07 January 2025

23. பாசுரம் - மாரி மலை முழைஞ்சில்

 திருப்பாவை 23



மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

     சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

     மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்

     கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய

சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த

     காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்




பொருள்:

 மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம். 

விளக்கம்- 

புறப்பாடு காண விழைதல்

மாரி மலை முழைஞ்சில் என்ற இந்த பாடலில் இந்த ஆய்ச்சியர்கள் நப்பின்னை பிராட்டி சம்பந்தமே நமக்கு ஏற்றமாகும் என்று நல்லவர்கள் சொன்னதை மனதில் வைத்து இருந்தும், “சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்” என்று வேறு புகலற்று வந்து விழுந்தோம் என்று நம்மை முன்னே இப்படி சொல்கிறார்கள் என்றதைக் கேட்டு, 

தனக்கு தானே வருந்தி, உடனே கண்ணன் வந்து,

 உணர்ந்தருளி, “பெண்களே மிகவும் வருந்தி இவ்வளவு வரை வந்தீர்களே, உங்கள் இருப்பிடம் தேடி வந்து உங்களை நோக்குகை அன்றோ எனக்குக் கடமை, என் ஸ்வரூபத்தை நீங்கள் நன்கு உணர்வீர்கள் அன்றோ, யாரேனும் பகைவர் கையில் அகப்பட்டு, வருத்தமுற்று, நம்மிடம் வந்து முறையிட்டால், நான் அவர்களின் வருத்த மிகுதியைக் கண்ணுற்று, உங்களுக்கு ஒரு வருத்தம் வருதற்கு முன்னமே வந்து உங்களை காப்பாற்ற வேண்டிய கடமையை உடைய நான் அப்படி முன்பே வரா விட்டாலும் வருத்தம் நேர்ந்தவுடனே ஆகிலும் வந்து உதவி இருக்கலாமே, அப்படியும் வந்து உதவி செய்ய வில்லையே, வருத்தமுற்ற நீங்களே உற்ற வருத்தத்தை என்னிடம் வந்து, முறையிட்டுக் கொள்ளும்வரை நான் இருந்தேனே’, என்று வருந்துகிறார்.


விபீஷணன், தான் ராவணன் தம்பி என்றும் ஆராயாமல் ஏற்றுக்கொள்வாயே என்று போற்றி பாடிய போது, இலங்கையில் ஏற்பட்ட துன்பங்களுக்கும் நாம் தானே காரணம், நீர் இருந்த இடத்திற்கு வந்து உனக்கு அருள் பாலிக்காமல் இருந்தது தன் குறை அன்றோ என்று இராமபிரான் சொன்னதை போலவே உள்ளது என்கிறார். 

மேலும் ஆண்கள் விஷயத்திலேயே இப்படி என்றால் பெண்கள் விஷயத்தில் உங்களை எப்படி இந்த இடம் வரை வைத்தேன் என்று வருந்துவதையும் சொல்கிறார். என்னுடைய இக்குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேணும்’ என்று அஞ்சி நடுங்கிக் கூறும் முறையை உடைய என் ஸ்வரூப ஸ்வபாவங்கள் உங்களுக்குத் தெரிந்தவையே அன்றோ உங்களை நான் இவ்வளவு வருத்தம் உறுத்தியதைப் பற்றி வேண்டுகின்றேன். இனி உங்கள் காரியத்தைக் குறையறத் தலைகட்டித் தருகின்றேன்.

உங்களுக்கு நான் செய்ய வேண்டியது என்ன ?” என்று சொல்ல, அதனைக் கேட்ட ஆய்ச்சியர்கள், “பிரானே! எங்களுடைய மனோரதம் இப்படி ரஹஸ்யமாக விண்ணப்பம் செய்யக் கூடியது அன்று, பெரிய கோஷ்டியாக எழுந்து அருளி இருந்து கேட்டருளவேணும்” என்று புறப்பாடு ஆக வேண்டிய கிரமத்தை விண்ணப்பம் செய்யும் மாரி மலை முழைஞ்சில் என்ற இந்த பாசுரம். 

சிங்கம் பிறக்கும்போதே, “மிருகராஜன்” என்றும் சிறப்புப் பெயரைப் பெற்றதால் சீரியசிங்கம் எனப்பட்டது. கண்ணனும் நரஸிம்ஹாவதாரத்தில் சில பாகம் சிங்கமாகவும் சில பாகம் மானிடராகவும் மட்டும் இன்றி “சிற்றாயர் சிங்கம்” “யசோதை இளம் சிங்கம்” என்றபடி பூர்ண ஸிம்ஹமாக இருப்பதால், சீரிய என்னும் அடைமொழி கொடுக்கபட்டது. 

இவர்கள் எம்பெருமானை வேறு ஒரு பயனுக்கும் இன்றி இவன் இருந்தபடியே அப்படியே ஏற்று கொண்டவர்கள் ஆதலால், தீவிழித்து, சீற்றம், சீரிய சிங்கம், அறிவுற்று என்று இந்த எல்லாவற்றையும் போக்கியமாக கொண்டவர்கள் இவர்கள். புறப்பட்டு என்று சொன்னதற்கு, உன்னுடைய மேன்மைக்கும், சௌரியத்திற்கும், காம்பீரியத்திற்கும் உதாரணமாக சிம்மத்தை சொன்னோம் அன்றி, இரண்ய, இராவணர்கள் முன்னே இருந்தபடி நின்ற சிங்கத்தை சொல்லவில்லை என்கிறார்.

 பூவை பூவண்ணா என்று சொன்னது, பிரிந்தார்க்கு பிழைக்க முடியாத வடிவழகு என்று சொல்வது புரியும். “யாம்வந்த காரியம்” என்று சொன்னது, இப்போதே இவர்கள் வந்த காரியம் இன்னது என்று சொல்லாமல், சற்று நேரம் சென்று விண்ணப்பம் செய்வோம் என்று இருக்கிறார்கள். அதாவது “சிற்றஞ்சிறுகாலே” என்ற பாட்டில் விண்ணப்பம் செய்கிறார்கள். 


இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

23. மாரி மலை முழஞ்சில் - பூவை பூ வண்ணா - திருவரங்கம்.











ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய மார்கழி பதிவு அருமை. பாசுரமும், அதன் பொருள் மற்றும் விளக்கங்களும் படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. ஸ்ரீ ரங்க நாதரை மனங்குளிர தரிசித்துக் கொண்டேன். ஓவியம் மிக அழகாக இருக்கிறது. தங்களின் குரல் வழியாக வந்த பாசுரத்தை கேட்டு ரசித்தேன். தங்களுடைய இவ்வருடத்திய மார்கழி பதிவனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரி. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete