16 December 2020

1. மார்கழித் திங்கள்...

 மார்கழித் திங்கள் நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்





கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள். 


கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள். 

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். 

அதுவே திருப்பாவை ஆயிற்று. 

திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவை என்றால் பெண். 

நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று. 

முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. 

இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது. 

ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது. 

இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 

கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் வேண்டும்  ஆண்டாளின் பக்தியை எடுத்துச் சொல்கிறது.









மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் *

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! * 

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! * 

கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் *

ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம் *

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் *

நாராயணனே நமக்கே பறை தருவான் *

பாரோர்புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். (2)


பொருள்: 

செல்வ செழிப்பைக் கொண்ட இந்த ஆயர் குலத்தில் பிறந்த சகல ஐஸ்வரியங்களையும் கொண்ட பெண்களே! இந்த அழகிய மார்கழி மாதத்தில் நாம் விரதம் மேற்கொள்வோம். நன்னாளில் நாம் நீராடுவோம். 

தோழிகளே! ஒருத்தி மகனாகப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாக கோகுலத்துக்கு சென்று சேர்ந்த கிருஷ்ணனை, யசோதையின் பிள்ளை என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். கருத்த மேகத்தின் நிறம் போன்ற மேனியை உடையவனும், காய்கின்ற கதிரையும் குளிர்விக்கின்ற சந்திரனையும் இரண்டு கண்களாக உடையவனுமாகிய கிருஷ்ணன், சாட்சாத் அந்த வைகுண்டத்தில் இருக்கும் நாராயணனே.

 அந்த கிருஷ்ணனே நமக்கு வேண்டிய யாவும் அருளக்கூடியவன். அவனுடைய புகழை உலகத்தவர் அறியும்படியாகப் பாடி வழிபடுவோம் என்கிறாள்.



ஸ்ரீரங்கம் - ஸ்ரீரெங்கநாயகி தாயார்




ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. மார்கஈ நீராடல் வாழ்க..
    மங்கலகரமான பதிவு...

    ReplyDelete
  2. திருப்பாவையைப்பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்! இனிய பதிவு!!

    ReplyDelete
  3. அருமை... ஆண்டாளின் தெய்வீக அழகு ததும்பும் படங்கள்.

    சென்ற வருடத்தில் ஆண்டாளை தரிசித்தது நினைவுக்கு வருகிறது.

    நமக்கே பறை தருவான் - இதற்கு 'நமக்கு வேண்டிய யாவையும் தருவான்' என்று பொருள் சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  4. அழகான படங்கள்.

    மார்கழி சிறப்புப் பதிவுகள் தொடரட்டும்.

    ReplyDelete