வாழ்க வளமுடன்
முந்தைய பதிவு --- திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2025
திருமங்கையாழ்வாரின் நீண்ட நெடும்பயணம்:
பரகாலன் - திருமங்கை ஆழ்வார் 86 திவ்ய தேசங்களுக்கு-வடக்கே திருவதரி(பத்ரிநாத்) வரை-'ஆடல்மா' என்னும் அதிவேகக் குதிரையின் மீது சவாரி செய்து, சென்று, அந்தந்த எம்பிரான்களை மங்களா சாசனம் செய்தார்.வேறு எந்த ஆழ்வாரையும் விட அதிக/நீண்ட தூரம் சென்றவர்; அதிக திவ்ய தேசங்களைப் பாடியவர்.
அதன் தாக்கம் தானோ! என்னவோ? அர்ச்சா விக்ரமாகவும்,வேறு எந்த ஆழ்வாரை விட/பெருமாளையும் விட நீண்ட நெடும் பயணம் மேற்கொள்கிறார் ! இந்த மூன்று நாட்கள் மட்டுமே 40 கி.மீ.பல்லக்கில் புறப்பாடு கண்டருள்கிறார்.
29/01/2025 மட்டுமே சுமார் 25 கி.மீ.பயணம்!
இந்த பயணத்தில் ---
1. திருநகரி -- திருக்குறையலூர்:
அதிகாலை 1 மணியளவில் திருநகரியிலிருந்து, ஆழ்வாரும், குமுதவல்லி தாயாரும் பல்லக்கில் புறப்படுவர். தீப்பந்தங்கள் வழிகாட்ட, மேளங்கள் முழங்க, வெடிச் சத்தம் விண்ணைப் பிளக்க,ஓட்டமும், நடையுமாகச் செல்வார்.
அவருடைய வேகத்துக்கு அடியார்கள் பலர் ஈடு கொடுக்க முடியாமல் பின் தங்கி விடுவர்.சிலர் வாகனங்களில் தொடர்வார்கள்.
வேதராஜபுரம் (திருமணங்கொல்லை) நெப்பத்தூர்வழியாக அதிகாலை 2.45/3.00க்கு அவருடைய அவதார ஸ்தலமான திருக்குறையலூரை அடைவார். வழி நெடுகிலும் மக்கள் தங்கள் வீடுகளின் முன் ஒரு பலகையின் மேல் இரண்டு குத்துவிளக்குகள் ஏற்றி வைத்து, ஆழ்வாருக்குப் பழங்கள், உலர்பழங்கள், நாட்டுச்சர்க்கரை, நாட்டுச் சர்க்கரையுடன் சுக்குப்பொடி, கடலைப் பருப்பு ஆகியவற்றைக் கலந்தும், கல்கண்டு முதலான வற்றையும் சமர்ப்பிப்பார்கள்.
மாலைகள்/வஸ்த்ரங்களும் சமர்ப்பிக்கப் படும். ஆழ்வார் ஆங்காங்கே சில நிமிடங்கள் நின்று அவர்கள் சமர்ப்பித்தவற்றை ஏற்றுக் கொண்டு, அவர்களைக் கடாட்சிப்பார்.
குறையலூர் உக்கிரநரசிம்மப் பெருமாள் கோயிலை அடைந்ததும்,பெருமாள் தாம் சூடிக் களைந்த மாலை, பரியட்டம் முதலானவற்றை கோவில் வாசலுக்கே அனுப்பி ஆழ்வாருக்கு அணிவிக்கச் செய்வார்.ஆழ்வார் கோவில் மண்டபத்தில் எழுந்தருளியதும் அத்யாபகக்கோஷ்டியார்
திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு,பெரிய திருமொழி முதல் பத்து,முதல் பதிகமும்--
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*
பெருந் துயர் இடும்பையில் பிறந்து*
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு*
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்*
நாராயணா என்னும் நாமம். (2)
"திருச்சிங்கவேள் குன்றம்" பதிகமும்(1-7) சேவிப்பர்.
அம் கண் ஞாலம் அஞ்ச* அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு* பத்திமையால்*
அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிங்கவேழ்குன்றமே. (2)
பின்னர் ஆழ்வாருக்குத் திருவாராதனை, நைவேத்யம் ஆகி அனைவருக்கும் தீர்த்தம்,சடாரி, பிரசாதங்கள் (பொதுவாக ஜீரா,வெண்பொங்கல்) சாதிக்கப்படும்.
2. குறையலூர்--மங்கைமடம்:
4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி 5.30 மணி அளவில் மங்கைமடம் வீரநரசிம்மப் பெருமாள் கோயிலை அடைவார்.
ஆழ்வார் ஆயிரம் பேருக்கு நித்ய ததீயாராதனை செய்த இடம். இங்கும் கோவில் முகப்பிலேயே பெருமாள் மரியாதைகள்; "சிங்கவேள் குன்றம்" பாசுரங்கள் சேவை; அனைவருக்கும் தீர்த்தம், சடாரி, பிரசாதம் (வெண்பொங்கல்) விநியோகம்.
3.மங்கைமடம் -- திருக்காவளம் பாடி:
6.30 க்குப் புறப்பட்டு 7 மணிக்குத் திருக்காவளம்பாடி ஸ்ரீகோபால் ஸ்வாமி-ராஜகோபாலன் சந்நிதியை அடைவார். வழிநடை உபயங்கள்,கோவில் முகப்பு மரியாதை எல்லா இடங்களுக்கும் பொதுவானது.
இன்று ஆழ்வார் எழுந்தருளும் முதல் திவ்யதேசம் (மற்ற இரண்டு க்ஷேத்ரங்களும் திவ்ய தேச வரிசையில் இல்லை).
இந்தப் பெருமாள் மீது ஆழ்வார் பாடிய 4-6 பதிகம் பாசுரங்களை சேவிப்பர்.
1298.
தா அளந்து உலகம் முற்றும்* தட மலர்ப் பொய்கை புக்கு*
நா வளம் நவின்று அங்கு ஏத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும் நாங்கைக்*
காவளம் பாடிமேய* கண்ணனே! களைகண் நீயே.
4.திருக்காவளம்பாடி -- திருமணிக்கூடம்:
7.30க்குப் புறப்பட்டு 8.00க்கு, திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள் சந்நிதியை அடைவார்.ஆழ்வார் இந்தப் பெருமாள் மீது பாடிய 4-5 பதிகம் சேவிப்பார்கள்.
1288.
தூம்பு உடைப் பனைக்கை வேழம்* துயர் கெடுத்தருளி* மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரண்ட * எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
5.திருமணிக்கூடம் -- திருப்பார்த்தன் பள்ளி:
9 மணிக்கு மேல் புறப்பட்டு 10 மணிக்குச் சென்று சேர்வார். ஆழ்வார் இது வரை தார்ச்சாலையில் நேர்வழியில் வருவார்.
ஆனால் இங்கிருந்து செல்லும் போது, திடீரென்று சாலையிலிருந்து, பள்ளத்தில் இறங்கி வயல் வரப்புகள், செடி கொடிகள் ஊடே நடந்து செல்வார்.ஆழ்வார் காலத்தில் இந்த மாதிரி சாலை வசதிகள் கிடையாதே.
வயல்/தோட்டங்களின் வழியாகவே சென்றிருப்பார்.
மேலும் அன்று, பாகவத ததீயாராதனைக்கும், பெருமாள் கைங்கர்யத்துக்கும் பொருள் சேர்க்க, அவசர கதியில் ஓடினார்.
இன்று 11 பெருமாள்களையும் விரைவில் மங்களாசாசனம் செய்ய வேண்டுமே என்னும் ஆர்த்தியில் 'ஓடினேன் ஓடி' என்று ஓடுவார்.
ஆழ்வார் திருவடி படும் நிலங்களில் பயிர் நன்கு செழிப்பாக வளரும் என்னும் ஒரு ஐதீகம் உண்டு. எனவே நிலச் சொந்தக் காரர்களே வளரும் பயிர்களை ஒடித்து/வெட்டி ஆழ்வார் வருவதற்கு ஏற்ப வழி செய்து விடுகிறார்கள்.
ஒரு முறை ஆழ்வார் செல்ல வேண்டிய நிலத்தைச் சேர்ந்தவர், ஆழ்வாரும் அவர் கோஷ்டியினரும், தம் நிலத்தின் வழியாகச் சென்றால் விளையும் பயிர் அழிந்து விடும்;எனவே வேறு வழியாகச் செல்லுங்கள் என்று கூறி விட்டார்.
அந்த ஆண்டு அவருக்கு விளைச்சல் சரியில்லாமல் நஷ்டம் ஏற்பட்டதாம்.
அடுத்த ஆண்டு, அவரே வலிந்து சென்று, ஆழ்வார் அவர் நிலத்தின் வழியாகச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கேட்டாராம்.
பார்த்தன் பள்ளியில் ஆழ்வார் மங்களாசாசனம் செய்த 4-8 பதிகம் பாசுரங்கள் சேவிப்பார்கள்.
1318.
கவள யானைக் கொம்புஒசித்த* கண்ணன் என்றும் காமருசீர்*
குவளை மேகம் அன்ன மேனி* கொண்ட கோன் என் ஆனை என்றும்*
தவள மாடம் நீடு நாங்கைத்* தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
திருமங்கை ஆழ்வாரின் ததீயாராதனை: (திருமால் அடியார்களுக்கு உகக்கும் வண்ணம், சிறப்பான உணவு சமைத்து ஓம்புதல்):
திருமங்கை ஆழ்வார் நடத்திய ததீயாராதனை மிகப் பிரசித்தி பெற்றது.
குமுதவல்லி நாச்சியார் அவரை மணந்து கொள்ள,அவர் ஓராண்டு காலம் ஆயிரம் திருமால் அடியார்களுக்கு, நித்யமும் ததீயாராதனை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.அதை ஏற்றுக் கொண்ட ஆழ்வார் மங்கைமடம் என்னும் இடத்தில் மிகப்பெரிய மடைப்பள்ளி/உணவுக் கூடம் அமைத்தார்.பல ஊர்களிலிருந்தும் அடியார்களை, வண்டி வைத்து அழைத்து வந்தார்.
தம் பெருஞ்செல்வம், அரசனுக்கு செலுத்தவேண்டிய வரிப்பணம்/கப்பம் எல்லாவற்றையும் ததீயாராதனைக்குச் செலவு செய்தார்.பணம் பற்றாமல் கொள்ளையடித்துச் செய்தார்.
பெருமாளிடமே கொள்ளையடிக்கத் துணிந்தார்!
காய்கறிகள்/பழவகைகள் விளைவிப்பதற்கு ஒரு பெரிய தோட்டத்தையே உருவாக்கினார்.
அந்தத் தோட்டமே இப்போது 'பெருந்தோட்டம்' என்னும் ஊராக இருக்கிறது. அதேபோல் வாழைத் தோப்பு/ வாழை இலைகள் வைத்திருந்த இடம் இப்போது 'இலையமுது கூடம்' என்னும் கிராமம்.
அந்தத் ததீயாராதனை இன்றும் நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்படி,இன்று காலை 3 மணியிலிருந்து ஆழ்வார் மங்களாசாசனம் செய்த எல்லா சந்நிதிகளிலும் பக்தர்கள் அனைவருக்கும் பல்வேறு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதனால் அவர்களுக்குப் பசியில்லாததால் பெரும்பாலானோர், எப்போதும் எடுக்கும், காலை உணவைத் தவிர்த்தனர்.
மதியம் 11.30க்குப் பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் அனைவருக்கும் இலை போட்டுப் பிரசாதம் வழங்கப்படும்.
(இனிப்புபூந்தி,சுண்டல்,ஷீரான்னம்,புளியோதரை,ததியன்னம் ஆகியவை).
இதற்குமேலும்,மஞ்சக்குளி மண்டபத்தில் ஆழ்வார் திருமஞ்சனத்துக்கு முன் கதம்பசாதமும்,ததி அன்னமும் வழங்கப்படும்.
6.பார்த்தன்பள்ளி -- திருநாங்கூர்.
பார்த்தன்பள்ளியிலிருந்து 12 மணிக்குப் புறப்படும் ஆழ்வார் மீண்டும், தோட்டம், துரவு, தோப்புகள்(மா,தேக்கு,தைலமரம்,தென்னை-தோப்புகள்-படங்களில் காண்க) வழியாகச் சென்று மதியம் 1 மணியளவில் மணி கர்ணிகா நதியில் இறங்கி, மஞ்சக்குளி மண்டபத்தை அடைவார்.
அங்கு திருமஞ்சனம் கண்டருளி மாலை 5.30க்குப் புறப்பட்டு, திருநாங்கூர் மணிமாடக் கோயிலுக்குப் புறப்படுவார்.
அங்கிருந்து இரவு 8 மணிக்குப் புறப்பட்டு திருநாங்கூர் ஊரிலேயே உள்ள மற்ற ஐந்து திவ்யதேசங்களையும் மங்களா சாசனம் செய்து விட்டு,அடுத்த நாள் காலை 5 மணியளவில் மணிமாடக் கோயிலுக்குத் திரும்புவார்.
மொத்தமாக,28 மணி நேரப் பயணம்!! 25கி.மீ.தூரம்!!
கருடசேவை வைபவங்கள் அடுத்த பதிவுகளில் தொடரும் .....
(--முகநூலில் பதிவிட்ட பார்த்தசாரதி ராமாநுஜதாசன் சுவாமிகளுக்கு நன்றி--)
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் !!
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. திருமங்கையாழ்வார் அவர்களின் சிறப்புக்களை தாங்கள் கூறிய விதத்தை படித்து ரசித்தேன். அவருக்குத்தான் பெருமாளிடம் எத்தனை பக்தி..! ஒவ்வொரு ஊர்களுக்கும் ஓடி ஓடி அத்தனை பிரபந்தத்தையும் மெய்யுருகி பாடி தொண்டு செய்ததை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். படித்து ரசித்தேன். தொடர்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன
கமலா ஹரிஹரன்.