27 December 2020

12. கனைத்து இளம் கற்றெருமை

கனைத்து இளம் கற்றெருமை:

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?

 





ஆண்டாள் இப்பொழுது எழுப்புவதற்காக வந்திருக்கும் தோழி, மிகுந்த செல்வத்தைப் பெற்றிருக்கும் ஒருவனின் தங்கை ஆவாள். செல்வ சுகத்தில் திளைத்திருக்கும் பெண் என்பதால், அவளை எழுப்புவதற்கு ஆண்டாளுக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. 


அந்தத் தோழி தன் அண்ணனிடம் மிகுந்த அன்பு கொண்டவள் என்பதால், அவளுடைய அண்ணனைப் புகழ்ந்து அதன்மூலம் அவளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடலாம் என்று ஆண்டாள் நினைக்கிறாள். அப்படியே பாடவும் செய்கிறாள்.   



கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி *

நினைத்து முலைவழியே நின்று பால்சோர *

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! * 

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றி *

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற *

மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் *

இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்? * 

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

     

பொருள் 

'சின்னஞ்சிறிய கன்றுகளை உடைய எருமைகள், தன் மடி பிடித்து பால் கறக்க யாரும் இல்லாததால், கன்றுகளுக்கு ஊட்டுவதாக நினைத்து பாலைப் பொழிய, பெருகும் அந்தப் பால் வீடு முழுக்கப் பரவி, பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட இல்லதை நனைத்து சேறாக்கும் அளவுக்கு அளவற்ற கறவைச் செல்வங்களைப் பெற்றிருக்கும் கோபாலனின் சகோதரியே' என்று ஆண்டாள் தன்னுடைய தோழியின் அண்ணனுடைய செல்வச் செழுமையைப் பாடி எழுப்புகிறாள். 


ஆண்டாளைப் பொறுத்தவரை யாருக்கெல்லாம் கிருஷ்ணரின் சம்பந்தம் இருக்கிறதோ அவர்களெல்லாரும் நற்செல்வர்கள்தான். அந்த வகையில் தன்னுடைய தோழியின் அண்ணன் கிருஷ்ணருடைய அன்பையும் ஆதரவையும் பெற்ற நற்செல்வன் என்பதால்தான் அவனுக்கு அத்தனை செல்வம் கிடைத்ததாம். 


அண்ணனின் செல்வச் செழுமையைப் புகழ்ந்து பாடியும், கிருஷ்ணரிடம் அவனுக்கு உள்ள அன்பையும் பக்தியையும் புகழ்ந்தும்கூட, அவள் எழுந்திருக்கவில்லை என்பதால், தங்களுடைய நிலைமையை ஆண்டாள் விவரிக்கிறாள்.


''தோழி, எங்களுடைய தலையில் பனி பெய்து அதனால் உடல் நடுங்கியபடி உன்னுடைய வாசல் தூண்களைப் பற்றிக்கொண்டு நிற்கிறோமே. எங்கள்மீது பரிதாபம் ஏற்படவில்லையா? இன்னும் நீ தூங்கலாமா?'' என்று கெஞ்சுகிறாள்.


பின்னும் ஆண்டாள் தன் தோழியை எழுப்புவதற்காக ஓர் உபாயத்தைக் கையாள்கிறாள். பகவான் கிருஷ்ணரின் முந்தைய அவதாரமாகிய ராமபிரானின் புகழைப் பாடுகிறாள். அதை ஆண்டாள் இப்படி விவரிக்கிறாள்.


''தோழி, நீ ராமகாதை கேட்டிருக்கிறாய் அல்லவா? தசரதகுமாரனாக அவதரித்த ராமபிரான், தென் இலங்கைப் பகுதியை ஆண்டு வந்த அரக்கனான ராவணனையும் அவனுடைய படைகளையும் அழித்தது உனக்கும் தெரியும்தானே. அப்படிப்பட்ட ராமனின் புகழைப் பாடிக்கொண்டுதான் நாங்கள் உன் வீட்டு வாசல் முன்பாக நின்றுகொண்டிருக்கிறோம். 

சக்கரவர்த்தி குமாரனாம் ராமபிரானின் புகழை நாங்கள் பாடுவதைக் கேட்டும் நீ தூங்கிக் கொண்டு இருப்பதுடன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாமலும் இருக்கிறாய்.

நீ இப்படி இருந்தால் இந்த ஊரும் உலகமும் உன்னை என்ன சொல்லி தூற்றும் தெரியுமா? 'என்ன இது, ஆண்டாளும் அவளுடைய தோழியரும் இப்படி பாடியும் அந்தப் பெண் எழுந்திருக்கவில்லையே, அவ்வளவு சோம்பலா?' என்று உன்னைத் தூற்றமாட்டார்களா?'' என்று ஆண்டாள் கேட்கிறாள்.

இப்படி ஆண்டாள் கேட்டதுதான் தாமதம், அந்தத் தோழி ஊராரின் கேலிப் பேச்சுக்கு பயந்துகொண்டு உடனே விழித்துக்கொள்கிறாளாம். அவளையும் அழைத்துக்கொண்டு ஆண்டாள் அடுத்த வீட்டுக்குச் செல்கிறாள். 

தான் பெறப்போகும் பேரின்பம் தன்னுடைய தோழியர் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதில் ஆண்டாளுக்கு அவ்வளவு ஆர்வம்.

(இணையத்திலிருந்து )

திருநீர்மலை - ஸ்ரீ அணிமாமலர்மங்கை தாயார்.


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.




அன்புடன் 

அனுபிரேம்

 

2 comments:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய திருப்பாவை பாடலும் அழகான அர்த்தம் நிறைந்த பாடல். ஒவ்வொரு பாசுரத்திலும், ஸ்ரீஆண்டாள் தேவி தான் பெறும் இறையின்பம் தன் தோழியரும் பெற வேண்டுமென்பதற்காக, பொறுமையுடன் காத்திருந்து அவர்களை அழைத்துச் செல்லும் பாங்கு எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கிறது இன்றைய பாடல் விளக்கங்களையும் ரசித்தேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் தரும் சிறந்த தெய்வீக பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. காலை வணக்கம்.

    படங்களும் பாசுரமும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete