09 December 2019

குருவாயூர் ஏகாதசி

குருவாயூர் ஏகாதசி - 8.12.19




கார்த்திகை மாதத்தில்  வரும்  ஏகாதசி மட்டும் குருவாயூர் ஏகாதசி என்று கேரளாவில்  சொல்லப்படுவதற்கு காரணம் கஜராஜன் குருவாயூர் கேசவன் என்ற யானைதான்.




1914 – வல்லிய ராஜா என்னும் நிலம்பூர் நாட்டு ராஜா... உள்நாட்டுக் கலகத்தில் அவஸ்தைப்பட்ட தன் குடும்பத்துக்காக வேண்டி தன்னிடம் இருந்த பல யானைகளில் ஒன்றை, குருவாயூர் ஸ்ரீகோயிலுக்கு, தானம் அளித்தார்.

அந்த பத்து வயதுக் குட்டி யானையின் பெயர்  கேசவன்.

கேசவன் அமைதியான துறுதுறுப்பான சுபாவம்,சாப்பிடும் போதும், விளையாடும் போதும், ஸ்ரீகோயிலைப் பார்த்தவாறே தான் எதுவும் பண்ணும்.. அங்கிருந்து தன் கண்ணை மட்டும் எடுக்கவே எடுக்காது..




பத்து வயசு குட்டி யானையாக குருவாயூருக்கு வந்த கேசவன் குருவாயூரப்பனின் பரம பக்தனாக மாறியது. யானையோட்டத்தில் வென்று, கஜராஜன் பட்டம் பெற்றது.

குருவாயூருக்கு வந்தது முதல் மனிதர்களைப்போல அதுவும் ஒவ்வொரு ஏகாதசியன்றும் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்கத் துவங்கி எல்லோரையும் வியப்பிலாழ்த்தியது.

பக்கத்து ஊர்களில் நடக்கும் உற்சவங்களுக்கு இது செல்லாது. முரண்டு பிடிக்கும்....அங்குசத்தால் அடி வாங்கும்....

ஆனால் அலறாது! பிளிறாது! கண்ணீர் உகுக்கும்! நீர் பெருக்கும்! ஆனால் அப்பவும் குருவாயூரை விட்டு மட்டும் செல்லவே செல்லாது!

குருவாயூரப்பன் ஊருலாச் சிலையை (உற்சவர்), மலையாளத்தில், திரு-வெளி என்பார்கள். ஸ்ரீவேளி, சீவேளி என்று பின்னாளில் திரிந்து விட்டது...தட்டையான பலகையில், மாயோனின் உருவம் பொறித்து  இருக்கும்...அதுக்கு “திடம்பு”-என்று பெயர் .







கேசவன், அந்தத் “திடம்பை“ யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே தன் முன்னங்காலை மடக்கும்!

மற்ற யாராய் இருந்தாலும், பின்னங்கால் வழியாக ஏறித் தான், யானை மேல் உட்கார வேண்டும்...

மேலும்  திடயுலாவின் போது, வித்தியாசமாக நடந்து காட்டும்..முன்னும் பின்னும், வலமும் இடமும், நேர் வாட்டிலும், குறுக்கு வாட்டிலும், என அசைந்து அசைந்து செல்வது ஏதோ நடனம் ஆடுவது போலவே இருக்குமாம்...!

வேறு கோவில்களுக்கு வரமறுத்த இதனை பலவிதத்திலும் தண்டித்தனர். சீவேலி திடம்பை வேறு யானை மீது ஏற்றி கேசவனை ஒதுக்கி வைத்தனர். தண்டனைகளை அது அமைதியாக ஏற்றுக் கொண்டது.





1970 மார்கழி மாசம் – குருவாயூர் ஸ்ரீகோயிலில் ஏகாதசி விளக்கு விழா....!விளக்கு மாடம் முழுக்க சுடர்விடும் விளக்குகள்.... அம்மே நாராயணா, தேவீ நாராயணா என்ற கோஷங்கள்!

நம்ம கேசவன் மேல் மாயக் கண்ணன் உலா வர வேண்டிய முறை..

ஆனால் ஸ்ரீவேளி உற்சவத்தை இன்னொரு யானையைக் கொண்டு முடித்து விட்டார்கள்... கோயில் நடை சார்த்தப்பட்டது...

கோயிலுக்கு வெளியே கொட்டடியில் படுத்துக் கொண்டான் கேசவன்...

அன்றைய ஏகாதசி இரவில் தீ பற்றிக் கொண்டது...

மேற்குச் சுற்றம்பலத்தில் பிடித்துக் கொண்ட தீ, கூத்தம்பலத்துக்குப் பரவி, கிடு கிடுவென்று வளர்ந்து, நாலம்பல விளக்கு மாடங்களைப் பற்றிக் கொண்டது....

ஏதோ புகைச்சல் வாசனை பார்த்து, யாரோ கூவ, ஒரு சிலர் மட்டும் விழித்துக் கொண்டு பதறினார்கள்....


அம்பலத்தைத் தன் பார்வையில் இருந்து அகற்றாத கேசவன் மட்டும், நெருப்பைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு, எழுந்து ஓடினான்.....

அதிகம் பிளிறாத கேசவன், அன்று நள்ளிரவில் படு பயங்கரமாகப் பிளிறினான்.....கேசவன் பிளிறலில் மொத்த குருவாயூரும் விழித்துக் கொண்டது....

தன் பங்கிற்கு மணல் மூட்டைகளை எடுத்துப் போட்டு தீயை அணைத்தது கேசவன்....


குருவாயூரப்பன் ஸ்ரீவேளியான “திடம்பு”, மீண்டும் கேசவன் மேல் ஏறியது.....கேசவன் வெகு நாள் கழித்து, முன்னங் கால்களை மடித்தான்....ஸ்ரீவேளி பிடித்தவர், அவன் கால் மேல் ஏறி, அவன் மேல் ஏறினார்...பின்னங் கால்கள் வழியாகப் பலரும் ஏறினார்கள்...


மீண்டும் கேசவன்-கண்ணன் உலா!





டிசம்பர் 1976………அன்று! மோட்ச ஏகாதசி என்னும் வைகுந்த ஏகாதசி!

குருவாயூரப்பன் “திடம்பை”, கேசவன் மேல் ஏற்றுகிறார்கள்..ஏற்றிய
 சில நிமிடத்தில் கேசவன்  கீழே சாய்ந்தது.

அவசரம் அவசரமாக, "திடம்பை", இன்னொரு யானைக்கு மாற்றுகிறார்கள்...தொடங்கிய புறப்பாட்டை முடிக்கணுமே....


இன்னொரு யானையின் மேல், குருவாயூரப்பன் உலா வரும் அழகை,
இன்பமாகப் பார்த்து முடித்தான் கேசவன்..!
வீதியுலா முடிந்தது! ஸ்ரீவேளி முடிந்தது! மாறிலா அன்பும் முடிந்தது!

 பின்னர் கோவிலிருக்கும் திசையை நோக்கி துதிக்கையைத் தூக்கி வணங்கியவாறு உயிர்நீத்து குருவாயூரப்பனோடு ஐக்கியமாயிற்று.

 இதனால்தான் இந்த ஏகாதசி மேலும் சிறப்பாயிற்று.

கேரள அரசு, கேசவனைக் “கஜராஜன்” என்று பிற்பாடு கொண்டாடி…குருவாயூர் வீதியிலே, பன்னிரெண்டு அடிச் சிலையாக எழுப்பியது...





கேசவனின் நினைவு நாளுக்கு  கஜராஜன் கேசவனின் சிலைக்கு மற்ற யானைகள் மாலையிட்டு மரியாதை செய்யும்.

மற்றொரு சிறப்பும் குருவாயூர் ஏகாதசிக்கு உள்ளது. இன்று தான் பகவத்கீதை பிறந்த தினமும்கூட என்பதால் அந்த ஏகாதசி பகவத்கீதை தினமாகவும் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இன்று அழகிய முகப்பட்டம் கட்டிய யானைகள் ஊர்வலம் வரும்.

ஏகாதசிக்கு ஒருமாதம் முன்பிருந்தே தினமும் இரவில் ஏகாதசி விளக்கேற்றும் வைபவம் நடக்கும் ஏகாதசியன்று இரவில் இறுதியாக விளக்குகள் ஏற்றப்பட்டு கோவில் முழுவதும் ஜொலிக்கும்.

 பிரம்மாண்டமான முறையில் யானைகளில் ஊர்வலமும் நடக்கும்.





பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து

எட்டாம் திருமொழி -- பொன்னியல்

அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்


பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து *
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு *
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த *
அஞ்சனவண்ணனே! அச்சோவச்சோ ஆயர்பெருமானே! அச்சோவச்சோ.

3



நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன *
தேறிஅவளும் திருவுடம்பில்பூச *
ஊறியகூனினை உள்ளேயொடுங்க * அன்று
ஏறவுருவினாய்! அச்சோவச்சோ எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ.

4


ஓம் நமோ நாராயணாய ....


அன்புடன்
அனுபிரேம்




1 comment:

  1. சிறப்பான தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    எத்தனை அறிவு கேசவனுக்கு!

    ReplyDelete