28 December 2019

திருப்பாவை – பாசுரம் 12

கனைத்து இளம் கற்றெருமை:

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?









கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி *

நினைத்துமுலைவழியே நின்றுபால்சோர *

நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்வன்தங்காய்! * 

பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றி *

சினத்தினால்தென்னிலங்கைக் கோமானைச்செற்ற *

மனத்துக்கினியானைப் பாடவும்நீவாய்திறவாய் *

இனித்தானெழுந்திராய் ஈதென்னபேருறக்கம்? * 

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.




பொருள்: 

பால் கறப்பார் இன்றி, இளங்கன்றுகளுடைய எருமைகளின் முலைக்காம்புகள் கடுத்து,

அவை தங்களது கன்றுகளை நினைத்த மாத்திரத்தில்,

அவற்றின் முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து,

வீட்டின் தரை ஈரமாகி,

அதனால் வீடெங்கும் பாலும் மண்ணும் கலந்து சேறாகியிருக்கும் இல்லத்துக்குத் தலைவனான பெருஞ்செல்வனின் தங்கையே!


பனி எங்கள் தலையில் விழுவதை பொருட்படுத்தாமல்,

உன் மாளிகையின் வாசற்காலைப் பற்றி நின்ற வண்ணம்,

 (சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால்) பெருங்கோபம் கொண்டு இலங்கை வேந்தன் ராவணனை மாய்த்தவனும்,

 நம் உள்ளத்துக்கினியவனும் ஆன ஸ்ரீராமபிரானின் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ ஏதும் பேசாதிருக்கலாமா!

இப்போதாவது விழித்தெழுவாய்!

 ஊரில் உள்ளோர் அனைவரும் எழுந்து விட்ட பின்னரும் நீ பெருந்தூக்கத்தில் இருக்கலாமா!

உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருள் தான் என்ன?





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. சிறப்பான பாசுரம். விளக்கமும் சிறப்பு. தொடரட்டும் பாசுரங்கள்.

    ReplyDelete