23 December 2019

திருப்பாவை – பாசுரம் 7

கீசு கீசு என்று
பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?












கீசுகீசென்றுஎங்கும் ஆனைச்சாத்தன் * கலந்து 

பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! * 

காசும்பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து *

வாசநறுங்குழலாய்ச்சியர் * மத்தினால் 

ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ? * 

நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி *

கேசவனைப்பாடவும் நீகேட்டேகிடத்தியோ? * 

தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.




பொருள்: 

அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா?

வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும்,

அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும்,

ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை?

எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே!

 நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.










ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

No comments:

Post a Comment