திருப்பாவை 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா ! எழுந்திராய்,
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்
நன்றி: Upasana Govindarajan Art
பொருள் :
நந்தகோபாலர், யசோதை, பலராமன் ஆகியவர்களை எழுப்பி கண்ணனையும் எழுப்பும் பாடல்.
நந்தகோபாலா! ஆடைகளையே, சோற்றையே தர்மம் செய்கின்ற எம்பெருமானே! எழுந்திரு. யசோதையே! எம்பெருமாட்டியே! பூங்கொம்பு போன்ற எங்களுக்கெல்லாம், குலத்துக்கு உண்டான மங்கள தீபம் போன்றவளே எழுந்திரு.
திருவடியால் கண்ணா! திரிவிக்ரமனாகி ஆகாயத்தையும், பூமியையும் அளந்த சுவாமியே! எழுந்திரு.
பலராமா! தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்ட வீரக்கழல்களை அணிந்த திருவடிகளை உடையவனே! உன் தம்பியான கண்ணனும், நீயும் துயில் நீங்கி எழுவீராக.
விளக்கம் -
நந்தகோபன், யசோதை, பலராமனை எழுப்புதல்
திருவாசல் காப்பவர்களின் அநுமதிகொண்டு உள்ளே புகுந்த ஆய்ச்சியர்கள் ஸ்ரீநந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணனையும், நம்பி மூத்தபிரானையும் (பலராமன்) திருப்பள்ளி உணர்த்தும் அம்பரமே தண்ணீரே என்ற பாசுரம். கண்ணனை ஆய்ச்சியர்கள் களவு காண்பார்கள் என்ற அச்சத்தினால் நந்தகோபர் முன்கட்டில் கிடப்பாராம்.
முதல் கட்டில் நந்தகோபானும், இரண்டாம் கட்டில் யசோதையும், மூன்றாம் காட்டில் கண்ணனும், நான்காம் கட்டில் நம்பி மூத்தபிரானும் (பலராமனும்) பள்ளிக்கொள்வது முறையாதலால், அம்முறையை அடியொற்றி உணர்த்தியவாறு சொல்லப்பட்டது.
ஸ்ரீ நந்தகோபரை எழுந்திராய் என்றும், யசோதையை ‘அறிவுறாய்’ என்று சொல்லியும் திருபள்ளி எழுப்புவது, இவளை நெஞ்சினால் உணர்த்தி எழுப்பினால் அது கண்ணனை பெறுவதற்கு உதவும் என்பதால் ஆகும். இப்படி வேண்டப்பட்ட நந்தகோபனையும், யசோதைப் பிராட்டியும் இவர்கள் உட்புகுவதற்கு இசைந்தமை தோன்ற, மூன்றாங்கட்டில் புகுந்து கண்ணனை உணர்த்துகின்றனர்.
இப்போது உலகளந்த வைபவத்தை எடுத்துக் கூறுகிறார். இவர்கள் இப்படி இரந்து எழுப்ப செய்தேயும், அவன் ‘இவர்கள் நம்பி மூத்த பிரானை எழுப்பாமல் நம்மை எழுப்புகின்றனர் ஆதலால் முறை கெடச் செய்தார்கள் என்று இவர்களுக்கு நாம் முகம் கொடுப்பது தகுதியன்று’ என்று பேசாதே கிடந்தான்.
செம்பொற் கழலடிச் செல்வா! என்று சொல்வதன் மூலம், தனக்குப் பின்பு ஸாக்ஷாத் ஸ்ரீகிருஷ்ணன் பின்னே பிறக்க, முன்னே பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே!” என்ற ஆறாயிரப்படி அர்த்தம் கூறிய பலராமனை எழுப்புகிறார்கள்.
உம்பியும் நீயுமுறங்கேல் என்று சொல்வது, உனக்கு பவ்யனான தம்பியும் அவனுக்காக பவ்யனான நீயும், உறங்காது இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.
எல்லாம் ஒன்றெயான வஸ்துவை தரலாகாதோ என்று, எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள் நாங்கள், என்று சொல்லி, எங்களுக்கு அம்பரமும் தண்ணீரும் சோறுமாயுள்ள கண்ணனை எமக்குத் தந்து எங்களை நன்றாக பார்த்து கொள்ளும் ஸ்வாமி நீயன்றோ என்கிறார்கள்.
குருபரம்பரை சம்பிரதாயப்படி, இப்பாசுரம் எம்பெருமானாரை (எந்தை ராமனுச முனியை) துயிலெழுப்புவதாகச் சொல்வதும் ஒரு ஐதீகம்! ஆண்டாளுக்கு "பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!" என்று வாழ்த்து பாடுவது வழக்கம். அடியவர் வாழ்வை உய்விக்க அவதரித்ததால், அடிவர்க்கு "அம்பரமே தண்ணீரே சோறே" என்று கோதை நாச்சியார் இப்பாசுரத்தில் அவரை போற்றுவதாகக் கொள்ளலாம்!
எம்பெருமானாரே, வைணவ அடியார்க்கு திருமந்திரம், த்வயம், சரம சுலோகம் என்ற மூன்றாகவும் இருப்பதாக அண்ணங்கராச்சார் சுவாமிகள் கூறுவார். அது போலவே, இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் பலராமரும், எம்பெருமானாரும் ஆதிசேஷ அவதாரங்கள் தானே!
இப்பாடல் கூறும் திவ்யதேசம் -
17. அம்பரமே - அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் - சீர்காழி.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
வணக்கம் சகோதரி
ReplyDeleteமார்கழி பதிவு அருமை. இன்றைய கோதை நாச்சியாரின் திருப்பாவை பாசுரத்தை பாடி ரசித்தேன். அதன் பொருள் மற்றும் விளக்கங்களும் படிப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. ஓவியம் அருமை. தங்கள் குரல் வழி கேட்ட பாசுரம் மிக இனிமையாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் என் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி. இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.