19 December 2019

திருப்பாவை – பாசுரம் 3

ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி, நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்










ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி *

நாங்கள்நம்பாவைக்குச் சாற்றிநீராடினால் *

தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து *

ஓங்குபெருஞ்செந்நெ லூடு கயலுகள *

பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்ப * 

தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி 

வாங்க * குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள் *


நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய். (2)





பொருள்: 

சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன்.

அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம்.

இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும்.

மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும்.

மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும்.

குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும்.

இத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன.

ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.









ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

No comments:

Post a Comment