திருப்பாவை 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம், பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.
விளக்கம்-
ஆச்சியர்களின் வேண்டுதல்
சென்ற பாட்டில் மங்களாசாஸனம் (வாழ்த்தி பாடிய) பண்ணின பெண்களை நோக்கிக் கண்ணன், ஒருத்தி மகனாய் என்ற இந்த பாட்டில், ‘பெண்களே, நம்முடைய வெற்றிக்குப் பல்லாண்டு பாடுகை உங்களுக்கு ஸித்தம்; இது கிடக்க, நீங்கள் இந்த குளிரிலே உங்கள் உடலைப் பேணாமல் வருந்தி வந்தீர்களே. உங்களுடைய நெஞ்சில் ஓடுகிறது, வெறும் பறையேயோ, மற்று ஏதேனும் உண்டோ’ என வினவ, அது கேட்ட பெண்கள், பிரானே, உன்னுடைய குணங்களை நாங்கள் பாடிக் கொண்டு வருகையாலே ஒரு வருத்தமும் படாமல் சுகமாக வந்தோம்;
பறை என்று ஒரு வ்யாஜத்தையிட்டு நாங்கள் உன்னையே காண்பதையே பேறாக நினைக்கின்றோம் என்று கூற, எம்பெருமான் நீங்கள் சொன்னபோது நாம் செய்தால், அதுவே சாதனமாக குற்றம் ஆகாதோ என்று கேட்க,
அரிய தொழில்களையும் எளிதாகச் செய்து முடித்த உனக்கு எங்கள் வேண்டுகோளை முடித்து தருவது மிகவும் எளியதே என்றும் எங்களை போன்ற சிலர் நோன்பு நோற்று பெற்றது எங்கள் நோன்புக்கு கிடைத்த வெற்றி என்னும் கருத்து தோன்ற என்று விடை கூறுவதாய்ச் சொல்லும் பாசுரம்.
‘எங்களுக்கு நீ பிறந்துகாட்டவும் வேண்டாம் ; வளர்ந்து காட்டவும் வேண்டாம் ; கொன்று காட்டவும் வேண்டாம், உன்னைக் காட்டினால் போதும்’ என்ற கூறுகிறார்கள். “என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” என்றபடி அடியார்க்கு நீ வேறொன்றைக் கொடுக்காமல், உன்னையே கொடுக்கும் அவனாதலால், நாங்கள் உன்னையே வேண்டி வந்தோம்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
வணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய மார்கழி மாத பாசுர பதிவும் அருமை. பாசுர பாடலை பாடி, அதன் பொருள், மற்றும் விளக்கங்கள் அனைத்தையும் படித்து தெரிந்து கொண்டேன். அழகான ஓவியமும், அருமையான தங்கள் குரல் வழி பாசுர பாடலும், பார்த்து,கேட்டு மகிழ்வடைந்தேன். ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைத்தும் நல்லதாகவே நடக்க இந்த நன்னாளில் எனது பிரார்த்தனைகளும்...
ReplyDelete