11 December 2019

மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.......


வாழ்க வளமுடன்.....


இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.......
 கவி பற்றிய நினைவுகள் சில ...

புதுச்சேரியில் பாரதியார்  குடியிருந்த வீடு விளக்கெண்ணெய் செட்டியார் என்று பாரதியாரால் பெயரிடப்பட்ட ஒருவரின் பழைய இல்லம்.

இன்றோ நாளையோ இடிந்து தலையில் விழக்கூடிய நிலையில் இருந்தது அந்த வீடு.

முழுவதும் இடித்துவிட்டுக் கட்டினாலொழிய அந்த வீட்டில் வாழ்வது என்பது முடியாத நிலை.

அதற்கு நேர் எதிரில் கெட்டியான ஒரு மச்சுவீடு. அந்த வீட்டுக்கு ஒரு போலீஸ் அதிகாரி குடிவருவதாகத் தகவல் இருந்தது.

 பாரதியாரை வேவு பார்க்க ஏராளமான போலீஸார் சுற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் நேரெதிர் வீட்டுக்கு ஒரு போலீஸ் அதிகாரி குடிவருவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?


அவர் குடிவருவதைத் தடுக்க வேண்டுமானால் இவர்கள் அந்த வீட்டுக்குக் குடி போக வேண்டும், அந்தப் போலீஸ் அதிகாரி இந்த பழைய வீட்டுக்குக் குடி வரமாட்டார்.


வேறு வழியில்லை அந்த மச்சுவீட்டுக்கு பன்னிரெண்டு ரூபாய் வாடகை என்றபோதும், அது அதிகம் தான் என்றாலும் அங்கு குடி போனார்கள்.

அது கார்த்திகை மாதம்.


இவர்கள் புதிய வீட்டுக்குக் குடிபோன மறுநாள் இரவு கடுமையான மழை, அதனைத் தொடர்ந்து பேய்க்காற்று வீசத் தொடங்கியது.

ஆம்! புயல்காற்று தொடங்கிவிட்டது.

 பாரதியாரின் இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் அறையில் படுத்துவிட்டனர்.

பாரதியும் செல்லம்மாவும் விடிய விடிய கண்விழித்து இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.


நடு இரவில் சுற்றுப் புறங்களில் மரங்கள் 'மடேர் மடேர்' என்று ஒடிந்து விழும் ஓசை.

ஓசைகேட்டு எழுந்த சகுந்தலாவை பாரதியார் ஆறுதல் சொல்லி "காற்றும் மழையும் பெரிதாக இருக்கிறது பாப்பா, பயப்படாதே" என்று ஆறுதல் சொன்னார்.

விடியற்காலையில் மகளை அழைத்துக் கொண்டு பாரதி வெளியே வந்தார். அப்போது வாயுதேவனின் விளையாட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


சாலை மரங்களெல்லாம் வேரோடு பெயர்ந்து விழுந்து கிடந்தன. ஏராளமான காக்கைகளும் ஏனைய பறவையினங்களும் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்தன.

தந்தி மரங்கள் அறுந்து விழுந்து கிடந்தன.

வரிசையாக தென்னை மரங்கள் அனைத்துமே வீழ்ந்து கிடந்தன.


அப்போது பாரதி பாடிய பாடல்தான்: "காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே!" எனத் தொடங்கும் பாடல்.


அதில் வரும் சில வரிகள் அவருடைய அனுபவத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.


அது, "நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, இந்த நேரமிருந்தால் என்படுவோம்? காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக் காத்தது தெய்வ வலிமையன்றோ" என்ற பாடல்.


புயற் காற்று

ஒரு கணவனும் மனைவியும்

மனைவி:

காற்ற டிக்குது, கடல் குமுறுது,
கண்ணை விழிப்பாய்,நாயகனே!
தூற்றல் கதவு சாளர மெல்லாம்
தொளைத் தடிக்குது, பள்ளியிலே. 1

கணவன்:

வானஞ் சினந்தது;வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு,
தேவி,அருள்செய்ய வேண்டுகின்றோம். 2

மனைவி:

நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே,
இந்தநேரமிருந்தால்என்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமையன்றோ?. 3

பு{ நளவருடம்- கார்த்திகை மாதம் 8ஆம் தேதி புதன்கிழமை இரவு,
புதுவையில் வீசிய புயற்காற்றைக் குறிக்கும். நள வருஷம் 1916-17ஆம்
வருடத்தைக் குறிப்பதாகும்.}
முந்தைய பதிவுகள் .....
கவியை போற்றுவோம் ....

மகாகவி பாரதியாரின் நினைவு நாள்..


வளர்க கவியின் புகழ்.....!அன்புடன்
அனுபிரேம்
5 comments:

 1. பாரதியை நினைவுகூர்ந்த விதம் அருமை.

  ReplyDelete
 2. அறியாத, அரிய விடயம் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. பாரதியாரின் பிறந்த நாளன்று அவரைப்பற்றி அறியாத செய்திகளை அறிய தந்து விட்டீர்கள். கணவனும், மனைவியும் பாடுவதாக அமைந்த பாடல் சிறப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 4. பாரதியின் பாடல் பகிர்வு அருமை.
  பாரதி பிறந்த நாள், நினைவு நாளில் நானும் முன்பு பதிவுகள் போட்டது நினைவு வருகிறது.
  பாரதி பிறந்த நாளில் அவர் கவிதைகள் கேட்டு மகிழ்ந்தேன், பொதிகையில் வைத்த பாரதி படம் பார்த்தேன்.

  ReplyDelete