புள்ளும் சிலம்பின காண்
பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்பரமாத்மாவை அடையவேண்டும் என்னும் துடிப்பே ஜீவாத்மாவான ஆண்டாளுக்கு ஏற்படுகிறது. அந்த பக்தி மேலீட்டின் வெளிப்பாடாகத்தான் அவள் புனித மார்கழியில் நீராடி, நோன்பு இருக்க விரும்புகிறாள். 'தான் பெறப்போகும் இன்பம் தன் தோழிகளும் பெறவேண்டும் என்றும் அவள் விரும்புகிறாள். அதனால், அவள் திருப்பாவைப் பாடல்களைப் பாடி, தன் தோழியரையும் எழுப்புகிறாள். இந்தப் பாடலில் அவள் பகவான் கிருஷ்ணரின் பால லீலைகள் இரண்டைக் குறிப்பிடுகிறாள்.
அதுமட்டுமல்ல அதிகாலைப் பொழுதை அவள் பக்திபூர்வமாக விவரிக்கும் பாங்கே நமக்கு ஆனந்த அனுபவத்தை ஊட்டுவதாக அமைந்திருக்கிறது.
![]() |
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் *
வெள்ளைவிளிசங்கின் பேரரவம்கேட்டிலையோ? *
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு *
கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி *
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை *
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் *
மெள்ளவெழுந்து அரியென்ற பேரரவம் *
உள்ளம்புகுந்து குளிர்ந்தே லோரெம்பாவாய்.
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு *
கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி *
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை *
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் *
மெள்ளவெழுந்து அரியென்ற பேரரவம் *
உள்ளம்புகுந்து குளிர்ந்தே லோரெம்பாவாய்.
''தோழி, பொழுது விடிந்துவிட்டது. அதோ பறவைகளின் இனிய குரலோசை உனக்குக் கேட்கவில்லையா? கருடனாகிய பறவையை வாகனமாகக் கொண்ட பகவானின் கோயில் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. அதை அறிவிப்பதுபோல், தூய வெண்மை நிறத்துடன் பளிச்சிடும் சங்கு பெருத்த சப்தத்துடன் ஒலிக்கிறதே, அதுகூடவா உனக்குக் கேட்கவில்லை?'' என்று கேட்கும் ஆண்டாள், பகவான் கிருஷ்ணரின் பால்ய லீலைகளில் இரண்டைக் குறிப்பிடுகிறாள்.
தன்னைக் கொல்வதற்காகப் பிறந்த கண்ணன் கோகுலத்தில் யசோதையின் வீட்டில் வளர்கிறான் என்பதை தெரிந்து கொண்ட கம்சன், கண்ணனை எப்படியும் அழித்துவிடவேண்டும் என்று எண்ணி, முதலில் கோகுலத்துக்கு பூதனை என்னும் அரக்கியை அனுப்புகிறான்.
பூதனை தான் , அரக்கி வடிவத்தில் போனால் மற்றவர்கள் தன்னைத் தெரிந்து கொள்வார்கள் என, அழகான பெண்ணாக மாறி கோகுலத்துக்குச் செல்கிறாள். யசோதையின் வீட்டில் இருந்த கண்ணனை எடுத்து அணைத்துக் கொண்டு, நச்சு கலந்த பாலை ஊட்டத் தருகிறாள். அனைத்தும் அறிந்த மாயக் கண்ணன் அவளுடைய மார்பகங்களில் இருந்து நச்சுப் பாலை அருந்துவதுபோல் அவளுடைய உயிரையே உறிஞ்சிவிடுகிறான். இதைத்தான் ஆண்டாள், 'பேய்முலை நஞ்சுண்டு' என்று குறிப்பிடுகிறாள்.
பூதனை இறந்த செய்தி கேட்டதும் கம்சன் கலங்கித்தான் போனான்.
ஆனாலும் கண்ணனைக் கொன்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் அவன் விடவில்லை.
சகடாசூரன் அழைத்து கண்ணனை கொன்றுவிட்டு வருமாறு கட்டளை இடுகிறான்.
அவனும் சக்கரமாக மாறி கண்ணனைக் கொல்லச் செல்கிறான். தன்னைக் கொல்ல நினைத்து வருபவன் சகடாசுரன் என்பது அறிந்து கண்ணன், சக்கரத்தின் வடிவத்தில் வந்த அசுரனைத் தன் காலால் உதைத்து அழிக்கிறான்.
இதனை தான் ஆண்டாள், 'கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி' என்கிறாள்.
கள்ளச் சகடம் என்றால் தீய வழியில் செல்லும் சக்கரம் என்று பொருள். அந்தச் சக்கரத்தை நாம் பின்பற்றிச் சென்றால் நமக்குத் தீங்குதான் ஏற்படும்.
இங்கே தீய வழியில் செல்லும் சக்கரம் என்பது நம்முடைய புலன்களைத்தான் குறிக்கும்.
அந்தப் புலன்களை அடக்கி நல்ல வழியில் செலுத்தக்கூடிய வல்லமை பகவான் கண்ணனின் திருவடிகளுக்கே உண்டு. எனவே நம்முடைய மனதில் எப்போதும் பகவான் கண்ணன் மீதான பக்தி நிலைத்திருக்க வேண்டும்.
இப்படி பகவான் கண்ணனின் லீலைகளைக் குறிப்பிட்டு தன் தோழியை எழுப்பும் ஆண்டாள், அந்தப் பொழுதில் பாற்கடலில் ஆதிசேஷ பாம்பணையில் அறிதுயில் கொண்டிருக்கும் பகவானை, முனிவர்களும் யோகியரும் உள்ளத்தில் நினைத்து ''அரி, அரி' என்று துதிக்கும் பேரொலியானது உனக்குக் கேட்கவில்லையா? விரைவில் எழுந்து வா மார்கழி நீராடி நாமும் அந்தப் பரமனைப் பணிவோம் என்று அழைக்கிறாள்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
வணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய பாசுரப் பாடலும், அதன் விளக்கமும் கண்ணனை நேரில் கண்டது போல் இருக்கின்றது. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். திருப்பாவை பாசுரம் பாடி மகிழ்வடைந்தேன். ஆண்டாள் திருவடிகளே சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிகவும் நன்றி கமலா அக்கா ...
Deleteஇவ்விளக்கம் எல்லாம் பல இடங்களில் வாசிக்கும் போது அறிந்துக் கொண்டவை ...அதையே இங்கு பகிர்ந்துள்ளேன் ...,
மேலும் இவ்விளக்கம் யார் எழுதியது என்பது அறிந்து இருந்தால் அவரின் பெயருடன் பகிர்ந்து இருப்பேன் .. ..
தனியாக இப்படி எழுதும் அளவு எனக்கும் தெரியாது அக்கா...
நலமே விளைக.
ReplyDeleteதொடரட்டும் பாசுர அமுதம்.