29 December 2020

14. உங்கள் புழக்கடை

உங்கள் புழக்கடை

"எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ?"





 அடுத்ததாக ஆண்டாள் எழுப்பச் செல்லும் தோழி சரியான வாய்ச்சொல் வீராங்கனையாக இருப்பாள் போலும்.

'நீங்கள் எல்லோரும் நன்றாக உறங்குங்கள். அதிகாலையில் நானே வந்து உங்களை எழுப்புகிறேன் என்று சொன்னவள், சொல்லியபடி செய்யவில்லை. மற்றவர்களை எழுப்பவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆண்டாள் அழைத்த உடனே எழுந்திருக்கலாம் அல்லவா? அதைக் கூடச் செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கும் தோழியை ஆண்டாள் இப்படி எழுப்புகிறாள்.



                                            உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் *

செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண் *

செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் *

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் *

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் *

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! *

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் *

பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.

          

பொருள் - 

 அந்தத் தோழியின் வீட்டுத் தோட்டத்தில் சிறிய குளம் இருக்கிறதுபோலும். 

எனவே ஆண்டாள், 'தோழி, பொழுது விடிந்துவிட்டதற்கு அடையாளமாக உன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்துவிட்டது. கருநெய்தல் பூக்கள் கூம்பி விட்டன. ஆனால், நீ இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே? இரவெல்லாம் கிருஷ்ணனின் நினைவில் லயித்துவிட்டு, இப்போதுதான் உறங்கச் சென்றாயோ? இப்படிச் செய்வது உனக்கே நியாயமாகத் தெரிகிறதா?' என்று கேட்கிறாள். 

அது அந்தத் தோழியின் காதுகளில் விழுந்ததோ இல்லையோ அவள் எழுந்திருக்கவே இல்லை.

ஆனாலும் ஆண்டாள் சளைக்காமல், அவளை எப்படியும் அழைத்துச் செல்வது என்ற தீர்மானமான முடிவுடன் மேலும் சொல்கிறாள்.

 'தோழி, காவிச் சாயம் பூசிய ஆடைகளை உடுத்தியர்களும், வெண்மையான பற்களை உடையவர்களுமான துறவிகள், தங்கள் திருக்கோயில்களுக்கு சங்குகளை ஊதிக் கொண்டு செல்கின்றனர். அதுகூட உன் காதுகளில் விழவில்லையா?' என்று கேட்கிறாள்.

ஆனால், தோழி எழுந்திருக்கவில்லை. எனவே ஆண்டாள், ''தோழி, நாங்கள் உன்னை இப்போது எதற்காக எழுப்ப வந்திருக்கிறோம் என்று தெரியுமா? மார்கழி நீராடி, சங்கும் சக்கரமும் கைகளில் ஏந்தியவரும், அப்போதுதான் பூத்த தாமரை மலர்களைப் போன்ற கண்களை உடையவருமாகிய நாராயணமூர்த்தியின் புகழைப் பாடத்தான் உன்னை எழுப்புகிறோம். அந்த நாராயணன்தான் நம்மையெல்லாம் கடைத்தேற்றுவதற்காக இந்த கோகுலத்தில் கிருஷ்ணனாக வந்திருக்கிறான். எனவே, கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே எழுந்து வா. யமுனைக்குச் சென்று நீராடி, கிருஷ்ணனின் புகழைப் பாடிப் பணிவோம்' என்கிறாள்.


 அப்படியும் தோழி எழுந்திருக்கவில்லை. அப்போதுதான் ஆண்டாளுக்கு, முன்தினம் இரவு ஆடிப்பாடிவிட்டு உறங்கச் செல்லும்போது, அந்தத் தோழி சொல்லிவிட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது.


முன் தினம் இரவு ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்துவிட்டு உறங்கச் செல்கின்றனர். செல்லும்போது மறுநாள் அதிகாலையில் எழுந்து, மார்கழி நீராடிவிட்டு, கிருஷ்ணனை வழிபடவேண்டும் என்று ஆண்டாள் தோழிகளிடம் சொல்கிறாள். 

அப்போது ஆண்டாளிடமும் மற்ற தோழிகளிடமும், ''நீங்கள் கவலையே படவேண்டாம். நானே அதிகாலையில் எழுந்து வந்து உங்களை எல்லாம் எழுப்பிவிடுகிறேன்'' என்று சொல்லி அனுப்பினாள். 

அது நினைவுக்கு வந்ததுமே ஆண்டாள் அந்தத் தோழியிடம், தோழி, முன் தினம் இரவு உறங்கப்போவதற்கு முன்பாக எங்களை எல்லாம் வந்து எழுப்பிவிடுவதாகச் சொன்ன நீ, வெறும் பேச்சில்தான் வல்லவள் போலும். சொன்னபடி செய்யாமல் இருக்கிறாயே? உனக்குக் கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா?' என்கிறாள்.


ஆண்டாள் இப்படி கேட்டதுதான் தாமதம், அந்தத் தோழிக்கு ரோஷம் வந்துவிட்டதுபோலும். உடனே அவசர அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்து வந்து ஆண்டாளுடனும் மற்ற தோழிகளுடனும் சேர்ந்துகொள்கிறாள்.

(இணையத்திலிருந்து )

திருநாகைபட்டிணம் - ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயார்


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.




அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. பாசுர அமுதம் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete