் அவனுடைய நண்பர்களும் அதனுடைய வாயைக் குகை என்று நினைத்துக்கொண்டு, உள்ளே நுழைவார்கள் என்று காத்திருந்தான். அவனுடைய கீழ் உதடு பூமியையும் மேல் உதடு வானத்தையும் தொட்டன. வாய் ஒரே இருட்டாக இருந்ததனால் அதன் நாக்கு ஓர் அகன்ற வீதி போல தோற்றமளித்தது. அவனுடைய மூச்சு பெரும் காற்றைப்போல அடிக்க அவனுடைய கண்கள் நெருப்பைப் போல பிரகாசித்தன.
சிறுவர்கள் தூரத்திலிருந்து அதைப்பார்த்தார்கள். அது ஓர் உயிருள்ள மலைப்பாம்பு என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மலைப்பாம்பு உருவம் கொண்ட ஓர் அழகிய குகை என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் தங்களுக்குள் தர்க்கம் செய்தார்கள். அது என்னதான் என்று தெரிந்து கொள்ளும்பொருட்டு அந்தக் குகை வாயிலுக்குள் நுழைய அவர்கள் விரும்பினார்கள்.
அது மலைபாம்பகாகவே இருந்தாலும் கூட தங்கள் பிரியமான கிருஷ்ணன் அதைக் கொன்று தங்களைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
கிருஷ்ணனின் வசீகரமான முகத்தை அவர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டே பலமாகச் சிரித்துக்கொண்டும் கைகளைக் தட்டிக்கொண்டும் குகைவாயில் போல இருந்த அந்த மலைப்பாம்பின் வாயில் அவர்கள் நுழைந்தார்கள்.
அது உயிருள்ள மலைப்பாம்பு என்பதும் அதற்குள் நுழைந்தால் நிச்சியம் மரணம்தான் என்பதும் கிருஷ்ணனுக்கு தெரியும். அதனால் தன் நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களை தடுக்கப் பார்த்தான்.
ஆனால் அதற்குள் கிருஷ்ணனைத் தவிர மற்ற எல்லோரும் உள்ளே நுழைந்துவிட்டார்கள். மலைப்பாம்பு தன் வாயை இன்னும் மூடவில்லை.
கிருஷ்ணனும் உள்ளே நுழைவதற்காக அது காத்துக் கொண்டிருந்தது.
உலகைக்காப்பவனான கிருஷ்ணன் ஓர் கணம் யோசனை செய்தான். ஒரே நேரத்தில் அரக்கனையும் கொல்ல வேண்டும், தன் நண்பர்களையும் காப்பாற்ற வேண்டும். அதை எப்படி செய்யலாம்? அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.
நேரே அவன் வாய்க்குள் புகுந்து, தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டான். அரக்கன் மூச்சுவிட முடியாமல் தவித்தான். கண்கள் பிதுங்க அரக்கன் இப்படியும் அப்படியும் உருண்டான். கடைசியில் செத்து ஒழிந்தான். கிருஷ்ணன் தன் நண்பர்களைப் பார்த்தான்.
பாம்பின் உடலுக்குள்ளிருந்த விஷவாயுவினால் அவர்கள் மயக்கமுற்றுக் கிடந்தார்கள்.
ஆனால் கிருஷ்ணனுடைய பார்வை அவர்கள்மீது விழுந்ததும் அவர்கள் எல்லோரும் மயக்கம் நீங்கி அந்த செத்த பாம்பின் உடலிலிருந்து வெளியே வந்தார்கள்.
படைப்புக் கடவுளான பிரம்மன், பிருந்தாவனத்தின் அதிசியச் சிறுவனான கண்ணனைப்பற்றி நிறையக் கேள்விபட்டிருந்தார். கிருஷ்ணனிடம் ஒரு வேடிக்கை செய்து, அவனுடைய சக்திகளைக் கண்டறிய வேண்டும் என்று நினைத்தார்.
அதனால் கன்றுகளை அவர் மறைத்துவைத்துவிட்டார்.!
கிருஷ்ணன் எங்கெல்லாமோ தேடித் பார்த்தான். கன்றுகள் அகப்படவில்லை.
அதனால் அவன் ஏமாற்றத்துடன் தன் நண்பர்களைத் தேடிக்கொண்டு திரும்பி வந்தான்.
ஆனால் என்ன ஆச்சரியம்! அங்கே நண்பர்களையும் காணவில்லை!
பிறகு தன் நண்பர்களை எங்கெல்லாமோ தேடினான். நண்பர்களையும் காணோம், கன்றுகளையும் காணோம்! பிறகு யோசனை செய்து பார்த்து, இவ்விதம் யாரோ சூது செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். கண்களை மூடிச் சற்றுநேரம் தியானம் செய்தான்.
உண்மையில் அவன் கடவுள் அல்லவா!
ஒரு நொடியில் அவனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது.
கிருஷ்ணன் புன்னகை பூத்து, "ஓ! இது பிரம்மனின் வேலையா? அவருக்குமேல் எனக்கும் விளையாட தெரியும்" என்று சொல்லிகொண்டான்.
உடனேயே அவன் அந்த கன்றுகளையும் சிறுவர்களையும் சிருஷ்டித்தான். அதாவது, தானே அந்தக் கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் ஆனான். பிரம்மன் சிருஷ்டித்த அந்தச் சிறுவர்களுக்கும் கன்றுகளுக்கும் கிருஷ்ணன் இப்பொழுது சிருஷ்டித்த சிறுவர்களுக்கும் கன்றுகளுக்கும் ஒரு வித்தியாசமும் இருக்கவில்லை.
இது பெரிய வேடிக்கையாகத்தான் இருந்தது.
கிருஷ்ணனே கன்றுகள், கிருஷ்ணனே அந்த கன்றுகளை மேய்க்கும் சிறுவர்கள், கிருஷ்ணனே அவர்கள் வைத்துகொண்டிருந்த விளையாட்டு பொருட்கள் எல்லாம் பல உருவங்களைக் கொண்ட கிருஷ்ணன் பிருந்தாவனத்தை அடைந்தான்.
தண்டைகளின் ஒலியும், புல்லாங்குழல்களின் ஒலியும் கேட்டதுமே, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்க வெளியே ஓடிவந்தார்கள்.
அந்தச் சிறுவர்கள் தாங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் அல்லர் என்பதை அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சிறுவர்களுக்கு அன்னமூட்டுவதிலும், அவர்களுடன் கொஞ்சிவிளையாடுவதிலும் இவர்கள் முன்பைவிட அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.
பகவானுக்கே அவர்கள் அன்னமூட்டினார்கள், பகவானுடனேயே அவர்கள் கொஞ்சி விளையாடினார்கள் என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்!
இப்படி ஒரு வருடம் கழிந்தது..
தாம் செய்த தந்திரத்தின் பலன் என்ன ஆயிற்று என்று பார்க்க, பிரம்மன் பிருந்தாவனம் வந்தார்.
அங்கே கன்றுகளும் சிறுவர்களும் வழக்கம்போல நடனமாடிக்கொண்டிருந்ததை பார்த்துத் திகைத்தார்.
"கன்றுகளையும் சிறுவர்களையும் நான் குகையில் அடைத்து வைக்க, அவர்கள் அங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க அவர்கள் இங்கே எப்படிக் கிருஷ்ணனுடன் இருக்கிறார்கள்!" என்று ஆச்சரியப்பட்டார்.
ஒருவேளை குகையில் இருந்த அவர்களைக் கிருஷ்ணன் விடுவித்துவிட்டானோ என்று நினைத்து குகைக்குச் சென்று பார்த்தார்.
என்ன ஆச்சரியம்! அவர்கள் எல்லோரும் அங்கே தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
எவ்வளவோ முயன்றும், இந்த மர்மத்தின் இரகசியத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
பிரம்மனின் குழப்பத்தைக் கிருஷ்ணன் கவனித்தான்.
கடைசியில் அவர்மீது இரக்கம் கொண்டு அவர் இந்த மர்மத்தை புரிந்து கொள்ளும்படி செய்தான்.
இப்பொழுது கிருஷ்ணன் தன் நண்பர்களுடனும் கன்றுகளுடனும் செல்வதைப் பார்த்தபோது, பிரம்மனுக்கு எல்லோரும் கிருஷ்ணனாகத் தோன்றினார்கள். கன்றுகளையும் காணோம், சிறுவர்களையும் காணோம். எல்லோரும் கிருஷ்ணனாகத்தான் தோன்றினார்கள்.
உடனே பிரம்மன் ஓடிச் சென்று கிருஷ்ணன் காலில் விழுந்தார்.
கிருஷ்ணனும் பிரம்மனை ஆசீர்வதித்தான்.
பிரம்மன் கிருஷ்ணனை மூன்று முறை வலம் வந்து வணங்கிவிட்டு தம் இருப்பிடம் திரும்பினார். பிரம்மன் ஒளித்து வைத்திருந்த எல்லாக் கன்றுகளையும் சிறுவர்களையும் கிருஷ்ணன் திரும்ப கொண்டு வந்தான்.
அவனுடைய மாயக் கன்றுகளும் சிறுவர்களும் மறைந்தனர்.
திரும்பக் கொண்டு வரப்பட்ட சிறுவர்கள் யமுனை நதிக்கரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணனின் வரவை அவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்.
ஒரு வருடகாலம் சென்றதும் அவர்களுக்கு தெரியாது; அந்த ஒரு வருட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளும் அவர்களுக்குத் தெரியாது.
கிருஷ்ணன் கன்றுகளுடன் அரைக்கணத்தில் திரும்பிவிட்டதாகவே அவர்கள் நினைத்தார்கள்.
அவர்கள் கிருஷ்ணனைப் பார்த்து, "இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துவிட்டாயே! நீ சென்றபிறகு நாங்கள் ஒரு கவளம்கூடச் சாப்பிடவில்லை. இந்தா, உட்கார்ந்து நீயும் எங்களோடு சாப்பிடு" என்று சொன்னார்கள்.
கிருஷ்ணன் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டுப் புன்முறுவல் பூத்து, அவர்களுடன் கூடச் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
பெரியாழ்வார் திருமொழி
முதற் பத்து
முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
கண்ணன் திருவவதாரச் சிறப்பு
(7)
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே.
19
யசோதையுடன் கூட இருந்த பேதை பெண்டிதர்களும்
கண்ணன் திருவாயினுள் எல்லா உலகங்களையும் கண்டு
களித்தனர். அவர்கள் வெகு ஆச்சர்யத்துடன்
ஒருவருக்கொருவர் "இவன் சாதாரண இடைச்சிறுவன்
இல்லை, இவன் காணற்கறிய தெய்வம், பெரும் கீர்த்தியும்,
கல்யாண குணங்களும் உடைய இச்சிறுவன்
மகத்தான மாய சக்தி படைத்தவன்"
என்று கூறிக்கொண்டு மகிழ்ந்தார்கள்.
(8)
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத் திசையும் சயமரம் கோடித்து
மத்தமா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே.
20
குழந்தை பிறந்த பன்னிரண்டாம் நாள் எங்கும் ஜெய
தோரணங்கள் கட்டி சிசுவிற்கு ஸ்ரீ கிருஷ்ணன் என்ற
நாமகரணம் சூட்டி மகிழ்ந்தார்கள் ஆயர்பாடியர்.
ஸ்ரீ கிருஷ்ணனை கையில் எடுத்து வைத்துக் கொண்டு
ஆனந்தித்தார்கள். மதம் பிடித்த யானைகள் நிரம்பிய
கோவர்த்தன மலையை தன் சிறு கையாலேயே
தூக்கிப்பிடித்து ஆயர்பாடி ஜனங்களையும், பசுக்களையும்
இந்திரனுடைய கொடுமையிலிருந்து காப்பாற்றிய
கண்ணபிரானின் பராக்ரமத்தைச் சொல்லி மகிழ்ந்தனர்.
(9)
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன், நங்காய்.
21
கண்ணன் ஒரு சிறு குழந்தை போல் தோன்றினாலும் அவன்
செய்யும் சேஶ்டிதங்களோ அவன் ஒரு அசாதாராணமானவன்
என்று யசோதைக்கும் மற்றும் அங்குள்ள பெண்டிதர்களுக்கும்
புரிய ஆரம்பிக்கிறது. குழந்தையை தொட்டிலில் விட்டால்,
தொட்டில் உடைய தன் இளம் கால்களால் உதைக்கிறான்.
சரி, தொட்டில் வேண்டாம் என்று இடுப்பில்
வைத்துகொள்ளும்போது இடுப்பை வளைத்து நெருக்குகிறான்,
கை கால்களை ஒடுக்கி மார்பில் அணைத்தாலோ வயிற்றில்
வேகமாக பாய்கிறான். இந்த விநோதமான விளையாட்டுக்களை
தாங்கமுடியாமல் தன் உடம்பே இளைத்து விட்டது என்று
யசோதை சக தோழிகளிடம் கூறுகிறாள்.
(குறிப்பு: இதற்கு மற்றொரு அர்த்தமாக, இச்சேஶ்டிதங்களால்
குழந்தையான கண்ணனுக்கு ஶ்ரமமேற்பட்டு அவன்
இளைத்துவிட்டான் என்று யசோதை கவலைப்படுகிறாள்
என்பதாக சில விமர்சகர்களின் கருத்து.)
(10)
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே.
22
திருவாய்ப்பாடியில் திருவவதரித்த கண்ணன்தான், செந் நெல்
தானியங்கள் நிரம்பியும்,வயல்களால் சூழப்பட்டதுமான,
திருக்கோட்டியூரில் ஸ்ரீமந்நாராயணனாக பரிபூர்ணனாய்
எழுந்தருளியிருக்கிறான். பூணூலை அணிந்த விஷ்ணுசித்தன்
(பெரியாழ்வார் ) அருளியதும், ஞானிகள் எப்பொழுதும்
அநுஸந்திக்க வல்லதும், நாரணன் கண்ணனாக அவதரித்த
விஷயத்தை விஸ்தரிப்பதுமான, இப்பத்து பாசுரங்களை
ஓதுபவர்களுக்கு பாவங்கள் அழிந்துபோகும் என்பதில் ஐய்யமில்லை.
No comments:
Post a Comment