28 December 2021

பதிமூன்றாம் பாசுரம் - புள்ளின் வாய்

 பதிமூன்றாம் பாசுரம் - இதில் தன் கண்களின் அழகைத் தானே ஏகாந்தத்தில் ரசித்துக்கொள்ளும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். கண்கள் பொதுவாக ஞானத்தைக் குறிக்கும் என்பதால் இவள் எம்பெருமான் விஷயத்தில் பூர்ண ஞானம் உடையவள். இவள் கண்ணன் தானே இவளைத் தேடி வருவான் என்று நினைத்திருக்கிறாள். கண்ணன் அரவிந்தலோசனன் என்று சொல்லப்பட்டிருப்பதால் இவள் அவனுக்குத் தகுதியான கண்ணழகு படைத்தவள்.






புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

     கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்

     வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!

     குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

     கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய்


கொக்கு வடிவில் வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்துக் கொன்றவனும்,

 தீமைகளுக்கு இருப்பிடமான ராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பெருமானுடைய வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று, 

எல்லாப் பெண்களும் நோன்பு நோற்கக் குறித்த இடத்துக்குச் சென்று புகுந்தனர். 

சுக்ரன் மேலெழுந்து, குரு அஸ்தமித்தது. 

பறவைகளும் இரை தேடச் சிதறிச்செல்கின்றன.

 பூவையும் மானையும் ஒத்த கண்ணை உடையவளே! 

இயற்கையாகவே பெண்மையைப் பெற்றவளே! 

நீ இந்த நன்னாளில் கள்ளத்தை (எம்பெருமானைத் தனியே அனுபவிப்பது) விட்டு, 

எங்களோடு சேர்ந்து மிகவும் குளிர்ந்திருக்கும் நீரில் நன்றாக நீராடாமல், படுக்கையில் படுத்து உறங்குகின்றாயோ?


நன்றி - Upasana Govindarajan Art



ஸ்ரீ  ஆண்டாள் , சிறுபுலியூர் 


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய பாசர பாடலும், அதன் அருமையான விளக்கமும் நன்றாக உள்ளது. "நீ நன்னாளில் கள்ளம் தவிர்த்து கலந்து" என்ற வரிகளுக்கு அருமையாக விளக்கம் தந்திருக்கிறீர்கள்.

    சிறுபுலியூர் ஸ்ரீஆண்டாளை மனதாற வணங்கி கொண்டேன். மார்கழியில் கண்ணனை நினைத்து போற்றித் துதிபாடும் பக்தியுடனான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete