14 December 2021

நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம்

 நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா - நம்பெருமாள்  நாச்சியார் திருக்கோலம்... 



முந்தைய பதிவுகள்  ..நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...1

நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா .. 2

பகல் பத்து பத்தாம் நாள் -

இன்று நம்பெருமாள்  நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரம்) ஆண்டாள் கொண்டை,பெரிய நெற்றிச் சுற்றி, கையில் தங்கக்கிளி, நீண்ட ஜடை, ஜடைபில்லைகள், கைகள் நிறைய அலங்கார வளையல்கள், மோதிரங்கள் அணிந்து வெண்பட்டுச் சேலையில், குத்திட்டு அமர்ந்த கோலத்தில்! 

ஆண்டாள் நாச்சியார் "உக்கமும்,தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு" என்று பாடியதைக் கேட்ட நப்பின்னை தட்டொளியில் பார்த்த கண்ணனுக்கு மேலும் அழகு சேர்க்க,அவன் ஆண்பிள்ளை என்பதையும் மறந்து தம், ஆடை, ஆபரணங்கள் எல்லாவற்றையும் பூட்டி அனுப்பி விட்டாளோ!?

ஒரு முறை நம்பெருமாள் பகல்பத்து 10ஆம் நாளில், நாச்சியார் திருக்கோலத்தில், பராசர பட்டரைப் பார்த்து,

"பட்டரே! நமது அலங்காரம் எப்படி? பெரிய பிராட்டியாரை மிஞ்சம் அளவுக்கு இருக்கிறதா?" என்றார். பட்டர் பெருமாளைச் சுற்றி, சுற்றி வந்து அலங்காரங்களை, உற்று நோக்கி வந்து, பெருமாளிடம் இவ்வாறு விண்ணப்பித்தார்.

"தேவரீர் அடியேனை ஷமிக்க வேணும். மிக அழகான, அற்புதமான அலங்காரம். ஆனால் எம் தாயாருக்கு மட்டற்ற அழகு சேர்க்கும் ஒரு அணிகலன் உம்மிடம் இல்லையே! "நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாது". தாயாரின் கருணை ததும்பும் கடாட்சப் பார்வை தேவரீர் திருக் கண்களில் காணவில்லையே ....எனவே எம் தாயாரின் அழகுக்கு ஈடாக மாட்டீர்கள்!"என்றாராம். பெருமாளும் இதைக்கேட்டு மிக உகந்தாராம்.






























மூன்றாம் பாசுரம்-  இது தொடக்கமாக மூன்று பாசுரங்களில் இவ்வுலக இன்பத்தை விரும்புமவர்கள், ஆத்மாவை அனுபவிக்க விரும்புமவர்கள் மற்றும் பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்கள் ஆகிய மூன்று வர்க்கத்தினரையும் தன்னுடன் சேர்ந்து எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்ய அழைக்கிறார். இப்பாசுரத்தில், பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்களை அழைக்கிறார்.

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

கைங்கர்யமாகிற வாழ்விற்கு  ஆசைப்படுபவர்களானால், விரைவாக வந்து, எம்பெருமானின் உத்ஸவத்துக்கு/கைங்கர்யத்துக்கு மண் எடுப்பது, விருப்பத்துடன் இருப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள். சோற்றுக்காக  ஆசைப்படுபவர்களை எங்கள் கூட்டத்தில் நாங்கள் சேர்ப்பதில்லை. நாங்கள் பல தலைமுறைகளாக கைங்கர்யத்தைத் தவிர வேறு விஷயங்களை ஆசைப்படும் குற்றம் அற்றவர்கள். ராக்ஷஸர்கள் வாழ்ந்த இலங்கையில் இருந்த எதிரிகள் அழியும்படி வில்லெடுத்துப் போர்புரிந்தவனுக்கு நாங்கள் மங்களாசாஸனம் செய்பவர்கள். நீங்களும் எங்களுடன் வந்து பல்லாண்டு பாடுங்கள்.

நம்பெருமாள் திருவடிகளே சரணம் ....

முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


அன்புடன் 
அனுபிரேம் 

No comments:

Post a Comment