21 December 2021

ஆறாம் பாசுரம் - புள்ளும் சிலம்பின

 இனி, 6ஆம் பாசுரம் முதல் 15ஆம் பாசுரம் வரை, ஆண்டாள் நாச்சியார், பஞ்சலக்ஷம் குடும்பங்களைக் கொண்ட திருவாய்ப்பாடியில் இருக்கும் கோபிகைகளை எழுப்புவதைக் காட்டும் வகையில் பத்து கோபிகைகளை எழுப்புகிறாள். வேதம் வல்லார்களான அடியார்களை எழுப்பும் க்ரமத்தில் இந்தப் பத்து பாசுரங்கள் அமைந்துள்ளன.


ஆறாம் பாசுரம். இதில் க்ருஷ்ணானுபவத்துக்கு புதியவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் கண்ணனைத் தானே அனுபவிப்பதிலேயே த்ருப்தி அடைகிறாள் – இது ப்ரதம பர்வ நிஷ்டை – முதல் நிலை. பாகவதர்களுடன் கூடி இருப்பதை உணர்ந்தால், அது சரம பர்வ நிஷ்டைக்குக் (இறுதி நிலை) கொண்டு செல்லும்.









புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்

      வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சு உண்டு

      கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை

      உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்

      உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்


பறவைகளும் கூவிக்கொண்டு செல்கின்றன பார்! 

பறவைகளுக்கு ராஜாவான கருடாழ்வாரின் தலைவனான எம்பெருமானின் கோயிலில், வெண்மையானதும் மற்றவர்களை அழைப்பதுமான சங்கத்தினுடைய பெரிய ஒலியைக் கேட்கவில்லையோ? 

சிறு பெண்ணே (புதியவளே)! எழுந்திரு! 

தாய் வடிவில் வந்த பூதனை என்னும் பேயின் முலையில் இருந்த விஷத்தையும் அவள் உயிரையும் உண்டு, 

வஞ்சனை பொருந்திய சகடாஸுரனை கட்டுக் குலையும்படி திருவடிகளை நீட்டி, 

திருப்பாற்கடலில் ஆதிசேஷனாகிய படுக்கையில் சயனித்தருளிய,

 இந்த உலகத்துக்கே காரணமான எம்பெருமானை, த்யானம் செய்யும் முனிவர்களும், கைங்கர்யம் செய்யும் யோகிகளும் ஹ்ருதயத்திலே அந்த எம்பெருமானை த்யானித்து, ஹ்ருதயத்தில் இருக்கும் எம்பெருமானுக்கு ச்ரமம் கொடுக்காமல் மெதுவாக எழுந்திருந்து, “ஹரி: ஹரி:” என்று எழுப்பும் பெரிய ஒலி எங்களுடைய நெஞ்சில் புகுந்து, எங்கள் நெஞ்சம் குளிர்ந்தது.


நன்றி - Upasana Govindarajan Art



ஸ்ரீ ஆண்டாள், திருநாகை.


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்


1 comment: