28 December 2020

13. புள்ளின் வாய் கீண்டானை

  'புள்ளின் வாய் கீண்டானை'


"நீ உறங்குவது போன்ற உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு எழுந்து வா!"
ஆண்டாள் அடுத்ததாக எழுப்பச் சென்ற தோழி மிகுந்த அழகு உடையவள். அவளுடைய கண்களின் அழகானது கிருஷ்ணனையே கிறங்கிப் போகச் செய்யுமாம். ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் அவளுடைய வீட்டுக்கு முன்பாக நின்று தோழியை எழுப்புகிறார்கள். 

 

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை *

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் *

பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார் *

வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று *

புள்ளும் சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்! * 

குள்ளக்குளிரக் குடைந்துநீராடாதே *

பள்ளிக்கிடத்தியோ? பாவாய்! நீநன்நாளால் *

கள்ளம்தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.

 

பொருள்- 

கம்சன், கிருஷ்ணன் கோகுலத்தில் இருப்பதாகத் தெரிந்துகொண்டு கிருஷ்ணனை அழிப்பதற்காக பூதனை, சகடாசூரன் போன்றோரை அனுப்பியது போலவே பகாசுரன் என்பவனையும் அனுப்புகிறான். 

அந்த பகாசுரன் ஒரு பறவையின் வடிவம் எடுத்துக்கொண்டு கிருஷ்ணனை அழிப்பதற்காக கோகுலத்துக்குச் செல்கிறான். கிருஷ்ணன் அந்தப் பகாசுர பறவையின் வாயைப் பிளந்து கொன்றுவிடுகிறான் என்பதையே ஆண்டாள் புள்ளின் வாய் கீண்டானை என்று குறிப்பிடுகிறாள்.
 சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை ராமபிரான் அழித்ததை பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்று குறிப்பிடுகிறாள். ஆனால், நீயோ இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே என்று ஆண்டாள் கேட்கிறாள். அப்படியும் தோழி எழுந்திருக்கவில்லை.

அப்போதுதான் ஆண்டாளுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. 

அது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால், அதைக் குறிப்பிட்டு வியாழம் உறங்கிற்று என்றும் வெள்ளி எழுந்தது என்றும் கூறுகிறாள். அதாவது பகவான் கிருஷ்ணனாக அவதரித்துவிட்டபடியால் இனி எல்லோரும் நல்லவர்களாகவும் சுபிட்சம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்று நினைத்து தேவ குருவான வியாழன் உறங்கப்போய்விட்டாராம். அதனால் அசுர குருவான சுக்கிரன் (வெள்ளி)  எழுந்துகொண்டாராம். 

எனவே இனியும் நீ எழுந்து எங்களுடன் வந்து குளிரக் குளிர மார்கழி நீராடி கிருஷ்ணனை பூஜிக்காவிட்டால், அவனை அடைய முடியாது. அதற்கு பதிலாக அசுர குருவாகிய சுக்கிரன் உன்னை தன்னுடைய அசுர சீடர்களில் ஒருவராக ஆக்கிக் கொள்வார் என்று பயமுறுத்துகிறாள். அப்படியும் அவள் எழுந்திருக்கவில்லை.


ஆண்டாளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை தனிமையில் அவள் கிருஷ்ணனை நினைத்து தன்னை மறந்த ஆனந்த நிலையில் இருக்கிறாளோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனால்தான் ஆண்டாள் கள்ளம் தவிர்த்து என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறாள். 

அதாவது நீ மட்டும் கள்ளத்தனமாக தனிமையில் இருந்துகொண்டு கிருஷ்ணனின் நினைப்பில், அவனுடைய ஸ்பரிச சுகத்தில் லயித்திருக்காதே.

 நீ இப்படியே இருந்தால், நாங்கள் எப்போது சென்று மார்கழி நீராடி கிருஷ்ணனை வழிபட்டு அவனை அடைவது? உன்னுடைய உறக்கத்தால் எங்களுடைய கிருஷ்ணபூஜை தடைப்பட்டு விடலாமா? என்று ஆண்டாள் கேட்கிறாள். 

வெள்ளியாகிய அசுரகுரு எழுந்துவிட்டார்; அவர் உன்னை தன்னுடைய அசுரசீடர்களுடன் சேர்த்துவிடுவார் என்று சொன்னபோதுகூட எழுந்திருக்காத அந்தத் தோழி, அவள் தனிமையில் கிருஷ்ணனுடைய நினைப்பில் லயித்திருக்கிறாள் என்று சொன்னதுமே, அவளுக்கு வெட்கம் வந்துவிடுகிறது. 

இனியும் எழுந்திருக்காவிட்டால் ஆண்டாள் தன்னை கிருஷ்ணனுடன் இணைத்து இன்னும் என்னவெல்லாம் கேலி பேசுவாளோ என்று வெட்கப்பட்டு எழுந்துகொள்கிறாளாம். ஒருவழியாக அவளை எழுப்பிவிட்ட நிம்மதியில் அவளையும் மற்ற தோழிகளுடன் சேர்த்துக்கொண்டு அடுத்த தோழியை எழுப்பச் செல்கிறாள் ஆண்டாள்.


(இணையத்திலிருந்து )


திருக்கோவிலூர் - ஸ்ரீ புஷ்பவல்லி தாயார்ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன் 

அனுபிரேம்

2 comments:

 1. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. வழக்கம் போல இன்றைய திருப்பாவை பாடலும், அதன் விளக்கங்களும் அருமை.தோழிகளை எழுப்ப ஆண்டாள் தன் பாடலில் பாடிச் சேர்க்கும் கிருஷ்ண லீலைகள் என்ற புது புது உத்திகள் நம்மை ஆனந்தப்படுத்தி மகிழ வைக்கின்றன. இன்றைய பகிர்வுக்கும் மிக்க நன்றி.
  ஸ்ரீ கோதை நாச்சியாரின் திருவடிகளை என்றும் போற்றுவோம்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 2. வணக்கம்.

  வழமை போல படங்களும் பதிவும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete