20 December 2019

திருப்பாவை – பாசுரம் 4

ஆழிமழைக்கண்ணா -

நாடெங்கும் மழை நீரை பெய்யச் செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்:





ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல் *

ஆழியுள்புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி *

ஊழிமுதல்வ னுருவம்போல்மெய்கறுத்து *

பாழியந்தோளுடைப் பற்பநாபன்கையில் *

ஆழிபோல்மின்னி வலம்புரிபோல்நின்றதிர்ந்து *

தாழாதேசார்ங்கமுதைத்த சரமழைபோல் *

வாழஉலகினில்பெய்திடாய் * நாங்களும் 

மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்.






பொருள்:

மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள்.

உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே.

கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து,

வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி,

வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி,

வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக!


அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம்.

மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    திருப்பாவை பாசுரம் நான்காவது பாடலை பாடி களித்தேன். ஸ்ரீ ஆண்டாளின் எளிய வாக்கியங்களின் பொருளை மிக அழகாக உணர்த்தி உள்ளீர்கள். பாடலும் பொருளும் மிக நன்றாக உள்ளது. இனியும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete