11 September 2023

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று..

 மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று ...

ஆகவே கவியின் நினைவுகள் சில..








பாரதமாதாவுக்கு சிலை


பாரத தேவி, பாரத மாதா, பாரத மாதேவி, வந்தேமாதரம், தாயை வணங்குவோம் என்றெல்லாம் பாரதியின் தேசிய கீதங்களில் வருகின்றன. 

இந்தத் தாய்க்கு ஓர் உருவம் வேண்டாமா? என்று பாரதி எண்ணினார்.

 பாரத நாட்டுக்கு ஓர் அன்னை வடிவம் அளித்து, அதை வடித்திடச் செய்து அதற்கு பாரதமாதா என்று பெயர் சூட்டிப் பெருமை தந்தவர் பாரதி என்பதைத் தமிழ் மக்கள் அறிவது அவசியம்.

 புதுவையிலிருந்தபோது பாரதியும் வ.வெ.சு.ஐயரும் ஒரு நாள் பாரதமாதாவுக்கு ஒரு உருவம் தரவேண்டும் என்று எண்ணினார்கள்.

 அப்போது ஓவியக் கலையில் சிறந்ததோர் மேதை பேத்ரீஸ் என்றொருவர் பிரெஞ்சுக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார்.

 அவரைச் சந்தித்து பாரதமாதாவின் உருவப் படம் ஒன்று வரைய வேண்டும், அதன் அமைப்புகள் எப்படியிருக்க வேண்டும் என்று விவாதித்தார்கள். 

பாரதமாதா இந்தியாவின் நில அமைப்பு அப்படியே பாரததேவியின் உருவாகக் காட்சியளிக்க வேண்டும்.

 தலைமேல் ஒரு தங்க கிரீடம், தலைமுடி இருபக்கமும் விரிந்து, இமய பர்வதத்தையும், சிந்து, கங்கை ஆறுகள் இரு மருங்கிலும் ஓடிப் போய்வது போலவும், இலங்கையை ஒரு தாமரை போலவும் அமைத்திட வேண்டும் என்பது போன்ற பாரதமாதாவின் உருவ அமைப்பின் கருத்துக்களை ஓவியமாக வரைய திரு பேத்ரீஸ் அவர்களிடம் விளக்கினார்கள். 

அவர் ஒரு சில நாட்களில் பாரததேவியின் ஓவியத்தை எழுதி முடித்தார்.

பாரதமாதாவின் உருவ அமைப்பைப் பற்றி வ.வெ.சு. ஐயரும் பாரதியும் விவாதித்த போது ஒரு கருத்து மோதல் ஏற்பட்டது.

 வ.வெ.சு. ஐயர் பாரதமாதாவுக்கு ஆபரணங்கள் வேண்டாம், வெள்ளையன் நாட்டைக் கொள்ளை கொண்டு வறுமை நிலையில் வைத்துள்ளான் என்றார். 

பாரதி சிறிது நேரம் சிந்தித்து விட்டு, இல்லை இல்லை, நமது நாட்டில் இன்னும் செல்வங்கள் ஏராளமாக உள்ளன. 

எனவே பாரதமாதா சர்வாலங்காரபூஷிதையாகவே காட்சி தரவேண்டும் என்றார். 

அதன்படி பின்னர் படத்தில் திருத்தங்கள் செய்து நகைகள் அணிவிக்கப் பட்டன.

 பின் இதை மண்ணில் சிலையாக உரிய வண்ணங்களோடு வடித்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

 அக்காலத்தில் புதுவையில் குயவர்பாளையம் என்ற ஊரில் பொம்மைகள் செய்வதில் சிறந்த கலைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் வடித்தெடுக்கும் பொம்மைகள் எழில் மிகுந்தவை. வெளிநாடுகளுக்கு அப்போது எடுத்துச் செல்வார்கள். 

ஓவியக்காரர் பேத்ரீஸ் அவர்கள் எழுதிய பாரதமாதாவின் ஓவியத்தைப் போல களிப்பு மண்ணினால் சிலையை வடித்து, வண்ணங்களைத் தீட்டிக் கொடுத்தார்கள். குயவர்பாளையம் சிற்பக் கலைஞர்கள் சிறிதும் பெரியதுமாக இரு அளவுகளில் செய்தார்கள்.

 அதில் பெரிய அளவிலுள்ள ஒன்று இப்போது அரசின் பூங்காவில் வைக்கப் பட்டுள்ளது. நான் அமைச்சராக இருந்தபோது தான், இந்தச் சிலை அரசுப் பூங்காவில் தனியிடம் ஒதுக்கி நிறுவப்பட்டது.

 அதற்கொரு சிறு விழாவும் நடத்தப் பட்டது. இந்தச் சிலையில் பாரதமாதா கால்களில் விலங்குகள் இட்ட நிலையில் காட்சியளிக்கிறாள். 

அவளது வலதுகரம் முகவாய்க்கட்டில் ஊன்றிய நிலையில் உள்ளது. பாரதியின் யோசனையின் பேரிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. 'என் அன்னை சிந்தனையில் இருக்கிறாள்' என்பதே பாரதி இதற்குக் கூறிய விளக்கம்.

(தோழர் ப.ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பொதுவுடமைப் பத்திரிகை "தாமரை". பாரதி நூற்றாண்டு விழாவின் போது டிசம்பர் 1981இல் "தாமரை" ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. அதில் பல அறிஞர்கள் பாரதி பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். அதில் புதுச்சேரி வ.சுப்பையா அவர்களின் கட்டுரையிலிருந்து  இந்த பகுதி ....  இவர் பாரதி புதுவையில் இருந்த காலத்தில் அவரோடு பழகியவர்)




8. பாரத மாதா


தான தனந்தன தான தனந்தன

தானனத் தானா னே.


1.முன்னை இலங்கை அரக்கர் அழிய

முடித்தவில் யாருடை வில்? – எங்கள்

அன்னை பயங்கரி பாரத தேவி நல்

ஆரிய ராணியின் வில்.


2. இந்திர சித்தன் இரண்டு துண்டாக

எடுத்தவில் யாருடைய வில்? – எங்கள்

மந்திரத் தெய்வம் பாரத ராணி,

வயிரவி தன்னுடைய வில்.


3.ஒன்று பரம்பொருள், நாம்அதன் மக்கள்

உலகின்பக் கேணி என்றே – மிக

நன்று பல்வேதம் வரைந்தகை பாரத

நாயகி தன்திருக் கை.


4. சித்த மயமிவ் உலகம், உறுதி நம்

சித்தத்தில் ஓங்கி விட்டால் – துன்பம்

அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்

ஆரிய ராணியின் சொல்.


5. சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்

தட்டி விளையாடி – நன்று

உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி

ஒளியுறப் பெற்ற பிள்ளை.


6. காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது

கல்லொத்த தோள்எவர் தோள்? – எம்மை

ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்

ஆரிய தேவியின் தோள்.


7. சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்

தந்த தெவர் கொடைக்கை? – சுவைப்

பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்

பாரத ராணியின் கை.


8. போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை

புகன்றது எவருடை வாய்? – பகை

தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத

தேவிமலர் திரு வாய்.


9. தந்தை இனிதுறந் தான் அரசாட்சியும்

தையலர் தம்முறவும் – இனி

இந்த உலகில் விரும்புகி லேன் என்றது

எம் அனை செய்த உள்ளம்.


10.அன்பு சிவம், உல கத்துயர் யாவையும்

அன்பினிற் போகும் என்றே – இங்கு

முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி.


11. மிதிலை எரிந்திட வேதப் பொருளை

வினவும் சனகன் மதி – தன்

மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது

வல்ல நம் அன்னை மதி.


12. தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்

செய்த தெவர் கவிதை? – அயன்

செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத

தேவி அருட் கவிதை.




கண்ணன் பாட்டு


கண்ணம்மா-எனது குலதெய்வம்

(ராகம் -- புன்னாகவராளி)


பல்லவி

நின்னைச் சரணடைந்தேன் -- கண்ணம்மா!

நின்னைச் சரணடைந்தேன்!



சரணங்கள்

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று  (நின்னை)

1


மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்

குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னை)

2


தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவுபெறும் வணம் (நின்னை)

3


துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட (நின்னை)

4


நல்லது தீயது நாமறியோம் அன்னை!

நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்னை)

5




















வாழ்க கவியின் புகழ்..
வளர்க கவியின் புகழ்.....!


அன்புடன்
அனுபிரேம் 💛💙💚💜💛




1 comment:

  1. நேற்று உங்கள் ஷார்ட்ஸ் பார்த்தேன். இங்கு பார்க்காமல் விட்டுவிட்டேன். கவியின் புகழ் வாழ்க!

    கீதா

    ReplyDelete