திருப்பாவை -22
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!
விளக்கம் -
கண்ணன் கடாக்ஷம் - சிறிது சிறிதாக கடாக்ஷிக்க வேண்டுதல்
எல்லாரும் துயிலெழுந்து விட்டனர். ஆனால், பரமனாகிய கண்ணபிரான் இன்னும் துயிலெழவில்லை! அடுத்த பாசுரத்தில் தெளிவாக உறக்கம் விட்டு எழுந்து விடுவான்.
இப்பாசுரமும் சரணாகதித்துவத்தையே பறைசாற்றுகிறது. இதுவரை தம் சொத்து, தம் மக்கள், தம் நாடு என்றெல்லாம் அபிமானித்துக் கொண்டிருந்த, மிகுந்த வலிமை வாய்ந்த, சிற்றரசர்களும் பேரரசர்களும் தமது சுயம் அழிந்து கண்ணனிடம் வந்து சேர்ந்தது போல், கோபியரும் தங்களின் கையறு நிலையை முழுமையாக உணர்ந்து, தாங்கள் இதுவரை சம்பாதித்துள்ள தீவினைகளையும், சாபங்களையும் போக்க வல்லவன் கண்ணனே என்று உறுதியாக நம்பி, அவனைச் சரண் அடைகின்றனர். இது நிபந்தனையற்ற பரிபூர்ண சரணாகதி !!!
“நந்த கோபன் மகனே” என்று அழைத்ததற்கு காரணம், அவன் இன்னும் பரமபதத்தில் இருப்பதாகவும், திருபாற்கடலில் இருப்பதாகவும், சக்கரவர்த்தி திருமகனாகவும் இருப்பதாகவும், நந்தகோபர் மகனாக இருப்பதை உணரவில்லை என்கிறார்கள். நீ இந்த திருவாய்ப்பாடியில் நந்தகோபர்க்குப் பிள்ளையாய் பிறந்தது இப்படி கிடந்து உறங்கவோ, எங்கள் குறையைத் தீர்க்கவன்றோ, பிறந்த காரியத்தை நோக்க வேண்டாவோ என்று சொல்வதை கூறும். சத்ருக்கள் உன்னுடைய அம்புக்குத் தோற்று. அவை பிடரியைப் பிடித்துத் தள்ளத் தள்ள வந்தாற் போலே, நாங்கள் அவனுடைய ஸௌந்தரிய ஸௌசீல்யாதி குணங்களை பிடித்திழுக்க வந்தோம் என்று சொல்கிறார்கள். வலிதொலைந்து என்று சொன்னது, வணங்கா முடிகளாக இருப்பதற்கு காரணமான முரட்டுத்தனத்தை முடித்துக் கொள்ளுவது.
ஆற்றாது வந்து என்று சொன்னது இராமபிரான் ப்ரஹமாஸ்த்ரம் தொடுத்து விடும்படி பிராட்டி விஷயத்தில் மஹா அபசாரப்பட்டு, எத்திசையும் உழன்றோடி, எங்கும் புகலற்று, இளைத்து விழுந்த காகம் போல் என்று கொள்ளலாம்.
சென்ற பாட்டில், “மாற்றாருனக்கு வலிதொலைந்து” என்று சொன்னதால் தாங்கள் போக்கற்று வந்ததை கூறினார்கள். அம்கண் மா ஞாலத்து அரசர் என்ற இந்த பாடலில் “இன்னமும் இவர்களுடைய உள் மனத்தில் உள்ளதை அறிய வேண்டும்” என்று கண்ணன் பேசாதே இருக்க,
அது கண்ட ஆய்ச்சியர்கள், “பிரானே! இப்படியோ இன்னும் உன் திருவுள்ளத்தில் ஓடுவது? எங்களுக்கு நீ தான் புகல் ஆகாமல் போனாலும் வேறொரு புகலைத் தேடி ஓடாதபடி நின்ற எங்களை நீ கடாக்ஷித்து அருள வேண்டும் ” என்று பிரார்த்திக்கும் பாசுரம்.
தங்கள் அங்கீகாரம் பெற்றால் திரும்ப செல்ல வேண்டாம் என்று விபீஷணன் சொல்லியது போல, இந்த ஆச்சியர்களும் இவன் அங்கீகாரம் பெற்றால் பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்கிறார்கள்.
ஒரே காலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரை மலர் பாதி மூடியும், பாதி திறந்தும் என்று கொண்டு, கண்ணனுடைய திருக்கண்களுக்கு அந்த நிலைமையை வேண்டுகின்றனர். கண்ணனுடைய திருக்கண்கள். சேதனருடைய குற்றம் குறைகளை நினைத்துப் பாதி மூடியும், அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுப் பாதி திறந்தும் இருக்கும் ஆதலால், அதற்கு இந்த உவமை கூறியது மிகப் பொருந்தும். முதலிலேயே பூர்ண கடாக்ஷம் செய்து அருளினால் தாங்க முடியாதென்று, சிறிது சிறிதாக கடாக்ஷிக்க வேணும் என்கிறார்கள்.
22. அங்கண்மா ஞாலம் - அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து - திருமாலிருஞ் சோலை.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
மார்கழி மாதத்தின் சிறப்பு பதிவுகள் நன்று. தொடர்கிறேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. இன்றைய பாசுரமும், அதன் பொருள், மற்றும் விளக்கங்கள் அனைத்தையும் படித்து தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தங்களுக்கு. நாங்களும் சில கோவில்களுக்கு தெய்வீக பயணமாக சென்று வந்தோம். அதனால் முறையாக காலையில் வர இயலாவிடினும், இப்படி நேரம் அமையும் போது வருகிறேன். தங்கள் மார்கழி பதிவுகளை தொடர்வதே ஒரு தெய்வ அருளாக கருதுகிறேன். இன்றைய ஓவியமும், தங்கள் குரல் வழி பாசுரமும் அருமையாக உள்ளது. இறைவனை தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.