02 January 2025

பாசுரம் 18 - உந்து மதகளிற்றன்

திருப்பாவை 18




 உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்

      நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி  கடை திறவாய்

      வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்

      பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்

செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப

      வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்


நன்றி: Upasana Govindarajan Art


பொருள்:

மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால், அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்

விளக்கம்-

தாயார் பாசுரம்

இந்த பாடல், தாயாருக்கான பாசுரம். இந்த பாடலை தவிர, அங்கண் மாஞாலத்து என்ற இன்னும் ஒரே ஒரு  பாடலில் மட்டும்  தான் ஆண்டாள், எம்பெருமானின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை, ஆனால் நந்தகோபன் மருமகளே  நப்பின்னாய் என்று தாயாரை மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுகிறார், ஆகையால் கண்ணன் திருவுள்ளத்தில் கொண்டுள்ள நப்பின்னைப் பிராட்டியை உணர்த்தும் உந்து மதகளித்தன் என்ற இந்த பாசுரம், தாயார் பாசுரம் எனப்படும். 

கிருஷ்ணாவதாரத்திற்கு நப்பின்னை பிரதான மஹிஷி ஆதலால், எம்பெருமானைப் பற்றும் போது பிராட்டி முன்னாகப் பற்ற வேண்டும் என்ற பிரமாணம் இருப்பதால், இப்போது இவர்கள் நப்பின்னையைப் பற்றுவது.

பெருமிடுக்கைப் பெற்றுள்ள இவர் அஹங்காரம் சிறிதும் இன்றி, தாழ்ந்தார்க்கும் பரம சுலபராக இருக்கும் தன்மையைத் தெரிவிப்பது ‘நந்தகோபாலன், என்ற இவர் பெயர்.  நப்பின்னையை “கும்பர்மகளே!” என்று விளியாது “நந்தகோபலன் மருமகளே!” என விளித்தற்குக் காரணம், நப்பின்னை இளமையே தொடங்கி இங்கே வளர்வதினாலும், புக்ககத்தில் வாழ்வையே பெரிதாக மதித்து ஸ்ரீ நந்தகோபருடைய ஸம்பந்தத்தைத் தனக்குப் பெரும் பெறாக நினைத்து இருந்ததினாலும் இப்படி அழைக்கப்பட்டாள்.

நப்பின்னைக்கு அடையாளம் கூறும் போது, கோழி அழைத்தமையை அடையாளமாகக் கூறுகின்றனர். ’குருக்கத்திப் பந்தலின் மேற் கிடந்து உறங்கின குயிலினங்கள் பல்கால் கூவினமையையும் அடையாளமாகக் கூறுகின்றனர். உன் மைத்துனன் பேர்பாட என்று சொன்னது, எல்லையின்றி அவன் பெற்றுள்ள பல பெயர்களையும் சொல்லி வாயாரப் பாடுவதற்கு தாங்கள் வந்ததாக ஆச்சியர் கூறுகின்றனர்.

இந்த பாடலில் உள்ள எல்லா வரிகளும் தாயாரை பாடுகின்றன. அடுத்த பாசுரமான குத்து விளக்கு எரிய  பாடலில், ஆண்டாள், பெருமாளை பாட ஆரம்பித்து, பாதியில் திரும்ப தாயார் பக்கமே சென்று விடுகிறார்.  அதற்கு அடுத்த பாசுரத்திலும் (முப்பத்து மூவர்) பெருமாளிடம் ஆரம்பித்து, முக்கால் பாசுரம் முடிந்த பின்பு தாயாரிடம்  வந்து, தன்  கோரிக்கையை வைக்கிறார். இந்த பாடல்களுக்கு பின் ஏற்றகலங்கள் என்ற பாடல் முதல் திரும்பவும் எம்பெருமான் பற்றி பாடுகிறார்.

ராமானுஜரின் திருப்பாவை ஈடுபாடும், அவர் அடிக்கடி திருப்பாவைப் பாசுரங்களை உச்சரித்த வண்ணம் இருந்ததும், அவருக்கு "திருப்பாவை ஜீயர்" என்ற பட்டத்தை அவரது ஆச்சார்யனான பெரிய நம்பியிடம் பெற்றுத் தந்தது! இப்பாசுரம் உடையவருக்கு மிகவும் உகந்தது ஆகும். அதனாலேயே, இப்பாசுரத்தை வைணவக் கோயில்களில் இரண்டு தடவை பாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.


இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

18. உந்து மத களிறு - பந்தார் விரலி மைத்துனன் - திருநறையூர்.











ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺

No comments:

Post a Comment