வாழ்க வளமுடன்.....
இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்....... ஆகவே கவியின் நினைவுகள் சில..
'புதுச்சேரியில் பாரதி' சில நினைவுகள் புதுவை பொதுவுடமைக் கட்சித் தலைவர் தோழர் வ.சுப்பையா. (தோழர் ப.ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பொதுவுடமைப் பத்திரிகை "தாமரை". பாரதி நூற்றாண்டு விழாவின் போது டிசம்பர் 1981இல் "தாமரை" ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. அதில் பல அறிஞர்கள் பாரதி பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். அதில் புதுச்சேரி வ.சுப்பையா அவர்களின் கட்டுரையை இது. இவர் பாரதி புதுவையில் இருந்த காலத்தில் அவரோடு பழகியவர்)
பாரதி புதுவைக்கு 1908ம் ஆண்டு வந்து 1918ம் ஆண்டு நவம்பர் வரை தங்கியிருந்த காலத்தில்தான் அவரது கவிதைகளில் பெரும்பகுதி எழுதப் பட்டன எனலாம். சென்னையில் அவரை ஆசிரியராய்க் கொண்டு வெளியான "இந்தியா" என்ற வார ஏட்டினை பாரதி புதுவையில் வெளியிட்டார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் அரசியல் அடக்குமுறை, பொருளாதாரச் சுரண்டல் கொள்ளை இவைகளைக் கடுமையாக விமர்சித்திட்ட விறுவிறுப்பான கட்டுரைகள், கேலிச்சித்திரங்கள் பிரசுரிக்கப்பட்டன.
பாரதியின் உரைநடையும், கவிதைகளைப் போலவே எளியனதாகவும், உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் வேகமுடையதாகவும் இருந்தது. அவர் இயற்றிய கவிதைகளைப் போல் இரு மடங்கு இருக்கும் அவரது உரைநடை இலக்கியங்கள். பாரதி ஆங்கில இலக்கியமும் நன்கு பயின்றவர். கர்மயோகி என்ற ஆங்கில மாதப் பத்திரிகையை வெளியிட்டார்.
பாரதி 'பொன்வால் நரி' (A fox with golden tail) என்கிற ஆங்கில கதை நூல் ஒன்றை எழுதி பிரசுரித்தார். பாரதி இயற்றிய கவிதையில் பல அரசியல் நிகழ்ச்சிகளையொட்டி அவரது சிந்தனையில் தோன்றிய செறிவுடைய கருத்துக்களின் வடிவங்களாக அமைந்திட்டன.
பாரதி புதுவையில் வாழ்ந்த போது நான் சிறுவன். அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் என் வீட்டு வழியாக அங்கிருந்த அவரது நண்பர் கருணாநிதி கிருஷ்ணசாமிப் பிள்ளை அவர்களின் இல்லத்திற்குப் போகும்போது என்னுடன் இருந்த பையன்கள் பாரதியைக் காட்டி 'இதோ சுதேசி ஐயர் போகிறார்' என்பார்கள்.
ஆனால் சில ஆண்டுகள் கடந்தபின் பாரதியின் பணிகளுக்குத் துணையாக இருந்து செயல்பட்ட பல நண்பர்களிடமிருந்து, அவர் அப்போது இயற்றிய கவிதையினையும், அவைகளை யொட்டிய சில நிகழ்ச்சிகளையும் அவர்கள் வாய் வழியாகக் கேட்டறிந்தேன்.
குறிப்பாக, பாரதியோடு சில காலம் புதுவையிலிருந்த சிறந்த தமிழ் எழுத்தாளர் வ.ரா. சென்னையில் 1933ஆம் ஆண்டு 'மணிக்கொடி' வாரப்பத்திரிகை நடத்திய போதும், அதைத் தொடர்ந்து அவர் இலங்கையில் 'வீரகேசரி' பத்திரிகை ஆசிரியராயிருந்து செயலாற்றிய போதும், சென்னைக்குத் திரும்பியதும் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர் என்னோடு சீரிய நட்பு முறையில் பழகியவர். அவரும் பாரதியின் மனைவி செல்லம்மாள் இருவரும் சேர்ந்து 1934ஆம் ஆண்டு புதுவையில் என்னுடைய இல்லத்துக்கு வந்தார்கள்.
வ.ரா. அவர்கள் பாரதியார் இயற்றிய சில கவிதைகளைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். மேலும் பாரதியாருடன் நெருங்கி அவரது பணிகளில் பங்கெடுத்த அரசு பள்ளி ஆசிரியர் (மறைந்த) முத்துக்குமாரசாமி பிள்ளை அவர்களும், சிவா, ஜெயராம பிள்ளை இவர்கள் சொல்ல சில தகவல்களை அறிந்தேன். அவற்றுள் பயனுள்ள பொருத்தமான சில நிகழ்ச்சிகளை மற்றவர்களுக்கும் சொல்லி பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
ஒரு நாள் காலை பாரதி வெள்ளாளர் வீதியிலிருந்த கிருஷ்ணசாமிப் பிள்ளை வீட்டில் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது மாடியின் தளத்தில் அவரது பெண் குழந்தை தடதடவென்று ஓடியது. இந்த சத்தம் கேட்டதும் கிருஷ்ணசாமி பிள்ளை சிறிது அதிர்ச்சியடைந்து, 'ஓடாதே பாப்பா, விழுந்திடுவே' என்று குரல் கொடுத்தார். 'காக்கா ஆப்பத்தைப் பிடுங்குது' என்றது குழந்தை.
உடனே பாரதி, "ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, எத்தித் திருடும் அந்தக் காக்கை, அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா" என்று சொல்லிவிட்டு பிறகு அந்தக் கவிதையை எழுதி முடித்தாராம்.
சிறுவர்களைக் கண்டால் பாரதிக்கு இளைய பாரதம் எப்படியிருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் துடிக்குமாம்.
புதுவை ஈஸ்வரன் கோயில் தெருவில் அவர் குடியிருந்த வீட்டுக்கு வெளி குறட்டில் ஒரு நாள் அவர் நடந்து கொண்டிருந்தார். அப்போது தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞன் வளைந்து குனிந்து நடந்து போவதைப் பார்த்தார். உடனே அவனை அழைத்தார்.
அவன் முதுகை நிமிர்த்தி வைத்து, அருகில் குப்பை மேட்டில் நின்றிருந்த சேவலைக் காட்டி, "அதோ பார்! அந்தச் சேவலைப் போல் நீ நிமிர்ந்து நட!" என்றார் என என்னிடம் ஒரு நண்பர் கூறினார்.
ஒரு நாள் பாரதியின் சிந்தனையில் வெண் பரிதிகள் பூட்டிய ரதம் வேகமாக ஓடத் தொடங்கியது. பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை கவிதையாகப் புனைந்திட அவர் உள்ளத்திலே கருத்தோவியத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்.
அவரது வீட்டிற்கு வெளியிலிருந்து ஒரு புஷ் வண்டிக்காரனை அழைத்தார்; ஏறி அமர்ந்தார் வண்டியில், முன்னிருந்த சுக்கானைக் கையிலே பிடித்தார். ஓட்டடாஇரதத்தை என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார். புஷ் வண்டிக்காரன் பின் புறத்திலிருந்த கைப்பிடியை வலுவாகப் பிடித்துக் கொண்டு, தள்ளிக்கொண்டே ஓடினான்.
பாரதி, "ஓட்டடா, ரதத்தை! ஓட்டடா ரதத்தை! ஓட்டடா ரதத்தை!" என்று பாடிக்கொண்டே புதுவையின் பல தெருக்களைச் சுற்றிவிட்டு வீடு திரும்பியதும், பாஞ்சாலி சபதம் என்ற செய்யுள் காவியத்தை எழுதினார் என்று இந்த நிகழ்ச்சியை என்னிடம் நண்பர்கள் சொன்னார்கள்.
(இணையத்திலிருந்து )
மகாகவியை நினைவுகூர்ந்த விதம் சிறப்பு.
ReplyDeleteஅறியாத தகவல்கள், சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்
ReplyDeleteதுளசிதரன்
அனு, நினைத்துக் கொண்டேன் கண்டிப்பாக நீங்க பாரதி பற்றி தகவல்கள் கொடுப்பீங்க என்று. சிறப்பான தகவல்கள். மகாகவியுடன் பழகிய சுப்பையா அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
ReplyDeleteகீதா