திருமங்கையாழ்வார் மஞ்சக்குளி திருமஞ்சனம்
திருமஞ்சன வைபவப் புராணம்
திருமங்கை ஆழ்வார் கார்த்திகையில் கார்த்திகை நாள் அன்று, நம்பெருமாள் திருமுன்பே பரமபக்தி தலையெடுத்து, கேட்கவே மிகவும் இனிமையான, "திருநெடுந்தாண்டகம்"என்னும் பிரபந்தத்தை பாடியருளி, தயங்கி நின்றார்.
பெருமாளும் இதை அறிந்து "என்ன ஆழ்வீர் தயங்கி நிற்கீறீர், என்ன வேண்டுமோ கேளும் என்று கூற,
ஆழ்வாரும் பெருமாளிடம் "தேவரீர், நம்மாழ்வார் பாடியருளிய திருவாய்மொழி-- வேதத்துக்குச் சமம் என்று அங்கீகரித்து, மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் வேதகோஷம் கேட்கும் பொழுது, திருவாய் மொழியையும் கேட்டருள வேண்டும்" என்று பிரார்த்திக்க, பெருமாளும் சரி அப்படியே ஆகட்டும் என்று இசைந்தார்.
உடனே, நம்பெருமாள், நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் வந்து தம்முடைய திருஅத்யயன உற்சவத்தை நடத்தி வைக்குமாறு, ஒரு ஸ்ரீமுகம் (ஓலைச் சுவடிக் கடிதம்) அனுப்பி வைத்தார்.
திருமங்கை ஆழ்வாரும், பெருமாளின், ஸ்ரீபாதம் தாங்கிகளும், ஆழ்வார் திருநகரி சென்று ஆழ்வாரிடம் பெருமாளின் ஸ்ரீமுகத்தைச் சமர்ப்பித்து, ஆழ்வாரை எழச்செய்து, அழைத்து வந்தார்கள்.
நம்மாழ்வார் எழுந்தருளி பத்து நாள் அத்யயன உற்சவமும் முடிந்து, ஆழ்வாரை மறுபடியும் ஆழ்வார் திருநகரி வரை எழக் கொண்டு விட்டு, அங்கிருந்து ஸ்ரீபாதம் தாங்குவோரும் திருமங்கை ஆழ்வாரும் விடைபெற்றுக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த நாள் "தை அமாவாசை".
அன்று நம்பெருமாள், திருமஞ்சனக் காவேரியில் (அம்மாமண்டபம் செல்லும் வழியில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அருகில்) மஞ்சள்குளி உற்சவம் கண்டருளினார். இன்று வரை, தை அமாவாசையன்று நம்பெருமாள் கண்டருளும் மஞ்சள் குளி விழா பிரசித்தம்.
அத்யயன உற்சவத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த, திருமங்கை ஆழ்வாருக்கும் நம்பெருமாள் மஞ்சள் குளி திருமஞ்சனம் செய்ய நியமித்தார்.
ஆழ்வாரிடமும் "நீர் உம்மூரிலும், இந்த உற்சவத்தை உற்றார் உறவினரோடு சந்தோஷமாகக் கொண்டாடிக் கொள்ளும் " என்று பகுமானம் கொடுத்தருளினார்.
நம்பெருமாளின் ஆணைப்படியே ஆழ்வாரும் தாம் இருந்த காலம் வரை, இந்த உற்சவத்தை ஸ்ரீரங்கம் காவேரிக் கரையில் கொண்டாடி மகிழ்ந்தார்.
அவர் காலத்துக்குப் பின்,அவர் அர்ச்சாவதரமாக எழுந்தருளியிருக்கும் திருநகரி திவ்யதேசத்திற்கு அருகில், நாங்கூர் தெற்கு எல்லையில் பெருகும் காவேரியின், பிரிவான மணிகர்ணிகையில் இவ்வுற்சவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
மணிகர்ணிகாவில் ஆழ்வார்:
தை அமாவாசையன்று,பார்த்தன்பள்ளியிலிருந்து தோட்டம்/தோப்பு வழியாக, உற்சாகமாகத் துள்ளிக் குதித்துக் கொண்டு வரும், ஆழ்வார் மஞ்சள்குளி மண்டபத்துக்கு எதிரில் உள்ள மணிகர்ணிகா நதியில் வேகமாக இறங்குவார்.
முழங்கால் அளவு நீரில் ஸ்ரீபாதம் தாங்கிகளோடு, அர்ச்சகர்கள்,
அத்யாபகர்கள் மற்றும் சில அடியார்கள்/பக்தர்களும் நதியில் இறங்கி நிற்பார்கள்.
அவ்வமயம் ஆழ்வாருக்கு சங்கு,சக்கர லாஞ்சனங்கள் பொறித்த திருநறையூர் நம்பி பெருமாளும், ஆழ்வாருக்கு மஞ்சக்குளி திருமஞ்சன வைபவத்தை ஏற்பாடு செய்த ஸ்ரீரங்கதாதப் பெருமாளும் அனுப்பி வைத்த பகுமானங்கள்--மாலை,பரியட்டம்,சந்தனம், பிரசாதங்கள் சாற்றப்படும்.
அந்தந்தக் கோயில் அர்ச்சகர்/மணியகாரர் இந்தப் பகுமானங்களை தங்கள் தலையில் சுமந்து, மங்கள வாத்தியங்கள் முழங்கக் கொண்டுவந்து, சேர்ப்பார்கள்.
இந்த இரண்டு பெருமாள் மீதும் ஆழ்வார் பாடிய சில பாசுரங்களை அத்யாபகர்கள் சேவிப்பார்கள் பின்னர் ஆழ்வார் மஞ்சக்குளி மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
மஞ்சக்குளி திருமஞ்சனம்:
ஆழ்வாரும்,குமுதவல்லி நாச்சியாரும் அலங்காரங்கள் இல்லாமல் சுயம் திருமேனியுடன், பொன்நிறக் கரையுடன் வெள்ளிபோல் பிரகாசிக்கும் திருமஞ்சன வஸ்த்ரம் அணிந்து சேவை சாதிப்பது கொள்ளை அழகு! இது வரை ஆழ்வார்அணிந்திருந்த ஆபரணங்களும்/மாலைகளும் அவர் அழகை மறைத்தனவோ என்னலாம்படி அழகோ அழகு!
திருமஞ்சனத் திரவியங்கள் (தீர்த்தம்,பால்,தயிர்,இளநீர்,மஞ்சள்,திருமஞ்சனப் பொடி,சந்தனம் முதலானவை) முதலில் ஆழ்வாருடனே எப்போதும் எழுந்தருளும் அவரது திருவாராதனப் பெருமாள் 'சிந்தனைக் கினியானு'க்குச் (ஆழ்வாருக்கு வலப்புறம் கீழே) சேர்க்கப்படும்.
பின்னர்ஆழ்வார், குமுதவல்லி நாச்சியார், தீர்த்தபேரர் (ஆழ்வார் சிறு விக்ரக வடிவில்-இடதுபுறம் கீழே) அந்த வரிசையில்.
மஞ்சள் நீர்க் குளியலில் ஆழ்வார் ஒளிர்வது காணக் கிடைக்காத பேரழகு!! தீர்த்தபேரர் -ஆழ்வாரை, அர்ச்சகர் எழுந்தருளச் செய்து கொண்டுபோய், மணிகர்ணிகா நதி நீரில் திருமஞ்சனம் செய்து ஒரு தீர்த்த வட்டிலில் நதித்தீர்த்தத்தில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வருவார். அனைவருக்கும் ஆழ்வாரின் ஈர ஆடைத் தீர்த்தம் சாதிக்கப்படும்.
பின்னர் ஆழ்வாருக்கும், நாச்சியாருக்கும் அலங்காரம்செய்து,நைவேத்யம் ஆகி அனைவருக்கும் தீர்த்தம்,ஆழ்வார் திருவடிநிலை, பிரசாதம் சாதிக்கப்படும்.
மாலை 6/7மணிக்கு மேல், ஆழ்வார் திருநாங்கூர் திவ்யதேசக் கோயில்களுக்குப் பல்லக்கில் புறப்படுவார்.
வழிநடை உபயங்கள் கண்டருளி, இரவு 9 மணிக்கு மேல் திருநாங்கூர் வந்து அடைவார்.
திருமங்கை ஆழ்வார் திருநாங்கூர் மணிமாடக் கோயிலுக்கு (ஆழ்வார் மங்களாசாசனம்/கருடசேவை நடைபெறும் கோயில்) அதிகாலை 5 மணிக்கு எழுந்தருள்வார்.
முதல் நாள் அதிகாலை 2 மணிக்குத், திருநகரியிலிருந்து புறப்பட்ட ஆழ்வார் 27 மணி நேரம் பிரயாணம் செய்து அடுத்த நாள் காலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார் !
முந்தைய பதிவுகள்
1.திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2026
1230
அமுது செய்த திரு வயிற்றன், அரன் கொண்டு திரியும் *
முண்டம் அது நிறைத்து, அவன் கண் சாபம் அது நீக்கும் *
முதல்வன் அவன் மகிழ்ந்து, இனிது மருவி, உறை கோயில் **
எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந் தெங்கு, கதலி *
இலைக்கொடி, ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய *
வண்டு பல இசை பாட, மயில் ஆலும் நாங்கூர் *
வைகுந்த விண்ணகரம் வணங்கு, மட நெஞ்சே! 3
1231
காதொடு மூக்கு உடன் அரிய, கதறி அவள் ஓடி *
தலையில் அங் கை வைத்து, மலை இலங்கை புகச் செய்த *
தடந் தோளன் மகிழ்ந்து, இனிது மருவி, உறை கோயில் **
சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம் *
செழுங் கொண்டல் அகடு இரிய, சொரிந்த செழு முத்தம் *
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு, மட நெஞ்சே! 4
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் !!






No comments:
Post a Comment