ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி, நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்..
பகவான் கிருஷ்ணரை ஓங்கி உலகளந்த உத்தமன் என்று அழைப்பது எப்படி பொருந்தும்....
ஓங்கி உலகளந்த என்றால், ஓங்கி உயர்ந்து தன் திருவடிகளால் உலகத்தையே அளப்பது என்பது மட்டுமே பொருள் இல்லை. பிரபஞ்சம் எங்கும் வியாபித்து இருப்பதும்கூட - அதாவது விசுவரூபம் என்பார்களே அதுவும் கூட உலகத்தை அளந்தது போலத்தான். அப்படி பகவான் கிருஷ்ணர் பிரபஞ்சத்தையே தம்முள் அடக்கியவராக பலமுறை காட்சி தந்திருக்கிறார்.
![]() |
ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி *
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் *
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து *
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள *
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப *
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க * குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் *
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய். (2)
பொருள்:
ஓங்கி உலகளந்த உத்தமன் புகழைப் பாடி நீராடி, பாவை நோன்பு இருந்து வழிபட்டால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழியும்.
அதாவது எந்த ஒரு சேதத்தையும் பயிர்களுக்கோ, மனிதர்களுக்கோ, இதர ஜீவராசிகளுக்கோ ஏற்படுத்தாதபடி அளவோடு மழை பெய்யுமாம்.
அப்படி மழை வளத்தால் வயல்களில் செழித்து வளர்ந்திருக்கும் நெற்பயிர்களின் ஊடாக தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி நீந்தியபடி இருக்குமாம்.
தேன் நிறைந்த பூக்களில் எல்லாம் தேனைப் பருகுவதற்காக திரிந்துகொண்டிருக்குமாம். வீடுகளில் கட்டப்பட்டு இருக்கும் பசுக்கள்கூட, தங்கள் கன்றுக்கு ஊட்டியது போக, கறப்பவர்களுக்கு அவர்களுடைய குடம் நிறையும்படி பாலமுதைப் பொழியுமாம்.
கிருஷ்ண பக்தியானது இப்படியான வளங்களையும், நீங்காத செல்வங்களையும் நமக்குத் தருமாம்.
நீங்காத செல்வம் என்று ஆண்டாள் குறிப்பிடுவது, வாழ்க்கையின் சுகபோகங்களை மட்டுமல்ல, நிறைவானதும் அதற்கு மேல் எதுவும் இல்லாததுமான பகவான் கிருஷ்ணரின் திருவடிகள் என்னும் செல்வத்தையே ஆண்டாள் நீங்காத செல்வம் என்று சிறப்பித்துக் கூறுகிறாள்.
![]() |
திருவெள்ளறை - ஸ்ரீ பங்கஜவல்லி தாயார் |
அன்புடன்
அனுபிரேம்
படங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக....
ReplyDeleteதொடரட்டும் மார்கழி சிறப்புப் பதிவுகள்.