11 December 2020

மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.......

 

வாழ்க வளமுடன்.....

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.......
மகாகவி பாரதியார் புதுவையில் வசித்து வந்த காலகட்டத்தில், பாரதியாரின் அபிமான புத்திரியாகவும், சிஷ்யையாகவும் விளங்கியவர் யதுகிரி அம்மாள். 
பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவர் சிறுமி. புதுவையில் அக்காலத்தில் வசித்து வந்த தேசபக்த குழுவினருக்கு 'சுதேசிகள்' என்று பெயர் வழங்கி வந்தது. அப்படிப்பட்ட சுதேசிகளுக்கு தேவையான உதவிகளையெல்லாம் செய்து வந்த குடும்பம்தான் மண்டையம் குடும்பம். 

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் மண்டையம் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார். 

சுதேசிகளில் மகாகவி பாரதியார், வ.வெ.சு.அய்யர், அரவிந்தர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். "இந்தியா" பத்திரிகையைத் தொடங்கி பாரதியாரை அதற்கு ஆசிரியராகவும் நியமித்த ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்களுடைய குமாரிதான்  யதுகிரி அம்மாள். மண்டையம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் குடும்பமும், பாரதியார் குடும்பமும் நெருங்கிப் பழகி வந்த நாட்கள் அவை.

 புதுவை வாசத்தின் போது மகாகவி அடிக்கடி மண்டையம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் இல்லத்திற்குச் செல்வார். 

தான் இயற்றிய எந்த பாட்டானாலும் அவற்றை அங்கு சென்று அனைவர் மத்தியிலும் பாடிக்காட்டி ஆனந்தப் படுவார்.

 அப்படி பாரதியாரிடம் இளமைப் பருவத்திலேயே பழகி, அவருடைய பாடல்களை அவரே பாடக்கேட்டு, எந்த சந்தர்ப்பங்களில் எந்த பாடல் உதயமாகியது என்பது போன்ற பல அரிய செய்திகளை, திருமதி யதுகிரி அம்மாள் தனது "பாரதி நினைவுகள்" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். 
 "பாரதி நினைவுகள்"  - விட்டுவிடுதலையாகி:

'ஓரு வெள்ளிக்கிழமை சாயங்கால வேளையில் சுவாமிநாத தீட்சிதரின் பெண் மீனாவும் நானும் ஈசுவரன் தர்மராஜா கோயில் தெருவில் இருக்கும் பாரதியாரின் வீட்டிற்குப் போனோம். எப்பொழுதும் போல் செல்லம்மாள் கலகலப்பாக இருக்கவில்லை.

 மாதக் கடைசி. நாங்கள் எல்லோரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தோம். 

மணி ஆறு ஆனதும் மீனா வீட்டிற்குப் போய்விட்டாள். பின்னர் பாரதியாரும் வெளியே போய்விட்டார். வீட்டில் இருந்தவர்கள் நானும் செல்லம்மாவுமே. 

இருவரும் சிறிது நேரம் பேசாமலே இருந்தோம். 

ஐந்து நிமிஷம் பொறுத்துப் பேச ஆரம்பித்தேன்.

 எங்களுக்குள் நடந்த உரையாடல் இதோ:- 

"செல்லம்மா! உடம்பு சரியாக இல்லையா? எப்படியோ இருக்கிறீரே!" 

"உடம்புக்கு ஒன்றுமில்லை யதுகிரி! மனத்திலே புழு அரிப்பதைப் போல் அரிக்கிறது. யாரிடமாவது சொன்னால்தான் இம்சை தீரும் போல் இருக்கிறது. நீ குழந்தை, உன்னிடம் சொல்லி என்ன பிரயோசனம்?"

 "பரவாயில்லை என்னவென்று சொல்லுங்களேன், நான் பாரதியாரைக் கேட்கிறேன். 'பெண்கள் விடுதலையை வாயால் கொண்டாடுகிறீரே, காரியத்தில் இப்படிப் பண்ணலாமா?' என்று கேட்டுவிடுகிறேன். 

"ஐயோ, குழந்தை! உன் உள்ளம் ஒன்றும் அறியாது. இப்போ மாதக் கடைசி. போன மாசப் பாக்கியைப் பால்காரனுக்கு இன்னும் கொடுக்கவில்லை. அவன் நேற்று வந்து கேட்டான். வருகிற மாசம் கொடுப்பதாகச் சொன்னேன்.

 அவன் முடியாது என்றான்.

 நான் ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பினேன். 

இவர் பார்! இன்றைக்குச் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு அனுப்ப வேண்டிய கட்டுரையை அனுப்பவே இல்லை.

 அவன் எப்படிப் பணம் அனுப்புவான்?

 இன்று காலையிலே குளித்து, காப்பி குடித்துவிட்டு, வெற்றிலை பாக்கு எல்லாம் கிரமமாக ஆனபிறகு எவ்வளவோ சொல்லி மேஜைமேல் காகிதம் பேனா, இங்கி புட்டி எல்லாவற்றையும் கொண்டுபோய் வைத்துவிட்டு அரிசியைப் பொறுக்கி வைத்தேன். 

பிறகு மடி உடுத்திக் கொள்ள போனேன். 

இவருக்கு எழுத முடியவில்லை. 

முறத்தில் இருந்த அரிசியில் ஒரு பங்கை எடுத்து முற்றத்தில் இறைத்துவிட்டு அதைத் தின்ன வரும் குருவிகளைக் கண்டு பாடிக் கொண்டிருந்தார். 

அரிசியைக் களைந்து உலையில் போடுவதற்காக வெளியில் வந்து பார்க்கிறேன்; 

அரிசியில் கால் பங்கு இல்லை. எனக்கு அழுகை வந்துவிட்டது. 

இதைப் பார்த்த அவர், 'வா! செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன! நாமும் அதைப்போல் ஏன் இருக்கக்கூடாது? நீயும் சதா தொந்தரவு செய்கிறாய்; நானும் எப்போழுதும் எரிந்து விழுகிறேன். நமக்கு இந்தக் குருவிகள் ஒற்றுமை கற்றுக் கொடுக்கின்றன. நாம் அதைக் கவனியாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறோம். நம்மைக் காட்டிலும் மூடர்கள் உண்டா?' என்றார். 

"எனக்குப் பொறுக்கவில்லை. என் கோபத்தை ஏன் கிளப்புகிறீர்கள்? குழந்தைகள் அண்ணியம்மா (பாரதியாரின் அடுத்த வீட்டுக்காரரான செல்வந்தர் பொன்னு முருகேசம் பிள்ளையின் மனைவி - பாரதியாரின் குழந்தைகள் அவர்கள் வீட்டிலேயே அதிக நேரம் விளையாடுவார்கள்) வீட்டிலிருந்து வருகிற வேளைக்குச் சமைத்து விடலாம் என்று அடுப்பை மூட்டினால் பொறுக்கின அரிசியைக் குருவிக்குப் போட்டு விட்டீர்களே! திரும்பப் பொறுக்கப் பத்து நிமிஷம் ஆகும். உங்களுக்குப் பணம் வர இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ! நீங்களோ இன்னும் கட்டுரை எழுதியாகவில்லை. பால்காரன் மானத்தை வாங்குகிறான். வேலைக்காரி இரண்டு நாளாய் வரவே இல்லை. நீங்கள் இதை யோசிக்க வேண்டாமா?.... இந்தக் குழந்தைகளைக் கொடுத்து வதைக்கிறார்' என்று சொல்லிக்கொண்டே போய் ஒருவிதமாகச் சமையல் வேலையைச் செய்து முடித்தேன்.

 "வெளியே வந்தால் இவர் சகுந்தலா பாப்பாவுக்கு "விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே!" என்று துவங்கும் பாட்டைப் பாடிக் காட்டிக் கொண்டிருக்கிறார். 

(சகுந்தலா பாப்பா என்பது பாரதியாரின் இளைய மகள்) குழந்தை சந்தோஷத்தில் குதிக்கிறாள்! இவர் பாட்டு ஆனந்தத்தில் மெய்ம்மறந்திருக்கிறார். 

குருவிகளோ அரிசியைக் கொத்தித் தின்ற வண்ணமாய் இருக்கின்றன. 


தங்கம்மா பேசாமல் உட்கார்ந்திருக்கிறாள் (தங்கம்மா என்பது பாரதியாரின் மூத்த மகள்)".


 "இந்த வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது நம்மால் ஏன் நிம்மதி கெடவேணும்?" என்று நானும் உட்கார்ந்து விட்டேன். 

ஆட்டம், பாட்டு எல்லாம் முடியப் பன்னிரண்டு மணி ஆயிற்று. 

சகுந்தலா, 'அப்பா! பசிக்கிறது; வா சாப்பிடலாம்" என்றது. அவரும் எழுந்து வந்து பேசாமல் சாப்பிட உட்கார்ந்தார். 

என்னைப் பார்த்து, 'செல்லம்மா, இன்னும் கோபம் போகவில்லையா? இதோ பார், இந்தக் குருவிப் பாட்டையே அனுப்பப் போகிறேன். முதல் தேதி உன் கையில் பணம் வந்துவிடும், பயப்படாதே" என்றார். 

அவர் நல்லவர், கள்ளம் கபடு இல்லை. 

கையில் இருந்தால் வஞ்சம் இல்லை. 

ஆனால் அவர் சரியாகக் கட்டுரை அனுப்பாவிட்டால் பத்திரிகைக்காரன் சும்மா பணம் அனுப்புவானா? அதுதான் எனக்கும் பிடிக்கிறதில்லை".


 நான் ஒரு பதிலும் சொல்லவில்லை. என்னால் என்ன சொல்ல முடியும்? ஆனாலும் சமாதானமாக, "இன்றைக்கு தபாலில் ஒன்று போயிருக்கிறதே! பாட்டானால் என்ன, கட்டுரையானால் என்ன?" என்றேன். 

"நீயும் அவருக்குச் சரியான பெண்தான்! அவர் எதைச் செய்தாலும் சரி என்று சொல்வாய். உன்னிடம் சொல்லியதால் கொஞ்சம் இம்சை குறைந்தது, அதுவே போதும்" என்றார் அந்த உத்தமி.

 பாரதி வந்தார் .... "யதுகிரி! இன்றைக்குப் புதிய பாட்டுப் பண்ணியிருக்கிறேன்; பார்த்தாயா?" 

"இல்லை. செல்லம்மா சொன்னார். எங்கே காட்டுங்கள்?"

 பாரதி மேஜையிலிருந்து பேப்பரை எடுத்தார் அப்போது செல்லம்மா "உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு பதத்தையும் யதுகிரி அப்படியே பொறுக்கி விடுகிறாள். உலகம் தெரியாத குழந்தை! காலையில் நடந்ததைச் சொன்னேன். 

'பாட்டானால் என்ன கட்டுரையானால் என்ன' என்று கேட்கிறாள்." 

பாரதி: "அவள் சொல்வது மிகவும் சரி! இப்போது நான் சொல்வது உனக்கு ருசிக்காது. இதோ பார், யதுகிரி, நான் பார்க்கிறேனோ இல்லையோ, நீ கட்டாயம் பார்ப்பாய். இந்தச் சின்னப் பாட்டுக்கள் எல்லோராலும் புகழப்படுவதையும், துதிக்கப்படுவதையும் நீ பார்க்கப் போகிறாய். இன்னும் தமிழுலகம் கண் திறக்கவில்லை. திறந்தாலும் குழந்தைப் பருவத்தில் இருக்கிறது." 

இப்படிச் சொல்லிவிட்டு, "இந்தா, பாட்டு எழுதிய காகிதம்!" என்று என்னிடம் காகிதத்தைக் கொடுத்துவிட்டு ஒருமுறை பாடியும் காண்பித்தார். 

இந்தப் பாட்டின் முதல் சரணத்தின் கடைசி அடி நான் மனனம் செய்தது "வான ஒளியின் மதுவின் சுவையுண்டு" என்று. 

அச்சில் வெளிவந்திருப்பதோ "வானொளி யென்னு மதுவின் சுவையுண்டு" என்று இருக்கிறது. 

ஒரு வேளை பாரதியே பிற்பாடு மாற்றியிருக்கலாம். 

(இணையத்திலிருந்து )
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியினைப் போலே


எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு…)


பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு…)


முற்றத்திலேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு…)

வாழ்க கவியின் புகழ்..7 comments:

 1. மகாகவியை நினைவுகூர்ந்த விதம் சிறப்பு.

  ReplyDelete
 2. வாழ்க மகாகவியின் புகழ்!..

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. மகாகவியை பற்றிய தகவல்கள் அருமை. சிட்டுக்குருவி பாட்டும் நன்றாக உள்ளது. அவர் நினைவுகள் என்றும் நம் நெஞ்சில் சாஸ்வதமாக அமர்ந்திருக்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 4. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

  அவதார புருஷனின் குடும்பத்தில் ஒருவராய் இருப்பது அவ்வளவு கடினம் போல.

  ReplyDelete
 5. செல்லம்மாளின் கதை அருமை, படிக்க நன்றாக இருக்கிறது அனைத்தும்.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. சிறப்பான நினைவலைகள் - சரியான நாளில்.

  பாராட்டுகள். தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete