31 December 2019

திருப்பாவை – பாசுரம் 15

எல்லே! இளங்கிளியே!


"எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!"








எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? *

சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன் *

வல்லைஉன்கட்டுரைகள் பண்டேஉன்வாயறிதும் *

வல்லீர்கள்நீங்களே நானேதானாயிடுக *

ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை *

எல்லாரும்போந்தாரோ? போந்தார்போந்தெண்ணிக்கொள் *

வல்லானைகொன்றானை மாற்றாரைமாற்றழிக்க 

வல்லானை * மாயனைப் பாடேலோரெம்பாவாய்.




பொருள்:

ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.

அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.

அப்போது அவள், சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை.

நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள்.

நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.

அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும்.

அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள்.

அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.

தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார்.

வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே எழுந்து வருவாய், என்கிறார்கள்.





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.




அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. பாடலும் அடிகளுக்கான விளக்கமும் அருமை. சிறப்பு.
    இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. படங்களும், பாடல் விளக்கமும் அருமை.
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  3. சிறப்பான பாசுரம். விளக்கமும் படங்களும் நன்று.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    பாசுரப் பாடலும், அதன் விளக்கமும், மிக அருமை. பொருத்தமான படங்கள் இன்னமும் பதிவுக்கு அழகு சேர்க்கின்றன. ஆண்டாள் தரிசனம் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    வளம் கொழிக்கும் வருடமாக இப்புத்தாண்டு வந்தடைய இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete