05 January 2025

21.பாசுரம் - ஏற்ற கலங்கள்

 திருப்பாவை 21




ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப

     மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

     ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

     மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்

ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே

     போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்


நன்றி: Upasana Govindarajan Art 



பொருள்: 

கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங்களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழகாத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.


விளக்கம் -

ஆச்சார்யனையும், பிராட்டியையும் சரணடைந்து அவர்களின் பரிபூர்ண அருள் பெற்ற பின்னரும், ஒரு வைணவ அடியவருக்கு பரமன் திருஉள்ளம் வைத்தால் மட்டுமே முக்தி கைகூடுகிறது. அதை நன்கு உணர்ந்த ஒரு பக்தனின் சரணாகதித்துவம் இப்பாசுரத்தில் போற்றப்பட்டுள்ளது!

இப்பாசுரத்தில் கண்ணனை எழுப்ப கோபியரோடு நப்பின்னையும் சேர்ந்து கொள்கிறாள். பரமனை எழுப்பி கோபியரின் கோரிக்கையை அவனிடம் எடுத்துச் சொல்லி பரிந்துரைக்க சரியான சமயம் வேண்டி தான் காத்திருந்ததை நப்பின்னை கோபியரிடம் தெளிவுபடுத்துகிறாள்!

 நப்பின்னைப் பிராட்டியை எழுப்பின பின்னர், அவள் உணர்ந்து எழுந்து வந்து “தோழிகளே, நான் உங்களில் ஒருத்தியன்றோ? உங்கள் காரியத்தைக் குறையற முடிக்கிறேன்’ நீங்கள் இறையும் வருந்த வேண்டாம்’ 

நாமெல்லாரும் கூடி, கண்ணனின் குண நலன்களில் தோற்றார் தோற்றபடியே சொல்லி, இளையபெருமாளை போல, குணங்களுக்கு தோற்று வந்தோம் என்று சொல்லி, வேண்டி நப்பின்னைப் பிராட்டியுமும் உட்பட அனைவருமாகக் கூடிக் கண்ணன் வீரத்தைச் சொல்லி ஏத்தி, அவனை உணர்த்தும், ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி என்ற பாசுரம்.

இப்பாசுரத்தின்படி, பரமனின் திருவடி நிழலுக்கு வெகு அருகில் கோபியர் வந்து விட்டனர்!

இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

21. ஏற்ற கலங்கள் - ஊற்றமுடையாய் பெரியாய் - பெரும்புறக் கடல் - திருக்கண்ண மங்கை.

















ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய பாசுரமும், பொருள் விளக்கமும் நன்றாக உள்ளது. பாசுரங்கள் பாடி தோழிமாருடன் கண்ணனை நெருங்கி விட்டோம். இனி அவன் அருள் வேண்டி அவன் பாதகமலங்களை சரணடைய வேண்டியதுதான்.!. இறைவன் அனைவரையும் நலமாக வைத்திருக்க வேண்டிக் கொள்வோம். தங்கள் குரல் வழி பாசுரம் கேட்க இனிமையாக உள்ளது. ஓவியம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete