இன்று திருமழிசை ஆழ்வார் அவதார திருநட்சத்திரம் - தையில் மகம் ...
திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!
அன்புடன் அந்தாதி தொண்ணூற்று ஆறு உரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே
எழில் சந்த விருத்தம் நூற்றி இருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்து எழுநூறு நூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே
திருமழிசையாழ்வார்
சிறப்பு : திருமாலின் ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்
திருமாலின் சுடராழியின் (சக்கரம்) அம்சமான, இவர் திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் திருத்தலத்தில் (பூவிருந்தவல்லிக்கு அருகில்) , பார்கவ மகரிஷிக்கும், கனகாங்கிக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.
திருமழிசை ஆழ்வாரின் திருவரசு (பரமபதம் அடைந்த பின் சரமதிருமேனி பள்ளிப்படுத்திய இடம்), திருக்குடந்தையில் ஆதி வராஹப் பெருமாள் கோவிலுக்கு அருகில், சாத்தார வீதியில் உள்ளது.
4700 ஆண்டுகள், இப்பூவுலகில் வாசம் செய்த ஆழ்வார் ஒரு சித்தர்.
தம் யோக சக்தியால் பல நூறு, ஆண்டுகளுக்கு ஒரு முறை மூச்சு விடும் அரியசக்தியைப் பெற்றிருந்தார். அடிக்கடி தவயோகத்தில் அமர்ந்து விடுவாராம். அப்படி ஒரு முறை யோகநிலையில் அமர்ந்திருந்த போது, அந்த இடத்தில் இருந்தவர்கள், அவர் உயிர் பிரிந்து விட்டது என்று கருதி, அந்த இடத்திலேயே, அதே யோகநிலையில், அவரைத் திருப்பள்ளிப் படுத்தி விட்டனர் என்று சொல்லப்படுகிறது.
யோக சக்தியுள்ள ஆழ்வார் பூமிக்கடியில் இன்னும் ஜீவித்துள்ளார் என்று நம்பப்படுகிறது. ஆழ்வார் கூற்றுப்படி அவர், பெருமாள் கல்கி அவதாரம் எடுத்தபின், அந்த அவதாரத்தில் அவரைச் சேவித்துப் பாசுரம் பாடிவிட்டுத்தான் பரமபதம் அடைவாராம்! எனவே அவர் இன்னும் ஜீவித்திருப்பதால் அந்த இடம் திருமழிசை ஆழ்வார் சந்நிதி என்றே அழைக்கப்படுகிறது.
காஞ்சிக்கு அருகில் உள்ள திருமழிசையில் அவதரித்து, காஞ்சி வரதரிடம் ஆழ்ந்த பக்தி செலுத்தி,பல நூறு ஆண்டுகள் கைங்கர்யம் செய்தார் திருமழிசை ஆழ்வார்.
அவர் கும்பகோணத்தில் ஜீவசமாதி அடைந்தார் என்று கேட்ட, வரதர் தம் பக்தரான ஆழ்வாரைக் கடாசிக்க உடனே கும்பகோணத்துக்கு ஓடியே வந்து விட்டாராம். வேகமாக வந்ததால், கருடனையும் ஏவவில்லை; பெருந்தேவித் தாயாரையும் அழைத்து வரவில்லை.
கும்பகோணம் திருமழிசை ஆழ்வார் சந்நிதியில் "பக்திசார வரதர்" கோயில் உள்ளது.
தம் அத்யந்த பக்தர் பெயரை ஏற்று,"பக்தி சார வரதர்" என்னும் திருநாமத்துடன காஞ்சி வரதர் சேவை சாதிக்கிறார்.
திருச்சந்த விருத்தம்
திருச்சந்த விருத்தம்
50
வெண் திரைக் கருங்கடல்* சிவந்துவேவ, முன் ஒர் நாள்,*
திண் திறல் சிலைக்கை வாளி* விட்ட வீரர் சேரும் ஊர்,*
எண் திசைக் கணங்களும்* இறைஞ்சிஆடு தீர்த்த நீர்,*
வண்டு இரைத்த சோலை வேலி* மன்னு சீர் அரங்கமே.
801
51
சரங்களைத் துரந்து* வில் வளைத்து இலங்கை மன்னவன்,*
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த* செல்வர் மன்னு பொன்இடம்,*
பரந்து பொன் நிரந்து நுந்தி* வந்து அலைக்கும் வார்புனல்,*
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த* கோயிலே.
802
52
பொற்றை உற்ற முற்றல் யானை* போர் எதிர்ந்து வந்ததைப்,*
பற்றி உற்று மற்றதன்* மருப்பு ஒசித்த பாகன் ஊர்,*
சிற்றெயிற்று முற்றல் மூங்கில்* மூன்று தண்டர் ஒன்றினர்,*
அற்ற பற்றர் சுற்றி வாழும்* அந்தண் நீர் அரங்கமே.
803
53
மோடியோடு இலச்சையாய* சாபம் எய்தி, முக்கணான்,*
கூடு சேனை மக்களோடு* கொண்டு மண்டி வெஞ்சமத்து-
ஓட* வாணன் ஆயிரம்* கரங்கழித்த ஆதி மால்,*
பீடு கோயில், கூடு நீர்* அரங்கம் என்ற பேரதே.
804
54
இலைத் தலைச் சரம் துரந்து* இலங்கை கட்டழித்தவன்,*
மலைத் தலைப் பிறந்து இழிந்து* வந்து, நுந்து சந்தனம்,*
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த* குங்குமக் குழம்பினோடு,*
அலைத்து ஒழுகு காவிரி* அரங்கம் மேய அண்ணலே.
805
உபதேசரத்தினமாலை
தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் - துய்யமதி
பெற்ற மழிசை பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் (12)
ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!
அனுபிரேம்💙💙
No comments:
Post a Comment