25 December 2020

10. நோற்றுச் சுவர்க்கம்

 நோற்றுச் சுவர்க்கம்


“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?”









மனிதர்களாகப் பிறந்தவர்கள், பகவான் கிருஷ்ணரின் திருவடிகளையே பற்றாகக் கொண்டு, வாழ்க்கையின் நிறைவில் அவருடன் ஐக்கியமாவதுதான். அதுதான் உயர்ந்த லட்சியம். 

மற்றபடி விரதங்களைக் கடைப்பிடித்து தேவர்களை வழிபட்டு அடையும் சுவர்க்கலோக பதவியானது நிலையானது இல்லை. அதனால்தான் பகவான் கிருஷ்ணர், 'நீங்கள் தேவர்களை வழிபடுவதால் உலக இன்பங்களையும், இந்திரலோக வாசத்தையும்கூட அனுபவிக்கலாம். ஆனால், அவை எல்லாம் என்னை வழிபட்டு அடையக்கூடிய பேரின்பத்துக்கு ஈடாகாது. தேவர்களை வழிபட்டாலும்கூட, அவர்களும் என்னுடைய அருளால்தான் நீங்கள் வேண்டியதைத் தரும் சக்தி பெறுகிறார்கள். எனவே, நீங்கள் என்னையே சரணாகதியாகக் கொண்டு வழிபட்டால், நானே உங்களுக்கு இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையானவைகளை அருள் புரிவேன்; பின்னர் என்னுடனே உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வேன்'' என்று சொல்லி இருக்கிறார். 

அத்தகைய பேரின்பத்தை அடைவதற்காகத்தான் ஆண்டாள் தன்னுடைய தோழிகளை மார்கழி நீராடி மாதவனை வழிபட அழைக்கிறாள். 



நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! *

மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார் *

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் *

போற்றப் பறைதரும் புண்ணியனால் * பண்டுஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் *

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? *

ஆற்றஅனந்தலுடையாய்! அருங்கலமே! *

தேற்றமாய் வந்து திறவேலோரெம்பாவாய்.



பொருள் - 

அந்தத் தோழி ஆண்டாளின் குரல் கேட்டும் கதவைத் திறக்கவில்லை. 

எனவே, ஆண்டாள், ''விரதம் இருந்து சொர்க்கபோகங்களை அனுபவிக்க விரும்புபவளே! நாங்கள் கூப்பிடும் குரல் கேட்டும் இன்னும் கதவைத் திறக்கவில்லையே. சரி, கதவைத் திறக்காமல் போனாலும் பரவாயில்லை. வாய் திறந்து ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா'' என்கிறாள்.

 மேலும், ''வைகுந்தத்தில் கிடைக்கக்கூடிய பேரின்பத்துக்கு கோடியில் ஒரு பங்குகூட சொர்க்கலோக இன்பத்துக்கு இல்லை. அப்படிப்பட்ட சொர்க்க இன்பத்தை கற்பனை செய்துகொண்டு, அதையே பெரிதாக நினைத்துக்கொண்டு எங்களை லட்சியம் செய்யாமல் இருக்கிறாயே, எதற்காக வந்தீர்கள் என்று ஒரு பேச்சுக்காவது எங்களைக் கேட்கக்கூடாதா? என்று கேட்கிறாள்.

 
இத்தனை சொல்லியும் அவள் எழுந்திருக்கவில்லை. அப்போது ஆண்டாளின் மனதில் ஒரு சந்தேகம் எழுகிறது. அதை வெளிப்படையாகக் கேட்கவும் செய்கிறாள்.

''ராமபிரானால் போரில் தோற்கடிக்கப்பட்ட கும்பகர்ணன் இறக்கும்போது உனக்கு அவனுடைய தூக்கத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டானோ?'' என்று கேட்கிறாள்.

ராமபிரானால் அழிக்கப்பட்ட கும்பகர்ணன், தூக்கத்தை வரமாகப் பெற்று வந்தவன் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் அவன் தூக்கத்தை வரமாகப் பெறுவதற்காக தவம் செய்யவில்லை. 

தான் என்றும் அழியாமல் நித்தியத்துவத்துடன் இருக்கவேண்டும் என்ற வரத்தைப் பெறுவதற்காகத்தான் தவம் இருந்தான். அவனுடைய தவத்துக்கு மகிழ்ச்சி அடைந்த பிரம்ம தேவர், கும்பகர்ணன் முன் தோன்றி அவன் கேட்கும் வரத்தைக் கொடுக்க விரும்பினார். 

ஆனால், தேவர்கள், பிரம்ம தேவரிடம், ''இப்போதே கும்பகர்ணனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. நீங்கள் அவனுக்கு நித்தியத்துவத்தை வரமாகக் கொடுத்துவிட்டால், அவனுடைய அட்டகாசம் எல்லை மீறிப் போய்விடுமே'' என்கிறார்கள். 

அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதைத் தெரிந்துகொண்ட பிரம்ம தேவர், சரஸ்வதி தேவியிடம், கும்பகர்ணன் நாவில் இருந்துகொண்டு அவன் கேட்கப்போகும் வரத்தை மாற்றிக் கேட்கும்படி செய்யச்சொல்கிறார். அப்படியே சரஸ்வதி தேவியும் கும்பகர்ணன் நாவில் அமர்ந்துகொண்டு, கும்பகர்ணன் நித்தியத்துவம் வேண்டும் என்று கேட்க நினைத்த வரத்தை நித்திரத்துவம் வேண்டும் என்று கேட்கும்படியாகச் செய்துவிட்டாள். இதுதான் கும்பகர்ணன் தூக்கத்தை வரமாகப் பெற்ற கதை.

''அப்படிப்பட்ட கும்பகர்ணன் உனக்கு தூக்கத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டானோ?'' என்று ஆண்டாள் கேட்டவுடனே, அந்தத் தோழிக்கு அவமானம் தாங்கவில்லை. தன்னைப் போய் அரக்கனான கும்பகர்ணனுடன் ஒப்பிட்டுச் சொல்லிவிட்டார்களே என்று ரோஷம் வந்தவளாக எழுந்துகொண்டாள். 

கும்பகர்ணன் பெயரைச் சொல்லி ஒருவழியாக அந்தத் தோழியை எழுப்பிவிட்ட ஆண்டாள், அவளையும் சேர்த்துக்கொண்டு அடுத்த தோழியை எழுப்பச் செல்கிறாள்.

(இணையத்திலிருந்து )


கபிஸ்தலம் -  ஸ்ரீ ரமாமணி வல்லி தாயார்

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன் 
அனுபிரேம்

2 comments:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய பாடல் பகிர்வும் அருமை. கோதை நாச்சியார், தினமும் ஒவ்வொரு விளக்கமாக கூறி தோழிகளை நல்வழிப்படுத்த எழுப்புவது சிறப்பாக உள்ளது. இன்றைய பாடலில் கும்பகர்ணனின் வரத்தைப் பற்றி அறிந்து கொண்டேன். தங்களின் மார்கழி பதிவுகள் தொடரட்டும். நானும் பக்தியுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
    ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் திருவடிகளை போற்றுவோம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. இந்தப் பதிவில் பகிர்ந்து கொண்ட படங்கள் அனைத்தும் சிறப்பு.

    பாசுரமும் விளக்கமும் மிகவும் நன்று. தொடரட்டும் பாசுர அமுதம்.

    ReplyDelete