கீசு கீசு என்று
பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?திருப்பாவை ஆறாவது பாடலில் தன்னுடைய தோழி பகவானிடன் பக்தி கொண்டிருப்பவள் என்ற எண்ணத்தில் ஆண்டாள் பகவானின் லீலைகளைக் குறிப்பிட்டு, மார்கழி நீராடி அவனை அடைய எழுப்புகிறாள். ஆனால், அந்தத் தோழியோ எழுந்திருக்கவில்லை. எனவே ஆண்டாள் அவளை பேய்ப்பெண்ணே என்று அழைத்து, பொழுது விடிந்துவிட்டதற்கு அறிகுறியாக நடைபெறும் நிகழ்ச்சிகளை எல்லாம் அடுக்குகிறாள்.
கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் * கலந்து
பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! *
காசும்பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து *
வாசநறுங்குழலாய்ச்சியர் * மத்தினால்
ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ? *
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி *
கேசவனைப் பாடவும் நீ கேட்டேகிடத்தியோ? *
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.
பொருள் -
ஆனைச்சாத்தன் என்று ஒரு பறவை இனம் உண்டு. பகலெல்லாம் இரை தேடச் செல்லப்போவதால், தங்கள் இணைப் பறவைகளிடம் கொஞ்சநேரம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்குமாம். இந்த ஆனைச்சாத்தனுக்கு வலியன் என்றும், பரத்வாஜ பறவை என்று பெயர்கள் உண்டு.
ஆண்டாள் தன்னுடைய தோழியை, 'ஆனைச்சாத்தன் பறவைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் பெருத்த சப்தமானது உன் காதுகளில் விழவில்லையா? அப்படி என்ன தூக்கம்? பகவானை தரிசிக்க செல்ல முடியாமலும், நல்லவர்களுடன் பழகமுடியாத படியும், பேய்கள் உன்னை உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கமுடியாதபடி செய்கிறதா?
இப்படி ஆண்டாள் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, காற்றில் மலர்களின் நறுமணம் கமழ்ந்து வருவதை உணர்கிறாள்.
அந்த நறுமணம் எங்கிருந்து வருகிறதென்றும் புரிந்துகொண்டாள். தான் புரிந்துகொண்டதையே சொல்லி தோழியை எழுப்புகிறாள்.
''இதோ பார், பொழுது விடிந்ததுமே கோபிகைப்பெண்கள், தங்கள் கூந்தலில் சூடியுள்ள நறுமண மலர்கள் அசைந்து காற்றில் மணம் பரப்ப, அவர்கள் மத்தினால் தயிர் கடையும் சப்தம் உனக்குக் கேட்கவில்லையா; தயிர் கடையும்போது அவர்களின் கைகள் மற்றும் உடலின் அசைவுகளால், அவர்கள் அணிந்திருக்கும் பலதரப்பட்ட வளையல்களும் ஆபரணங்களும் ஒன்றோடு ஒன்று உரசி எழுப்பும் சப்தம்கூடவா உனக்குக் கேட்கவில்லை? அப்படி என்ன தூக்கமோ உன் தூக்கம்? என்று கேட்கிறாள்.
அப்படியும் அவள் எழுந்திருக்கவில்லை.
எங்களைப் போன்ற பெண்களுக்கு எல்லாம் தலைவியாக இருப்பவளே! விரைந்து எழுந்து வா. புனிதமான இந்த மார்கழி அதிகாலையில் நீராடி, பகவானின் அவதாரமாக வடமதுரையில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து வரும் ஶ்ரீகிருஷ்ணனை வழிபடலாம்.
அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? துஷ்ட நிக்கிரஹம் செய்து சிஷ்டபரிபாலனத்துக்காக அவதரித்தவன். அவனுக்கு வழங்கும் எத்தனையோ திருப்பெயர்களில் கேசவன் என்பது ஒன்றாகும். அந்த கேசவனைப் நாங்கள் பாடுவதைக் கேட்டபிறகும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாயே? என்கிறாள்.
கேசி என்ற அசுரனைக் கொன்றதால்தான் கண்ணனுக்கு கேசவன் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தக் கேசி என்பவன் கம்சனின் நண்பன். தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை எடுப்பவன். கம்சன் அவனை அழைத்து கோகுலத்துக்குச் சென்று கண்ணனை கொன்றுவிட்டு வருமாறு கட்டளை இடுகிறான். கேசியும் மிகப் பெரிய குதிரை வடிவத்தை எடுத்துக்கொண்டு, கோகுலத்துக்குச் சென்றான்.
அவன் தன் கால்களை நீட்டி கண்ணனைக் கொல்லப் பார்த்தான். ஆனால், கண்ணன் அந்தக் கால்களைப் பற்றி வேகமாகச் சுழற்றி தூர எறிந்தார். அப்படியும் அவன் அழியவில்லை. வாயைப் பிளந்தபடி கண்ணனை விழுங்குவதுபோல் ஆவேசமாக வந்தான்.
கண்ணன் கேசியின் திறந்த வாய்க்குள் தன் கையை செலுத்தி, செலுத்திய கையை பெரிய மரம் போல் பெரியதாக்கி, கேசியின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றார். இதனால்தான் பகவான் கண்ணனுக்கு கேசவன் என்று பெயர் வந்தது.
அப்படிப்பட்ட கேசவனின் புகழைத்தான் நாங்கள் பாடப்போகிறோம். எனவே, ஒளி பிரகாசிக்கும் அழகிய முகத்தை உடையவளே! எழுந்திருந்து வா என்று அழைக்கிறாள் ஆண்டாள்.
(இணையத்திலிருந்து )
![]() |
இராஜமன்னார்குடி - ஸ்ரீ செங்கமலத்தாயார் |
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
திருப்பாவையும் அதன் விளக்கமும் இனிமை..
ReplyDeleteஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் போற்றி...
வணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய திருப்பாவை பாசுரமும், அதன் விளக்கமும் அருமை. பாடல் பாடி ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாசுரமும் விளக்கமும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.
ReplyDelete