04 January 2025

20.பாசுரம் - முப்பத்து மூவர்

 திருப்பாவை 20






முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

      கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பம் உடையாய்! திறல் உடையாய்!  செற்றார்க்கு

      வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பு அன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

      நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

      இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய்


நன்றி: Upasana Govindarajan Art   

பொருள்: 

முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

விளக்கம் -

சென்ற பாட்டில் “தத்துவமன்று தகவு” என்று ஆய்ச்சியர்கள், தங்கள் ஆற்றாமையினால் வருத்தம் தோன்ற சில குற்றம் கூறினாலும், எம்பெருமானுடைய திருவுள்ளம் அறிந்து, ஏற்ற அவகாசத்தில் விண்ணப்பம் செய்வோம் என்று எண்ணி, நப்பின்னை பேசாதே பள்ளி கொண்டு இருந்தாள்.

 அவளை பற்றினாலும் காரியம் செய்யும் அவன், இவள் தன்னையும் பேச விடாமல் இருந்ததை கண்டு, பேசாது கிடந்தான். 

அவளோடு பரவசப்பட்டுள்ள கண்ணனையும் “நப்பின்னைப் பிராட்டியை குறை கூறுகின்ற பெண்களுக்கு நாம் முகம் காட்ட வேண்டாம்” என்று சீற்றமுற்றிருக்கக் கூடும் என்று சந்தேகித்த ஆய்ச்சியர்கள்,

 மீண்டும் கண்ணனை நோக்கி, அவனுடைய பெருமைகள் பலவற்றையும் பேசித் துயிலெழ வேண்டின போதும், அவன் வாய் திறவாது இருக்க, 

இந்த ஆய்ச்சியர்கள், நப்பின்னையின் பெருமைகளைப் பேசினோமாகில் இவனுடைய சீற்றம் ஒருவாறு தணியும் என நினைத்து அவளுடைய ஆத்ம குணங்களையும் தேஹ குணங்களையும் கூறி ஏத்தி, 

“நங்காய்! எங்கள் மனோரதத்தை முடித்து அருள வேண்டும் என்று முப்பத்து மூவர் என்ற இந்த பாடல் கூறுகிறது. திருவே துயிலெழாய் என்று சொன்னது, பிராட்டியின் திருநாமத்தை நீ வஹிப்பதற்கு இணங்க அவளுடைய குணங்களும் உனக்கு வர வேண்டாமா, பெண்களின் வருத்தம் அறியாதவனை போல உறங்கலமோ, 

அவன் அடியார்க்காகப் பத்து மாதம் பிரிந்து ஊண் உறக்கமற்றுச் சிறையில் அகப்பட்டுப் பட்ட பாடுகளை, நீ ராமாயணத்தில் கேட்டு அறிவாயோ, அவ்வளவு வருத்தமும் நீ படவேண்டா’ எங்களுக்காக இப்போது துயிலெழுந்தால் போதும் என்கிறார்கள். 

விசிறியும் கண்ணாடியும் தரும்படி வேண்டினது மற்ற வேண்டியவை எல்லாவற்றையும் கேட்டதற்கு சமமாகும். இப்போதே என்றது இந்த நொடி தப்பினால் பின்பு ஊராரும் இசைய மாட்டார்கள், நாங்களும் உயிர் வாழ்ந்திருக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். எம்மை என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள்.


இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 


20. முப்பத்து மூவர் - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் - திருப்பாடகம்.









ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺


1 comment:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய பாசுரமும், அதைப்பற்றி நீங்கள் தொகுத்த விதமும் நன்றாக உள்ளது. உங்கள் குரல் வழி பாசுரமும் கேட்டுக் கொண்டேன். ஓவியமும் அழகு. ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம். 🙏 பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete